சின்னக் கலைவாணர்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17, சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 59.
நேற்று வெள்ளிக்கிழமை வீட்டில் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். சிம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்ட அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், மறைந்த நடிகர் விவேக்கின் இறுதிச்சடங்கு காவல்துறை மரியாதையுடன் இன்று நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதையொட்டி, இன்று பிற்பகலில் சென்னை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் நடிகர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்படுவதற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதில் வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்க, அவரது கலை மற்றும் சமூகச் சேவையை கௌரவிக்கும் வகையில் காவல்துறை மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று மாநில அரசு அறிவித்தது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் வரும் மே 2ஆம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை தேர்தல் நடத்தை விதிகள் மாநிலத்தில் அமலில் உள்ளதால் விவேக்குக்கு காவல்துறை மரியாதை வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு சார்பில் அனுமதி கோரப்பட்டது. அந்த அனுமதி ஏற்கப்பட்டதையடுத்து, விவேக்கின் இறுதி நிகழ்வில் போலீஸ் மரியாதைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.