Enjoy எஞ்சாமி…
- கனகசபேசன் அகிலன் இங்கிலாந்து.
இணைக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போல் தான் எனது வீட்டை அண்மித்த வீதிகள் மாலை நேரங்களில் இருக்கும். நான் எனது நாயை கூட்டிக்கொண்டு நடந்து செல்கையில், இதைப்போல் இருபது இருபத்தைந்து நாய்களையாவது காணுவேன். அன்றொருநாள் நடந்து போகும் போது ‘நாயுடன் நான் இப்படி இலங்கையில், எனது கிராமத்து வீதிகளில், நாயும் கயிறுமாக நடந்து சென்றால் எப்படியிருக்கும்?’ என சிறிதாக கற்பனை செய்து பார்த்தேன்…என் காதில் கேட்காமல் பலர் ‘இவனுக்கு பயித்தியம்…இரண்டு நாய்களுக்கும் வேறை வேலையில்லை…’என்று இப்படி சொற்களை விட்டெறிந்திருப்பார்கள், சிலர் ஒழித்து நின்று கற்களையும் விட்டெறியலாம்…
இங்கிலாந்தில் இதை சாதாரணமாக செய்யும் நான் ஏன் அதையே எனது கிராமத்து வீதிகளில் செய்யலாமா என எண்ணித் தயங்குகிறேன்? இங்கிலாந்து நாய்க்கு மிகவும் தேவையான அந்த நடை ஏன் இலங்கையில் உள்ள நாய்களுக்கு (தெரு நாய்களுக்கல்ல) தேவைப்படுவதில்லை? அந்த விவாதத்தை உங்களிடம் விட்டு விடுகின்றேன்…
நாய், பூனை, நான், நீ என எல்லோரும் சுதந்திரமாக அனுபவித்த இந்தப் பூமியில் இன்று நாய்க்கு நடப்பதற்கென நேரம் குறித்து நடப்பது கவலைக்குரிய விடயம் தான் !
சரி, விடயத்துக்கு வருகின்றேன்…எனக்கு நேரமில்லாத போது எனது மகன் நாயை நடக்க கொண்டு செல்வான், ஒவ்வொரு தடவையும் அவன் வெளியே போகும் போது ‘தம்பி, போனை மறக்காமல் கொண்டு போங்கோ, ஏதாவது பிரச்சனை வந்தால் என்னை கூப்பிடவாவது வசதியாக இருக்கும்’ என்று நான் கூறுவது வழக்கம், அதற்கு அவன் ‘அப்பா, நீங்களென்ன ஸ்ரீலங்கன் நாய்கள் மாதிரி இதை நினைக்கிறீங்களோ, நான் ஈஸியா சமாளிப்பன்’ என்று எதிர்த்து சொல்லிவிட்டு செல்வான். அன்றொருநாள் வெளியே போனவன் ஒரு மணித்தியாலம் ஆகியும் வரவில்லை, நானும் மறந்துவிட்டேன், சிறிது நேரம் கழித்து நாயும் அவனும் வீடு வந்து சேர்ந்தார்கள், அவனது முகம் கோபத்தில் சிவந்திருந்தது – சோபாவில்(ளழகய) சாய்ந்தவன் கன நேரமாக எழுந்திருக்கவேயில்லை, காரணம் கேட்டதற்கு ‘நாயை இணைந்திருந்த கயிறு அறுந்து போனதாகவும், தான் நாயை கையில் காவிக்கொண்டு (25 கிலோ எடையிருக்கும்) அரை மணித்தியாலமாக நடந்து வந்ததால் தனது நாரி மிகவும் நோவதாகவும்’ முறைப்பாடு வைத்தான். எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை…நான் சொன்னது போல் போனை கொண்டு போயிருந்தால் ஏன் இந்தப்பாடு? பல விடயங்கள் எவ்வளவு சொன்னாலும் விளங்காது, தாமாக பட்டு தெளிந்தால் தான் வெளிச்சம் !
யோசித்து பார்த்தேன், அவன் சொன்னது போல ஸ்ரீலங்கன் நாயாக இருந்திருந்தால் அது தானாகவே வீடு வந்து சேர்ந்திருக்கும்…இதை எண்ணிய போது தான் நான் சிறுவனாக இருக்கும் போது நடந்த ஒரு நிகழ்வு ஞாபகம் வந்தது…எனது ஆரம்ப பாடசாலைக்கு பல நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து நடந்து போவது வழக்கம், எனது நாயும் சில நேரங்களில் என்னுடன் நடந்து வரும்…ஒரு நாள் அப்படி போகும் போது வழியில் தெருநாய் ஒன்றுடன் சண்டைபிடித்து, அதை துரத்தி செல்கையில், அருகில் இருந்த தோட்டக்கிணற்றில் தவறி விழுந்துவிட்டது (சில தோட்டக் கிணறுகள் நிலத்தோடு சேர்ந்திருக்கும், கட்டுகள் இருக்காது, மாரி காலங்களில் நீர் நிரம்பியிருக்கும் போது கிணற்றிற்கும் நிலத்திற்கும் வித்தியாசம் தெரியாது,மிகவும் ஆபத்தானவை…இன்றும் அப்படி பல…சிலர் விழுந்து இறந்திருக்கின்றார்கள்). ‘நாயின் கதை முடிந்துவிட்டது’ என்று பதைபதைப்புடன் ஓடிச்சென்று கிணற்றுக்குள் பார்த்தேன், நாய் நீந்திக் கொண்டிருந்தது, ‘பள்ளிக்கூடம் போவதா, நாயுடன் நிற்பதா’ என்ன செய்வதென்று தெரியவில்லை, போன் பண்ணி எவரையும் அழைக்க போனும் இல்லை, நண்பர்களிடம் ‘நான் இண்டைக்கு பள்ளிக்கூடம் வரேல்லை’ என்று சொல்லிவிட்டு, கிணத்தருகில் இருந்துவிட்டேன், நன்றியுள்ள நண்பனை தனியே தவிக்கவிட்டு எப்படிச் செல்வது? இதை பார்த்த, என்னை விட வயது கூடிய சில நண்பர்கள் எனக்கு உதவ வந்தார்கள் – வாளியுடன் இணைந்திருந்த கயிற்றை கழற்றி அதில் உருவுதடம் போட்டு, சிரமப்பட்டு ஒரு மாதிரி நாயை வெளியே எடுத்து வீட்டுக்கு துரத்தி விட்டேன். அதுவும் தானாகவே வீடு சென்று விட்டது…
அந்த காலங்கள் விலங்குகள் மனிதர்கள் எல்லோரும் இயற்கையோடு இணைந்திருந்த காலங்கள், பள்ளிக்கூடம் போகும் போதும் வரும் போதும் கூட இயற்கையை கற்றோம், அதனுடன் பின்னிப் பிணைந்திருந்தோம். இன்று இயற்கையை பற்றி கற்பதற்கென்று பிள்ளைகளை பிரத்தியேகமாக, அதற்கென்று தனியாக பாடசாலைக்கு அனுப்புகின்றார்கள். இயற்கையுடன் இணைந்திருந்த காலம் போய் இப்போது இணையத்தளங்களூடாக இயற்கையை இரசிக்கும் காலம் வந்துவிட்டது…நினைத்த நேரமெல்லாம் நடந்த நேரம் போய், நேரம் ஒதுக்கி நடக்கும் நிலையில் இருக்கின்றோம்…நாய்கள் மட்டுமல்ல, நாமும் தான் !
;
1,476 total views, 6 views today