கண்டிஷன்…கண்டிஷன் ..

எனக்கு வரப்போகிறவர் இப்படித்தான் இருக்கவேண்டும்
எனக் கண்டிஷன் போடும் பெண்கள்!

பிரியா.இராமநாதன்- இலங்கை

“மணல் கயிறு ” திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா ? அதில் வரும் கதாநாயகனான ளு.ஏ சேகர் தனக்கு வரப்போகும் மனைவி எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்ற கண்டிஷன்களுடன் கூடிய ஒரு பட்டியல் வைத்திருப்பார். இப்படி மணமகன்கள் கண்டிஷன் பட்டியலோடு சுற்றிய காலம்மாறி இன்றோ மணப்பெண்கள் தனக்கு வரப்போகும் வாழ்க்கைத்துணை எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு கண்டிஷன்களை அடுக்கத் தொடங்கியிருக்கின்றனர் என்றால் அது மிகையில்லை. இன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு முற்றிலும் மாறியிருக்கிறது . திருமண வலைத்தளங்கள் முதல் தனியார் மேட்ரிமோனியல்வரை எல்லா இடங்களிலும் ஆண்களின் ஜாதகங்கள் கொட்டிக்கிடக்க மணப்பெண்களின் தேவை எக்கச்சக்கம் என்று சொல்லப்படுகிறது.

திருமணத்திற்க்கு தயாராக பெண்கள் இல்லாமலும் இல்லை , அப்படியாயின் இதற்குக் காரணம்தான் என்ன ? மணப்பெண்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துச செல்ல பல்வேறுவகையான தனிப்பட்ட , சமூக காரணங்கள் இருந்தபோதிலும் இன்றைய கட்டுரை ஒரு வித்தியாசமான விடயம்பற்றியே நோக்கவிருக்கிறது. இன்றெல்லாம் பெண்கள் முன்வைக்கும் “டிமாண்டுகள் ” முன்பைக்காட்டிலும் அதிகம் . இன்றைய பெண்கள் தம்முடைய தேர்வுகளுள் மிகவும் உறுதியாகவும் , தெளிவாகவும் இருக்கிறார்கள் . ஏனெனில் முன்பைப்போல ஓர் ஆணைச் சார்ந்திருக்கும் தேவை அனேக விடயங்களில் பெண்களுக்கில்லை. ஆண்களுக்கு இணையாகப் படிக்கிறார்கள் தொழில் புரிகிறார்கள், பொறுப்பான பதவிகளை வகிக்கிறார்கள் , கைநிறைய சம்பளம் வாங்குகிறார்கள் . தமக்கு என்ன தேவை ” என்ற தெளிவு இன்றைய பெண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது . திருமண விடயத்தில் தமக்கு இப்படித்தான் அமைய வேண்டும் என்று முடிவு செய்து பெற்றோரிடமும் ,தரகர்களிடமும் “கன்டிஷன்களாக “ வெளிப்படுத்துகிறார்கள் .

“இவர்தான் இனி நம் வாழ்க்கை , இன்பமோ துன்பமோ எல்லாமும் இனி இவரோடுதான் ” என்று தன வாழ்க்கைத் துணையினை தன் பாதுகாப்பாக நினைக்கும் மனோபாவம் முற்றிலுமாக மாறிவிட்டதெனலாம் . இன்றெல்லாம் தம்முடைய வாழ்க்கையில் “செக்கியூரிட்டி ” என்ற ஒன்றை ஏற்படுத்திக்கொண்டுதான் பல பெண்கள் திருமணம் செய்துகொள்ளவே தீர்மானிக்கிறார்கள் . நல்ல உத்தியோகம் , படிப்பு ,சொந்தத் தொழில் , சொந்த வீடு என்று இந்த செக்கியூரிட்டி என்ற விடயம் அவரவர்க்கேற்ப மாறுபடுகிறது . பெரும்பாலான பெண்கள் திருமணத்தை தள்ளிப்போடச் சொல்லும் காரணமும் இந்த “செக்கியூரிட்டி ” என்ற ஒன்றுதான் என்று சொல்லலாம் . மேலும் ஒரு பெண் தனக்கு இணையாகவோ , தன்னைவிட அதிகமாக படித்த , தன்னைவிட அதிகம் சம்பளம் வாங்குகிற , உயர் பதவி வகிக்கிற ஒரு ஆணையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதும் சகஜமாகியுள்ளது . அதுமட்டுமன்றி ஒத்த சிந்தனை உள்ளவர்களாக இருப்பதும் அவசியம் என்று எதிர்பார்க்கவும் செய்கிறார்கள் .

தன்னுடைய திருமண வாழ்வில் தனக்கென்று ஒரு தனித்துவமான இடம் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்றைய பெண்களிடம் அதிகம் . கணவனின் துணையாக அவன் நிழலில் காணாமல் போய்விடும் ஆபத்தை நினைத்து அச்சப்படுகிரவர்கள் ஏராளம். இரு உள்ளங்களின் கௌரவமான ஒப்பந்தம்தான் திருமணம் என்பதில் தெளிவாக இருக்கும் பெண்கள் , கணவனாக வருபவன் எல்லாவிடயங்களிலுமே தம்மை அடக்கியாள முட்படுவானோ என்ற அச்சத்தில் யோசிப்பதும்கூட திருமணங்களை நொண்டிச் சாக்குச் சொல்லி தள்ளிப்போடவும் காரணமாகிறது . தன்னைவிட ஓரிரண்டு வயது அதிகமான அல்லது சம வயதுடைய ஆண்களை பெண்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவதும் இந்தக் காரணத்தால்தான். ஏனெனில் அதிக வயது இடைவெளி ஒரு ஆண் தன்னை கட்டுப்படுத்த ,ஆதிக்கம் செலுத்த அடிகோலும் என்ற எச்சரிக்கையுணர்வு .

சரி திருமணத்துக்கு ஏன் இவ்வளவு கண்டிசன்கள் ? இதற்க்கான முக்கிய காரணம் பெண்களுக்கு இன்று ஏற்ப்பட்டிருக்கும் உலக அனுபவம் . பல பெண்கள் உணர்ச்சிவசப்பட்டோ , பெற்றோர் வற்புறுத்தலாலோ திருமணம் செய்துகொண்டு மனக்குறையுடன் வாழ்வதை பார்க்கிறோம் . ஒத்த சிந்தனை இல்லாமல் , ஆதிக்க மனோபாவத்தை சகித்துக்கொள்ளாமல் விவாகரத்துவரை சென்றுவிட்டால் என்னாவது என்ற பயம் அடிமனதில் இருந்துகொண்டேயிருக்கும் . இதனாலேயே தன்னுடைய “தேர்வு ” சரியாக இருக்கவேண்டும் என்று நிறைய கவனம் எடுக்கிறார்கள் . இந்த அதீத எச்சரிக்கையுணர்வே “கன்டிஷன்களாக” வெளிப்படுகின்றன என்பதுதான் உண்மை . சக அலுவலக தோழிகளின் அல்லது உறவுகளின் வாழ்க்கையில் ஏற்ப்படும் திருமணப் பிரச்சினைகளை , சிக்கல்களைப் பார்த்தே திருமணத்தை தள்ளிப்போடும் அல்லது தவிர்க்கும் பெண்களும் இல்லாமல் இல்லை . இங்கே இன்னுமோர் முக்கியமான விடயம்தனையும் குறிப்பிட விரும்புகிறேன் , பெண்களுக்கு திருமணம் போன்ற விடயங்களில் முடிவெடுக்கத் தெரியாது என்ற எண்ணம் இன்னுமே பல பெற்றோரிடம் இருந்துவருகிறது . பெண்களின் இதுபோன்ற கண்டிசன்கள் , எதிர்பார்ப்புக்கள் வீண் குழப்பத்தினையே ஏற்ப்படுத்தும் என்ற கருத்து பெற்றோரிடம் இருக்கிறது . அவர்களைப் பொருத்தவரையில் பெண்களுக்கு விபரம் போதாது , தங்கள் மகள்கள் இன்னுமே சின்னக் குழந்தைகள்தான் என்ற எண்ணம் இருக்கிறது . ஆனால் யதார்த்தநிலை அப்படியல்ல . பல பெண்கள் மிகத் துணிவுடன் தங்கள் கணவர்களை தேர்வு செய்கிறார்கள் . அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் சந்தோசமான வாழ்வு . இந்த சந்தோசத்துக்கு எதுவெல்லாம் இடையூறாக இருக்கப்போகிறது என்பதை யூகிக்கிரார்களோ அதையெல்லாம் விளக்கவே முயட்சிக்கிறார்கள். இதுவும் காலமாற்றத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றே . சுய சிந்தனையும் , தொலைநோக்கும் பார்வையும் , எதிர்காலம் பற்றிய தெளிவுமே இந்த கண்டிசங்களின் பின்னிருக்கும் யதார்த்தம் . இந்த மாற்றத்தினை மகன்களைப் பெற்றவர்கள் ஏற்றுக்கொண்டார்களோ இல்லையோ மகள்களைப் பெற்றவர்கள் புரிந்துகொண்ட தங்கள் பெண்களுக்கு உறுதுணையாக நிற்கிறார்கள் . பெரும்பாலான பெற்றோர் தம்முடைய பெண்களையே சார்ந்திருக்கவேண்டிய சூழ்நிலையும் இந்த புரிந்துணர்வுக்கு காரணமாகவும் இருக்கலாம் .

என்னதான் நேர்மையான சில கண்டிசன்களும் , எதிர்பார்ப்புக்களும் இருந்தாலுமே இதிலும் இழக்க வேண்டிய சில விடயங்கள் இல்லாமலும் இல்லை . தனிமையுணர்வு என்ற ஒன்றைத்தாண்டி , பெண்ணைப் பெற்றோருக்கும் வயது ஏறிக்கொண்டே போவதால் அப்பெற்றோர் 70 வயது தாண்டி உடல்நலக் குறைவால் அவதியுறும்போது , பெற்றோரின் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்கவேண்டிய திருமணங்களை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாகதானே நடத்திக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது . படிக்கவைத்து ஆளாக்கி நிம்மதி பெருமூச்சி விடவேண்டிய நேரத்தில் அறுபது வயதைக்கடந்த பெற்றோர் மகளின் திருமணத் தடையால் ஒருவித குற்ற உணர்விற்கு ஆளாகி உறவினர்களையும் , நண்பர்களையும் ஒதுக்கி தனிமைப்பட்டு ஒருவித மனவுளைச்சலுக்கு ஆளாகின்றனர் . இதனால் தம் பெற்றோர் நிம்மதியான வயோதிக வாழ்க்கையினை அனுபவிப்பதைக் கண்ணுறும் வாய்ப்பை இந்தப் பெண்கள் இழக்கின்றனர். உடல்வலு இருக்கும் காலத்திலேயே தங்கள் பேரக்குழந்தைகளையும் வளர்க்கும் , பராமரிக்கும் நிலையினை எய்தவேண்டும் என்று எதிர்பார்க்கும் இந்த தாத்தா பாட்டிகளுக்கு தங்கள் மகள்களின் பிந்திய திருமணங்களால் தங்கள் பேரக் குழந்தைகளை தூக்கிக் கொஞ்சக்கூட வலு விழந்து போய் விடுகிறது . பிந்திய திருமணம் .. தம்பதிகள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கிறார்களோ இல்லையோ , இருவரும் தனித்த பயணங்கள் , மற்றும் வாழ்க்கை முறைமைகளை அனுபவிக்கிறார்களோ இல்லையோ , வயது ஏறுகிறதே என்ற பதட்டத்தில் அவசரஅவசரமாக முதல் குழந்தையை பெற்றுக்கொள்வார்கள் , அதன்பின் ? எங்கே , 40வயது தாண்டிவிட்டால் குழந்தைபிறப்பு தள்ளிப்போய்விடுமோ என்ற ஒருவித அச்சத்தில் மீண்டும் அவசரஅவசரமாக அடுத்த குழந்தை பற்றிய சித்தனை மனதுக்குள் ஓடத்துவங்கும் ! இருவருமே சில தனிப்பட்ட சந்தோசங்களை இங்கே பறிகொடுக்க நேருவதுடன், உடல் ரீதியாகவும் பெண் பாதிக்கப்படுகிறாள் . அதுமட்டுமா ? கருத்தரிக்கவேண்டிய வயது தாண்டிவிடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க கருத்தரிப்பு மையம் , மருத்துவர் , பரிசோதனைகள் என்று அலைச்சலுக்கு அலைச்சல் , மனவுளைச்சல் , செலவு என்று அதன்பின்னரும் தொடரும் ஏராளமான துன்பங்கள் .

ஆக, காலமாற்றம் பெண்களின் மனதில் எதிர்பார்ப்புக்களையும், அந்த எதிர்பார்ப்புக்கள் கன்டிஷன்களையும் ஏற்ப்படுத்திவருவதை நாம் தவறு என்று எடுத்த எடுப்பில் கூறிவிட இயலாதுதான் என்றாலும் , அந்த கண்டிஷன்கள் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்புக்களை ஏற்ப்படுத்திவிடாது எல்லாவற்றையுமே சமப்படுத்திக்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கிறோம் என்பதையும் இங்கே குறிப்பட விரும்புகிறேன் .

1,046 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *