மணிவிழாக்காணும் சிவபூமி மைந்தன் கலாநிதி ஆறு.திருமுருகன் !
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல!!!
வெற்றிமணி மு.க.சு.சிவகுமாரன் – யேர்மனி
தாய்வீடான அன்னை சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் ஆன்மீக உள்ளத்தை பண்படுத்தியதைச் சொல்லவா! சிவபூமி கொடுத்த நல் வரங்களைச் சொல்லவா! நாய்களுக்கும் சரணாலயம் அமைத்த ஜீவகாருண்யத்தை சொல்லவா! ஆறு போல் ஓடும் ஆறு.திருமுருகனின் அழகிய நீண்ட சொற்பொழிவுப் பயணங்களைச் சொல்லவா!
திரு முருகா! எதனைச் சொன்னாலும் மலைபோல் உன்பணியில் ஏதும் ஒன்றேனும் சொல்லாது விடும் அளவிற்கு உன்பணிகள் குவிந்துள்ளது.
புள்ளிபோட்டு குறித்த பணிமுடிக்கும் உன் ஆற்றலுக்கு இல்லாத ஒன்று முற்றுப் புள்ளி மட்டும்தான்.
சிவபூமி முதியோர் இல்லம். சிறுவர் மனவிருத்திப்பாடசாலை, திருவாசக அரண்மனை,அரும் பெரும் காட்சியகம். கந்தபுராண ஆச்சிரமம், அபயம் இலவச மருத்துவ சேவை,சிவபூமி கோசாலை, இப்படி தொடரும் உன் சேவை அதனால்தான் சொன்னேன் உனக்கு முற்றுப்புள்ளி கிடையாது என்று.
வடக்கு நோக்கி மட்டுமல்ல,கிழக்கிலும் உதிக்கும் உன் பணிகள். நீ பிரதேசங்களுக்கு அப்பாற்பட்டவன். அரசியல் சாயம் பூசாத திரு நீறு அணிந்த தூய நெற்றிக்கும் சேவைக்கும் சொந்தக்காரன். அறப்பணியாளன் ஆறு திருமுருகன்.
அறுபது வயது யாவருக்கும் வருவதுதான், சிலருக்குத்தான் மணிவிழாவாக மணியோசை கேட்கும்.
சிவபூமி மைந்தனே எடுத்தகாரியத்தை அவனருளோடு செய்து முடிக்கும் வெற்றி வேலனே! செஞ்சொற் செல்வரே ஆறு.திருமுருகனே!
வெற்றிமணி பத்திரிகையும், சிவத்தமிழ் சஞ்சிகையும் இணைந்து, உங்கள் பணிகள் என்றும் தொடரவும், வாழ்வு அருள் ஒளியால் பிரகாசம் பெற்றிடவும், மணிவிழாப் பொழுதினில்; வாழ்த்தி வணங்குகின்றது.
உங்களை பெற்றவர்கள் மட்டும் அல்ல, எங்களைப் பெற்ற சிவபூமியும் உங்களால் பெரும் பேறு பெற்றது என்பதும் உண்மையே!
அன்புடன்
மு.க.சு.சிவகுமாரன்
பிரதம ஆசிரியர்: வெற்றிமணி-சிவத்தமிழ்- யேர்மனி.20.05.2021
1,287 total views, 6 views today