அழகு !இது,எங்கு நிர்ணயமாகிறது!

“அழகு”இது பரந்து பட்ட இந்த உலகத்தில் இயற்கையாக விரிந்து கிடக்கிறது.எல்லோரும் தாங்கள் விரும்பும் அழகோடு மெய்மறந்து விடுகிறார்கள்.அது நிரந்தரமா?இல்லையா என்பது அவர்களுக்கு அப்போது தெரிவதில்லை.

வாலிபப் பருவத்தில் ஆணோ பெண்ணோ அழகைத் தேடுவதில் ஆர்வம் கொள்வார்கள்.இளவயதுச் சினிமா நடிக நடிகைகளின் படங்களை வைத்து ஆராதிக்கிறார்கள்.கனவைக்கண்டு நிஜமென அலைவது போல்.இதற்குள் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். இந்த சினிமா நடிகர்கள் எல்லோரும் உண்மையில் அழகானவர்களா? எதுவரை இவர்கள் அழகானவர்கள். மாறி,மாறிவரும் நடிகைகள்.இதற்குள் என்றும் அடங்குவார்களா?அப்படி என்றால் எப்போதும் ஒரு நடிகையல்லவா இருந்திருக்க வேண்டும்.

அழகென்றால் என்னவென்று என் நண்பனுக்கும் ஒரு சந்தேகம் வந்திருக்க வேணும்,ஒருநாள்அவனும் நானும் சந்தித்த போது இதைப்பற்றி அலசியிருக்கிறோம்.
ரீஆர் ராஜகுமாரி பானுமதி,பத்மினி,சாவித்திரி,சரோஜாதேவி,தேவிகா என்று எங்கள் காலத்து நடிகைகளில் இருந்து இந்த ஆய்வு நடந்தது. இடையில் புதிதாக வந்த நயந்தராக்களும் அடங்கினார்கள்.

இந்த உலகம் அழகானது. இதற்குள் அடங்கி இருக்கும் எல்லாமே அழகு.காடழகு,களனி அழகு,வளைந்தோடும் நதி அழகு,மலர் அழகு,மரங்கள் அழகு.பறவைகள்,மிருகங்கள் என்று அழகுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனாலும் எப்போதும் ஒன்றை ஒன்று மிஞ்சிக்கொண்டே போகும். இயற்கையை விடுத்து ஏனையவற்றை மறந்து மனிதருக்குள் தேடுவோம் என்று இருவருமே தேடினோம்.இந்தத் தேடல் எல்லையில்லாமல் விரிந்து கொண்டே போனது. உண்மையும் அதுதான்.இந்தப் பிரபஞ்சத்தில் மனிதரின் வாழ்க்கை மிக முக்கியமானது. அவ்வாறேதான் நாங்கள் நினைக்கிறோம்.

அடுத்த உயிர்களைப்பற்றி நமக்கென்ன கவலை.எல்லாமே மனிதர்களுக்காகப் படைக்கப்பட்டவை.அப்படித்தான் எங்களின் நினைவுகள்.சில சமயங்களும் சொல்லுகின்றன. ஒரு பெண் அழகாக இருக்கிறாள் என்றால் எல்லோர் கண்களும் அவள் மீதுதான். அதில் தப்பேதும்.இல்லை “அழகை யாரும் ரசித்திடலாம் பொதுவுடமை”அதையே காரணமாக வைத்து சிதைத்து அழிப்பது அழகானதா?

திருமணத்திற்குக் காத்திருக்கும் சில ஆணோ,பெண்ணோ அழகற்றவர்களாகக் கருதப்பட்டாலும் காலப்போக்கில் அவர்களுக்கும் திருமணப் பந்தம் ஏற்படுகிறது.ஒருவரால் நிராகரிக்கப் படுகிறவர்கள் மற்றவர்களுக்கு அழகாகத் தெரிகிறார்கள். அப்படியான சிலர் அவர்களது குடும்ப வாழ்க்கையில் இன்பத்தைக் கண்டு சமுதாயத்தில் உதாரண புருசர்களாக வாழ்ந்து மறைகிறார்கள்.

இந்த இடங்களில் உணர்வு,அன்பு,போதுமென்ற மனம் அத்தனையும் அழகானதாக இருக்கிறது. நல்ல நண்பர்கள் இருவர் கருத்து வேறுபாட்டால் விரோதியாகும் பட்சத்தில் அழகற்றவர்கள் போல் மாறிவிடுகிறார்கள். நட்போடு இருக்கும் காலத்தில் அழகானவர்களாகத் தோன்றியவர்கள் நட்பிழந்த போது அழகற்றவர்களாகி விடுகிறாரகள். ஒருவரை ஒருவர் அருவருப்பாகப் பார்க்கிறார்கள்.இங்கே தான் நட்பே அழகான தாகிறது.
இளவயதுக்காதல் வெறும் கவர்ச்சியால் வருகிறது.காதலிக்கிற காலத்தில் ஒருவரை ஒருவர் பிரிய மனமின்றி எப்போதும் கற்பனையிலே வாழ்க்கையை நடாத்து வார்கள்.பசியில்லை,தூக்கமில்லை அந்தரத்தில் மிதப்பார்கள். அவர்களது அவையகங்கள் எல்லாமே யாருக்குமே இல்லாத அழகாக இருக்குமாம் இது அவர்களின் நினைப்பு.எப்போதுமே அருகில் இருக்கவேண்டும் போல் தோன்றும்.

“கொஞ்ச நேரம் பிரிந்தபோதும் எங்கேயென்று தேடும்.என்று கவிஞன் அழகாகக் கூறுகிறான். இவர்களில் சிலர் வாழ்நாள் பூராகவும் மகிழ்வோடு வாழ்ந்து விடுகிறார்கள்.பலருக்கு “மோகம் முப்பது ஆசை அறுவது”என்றாகி விடுகிறது. இதில் முன்னையவர்கள் வாழ்க்கையில் வெற்றிகண்டு வாழ்க்கையை அழகாக்கி விடுகிறார்கள். அடுத்தவர் அசிங்க மாக்கி விடுகிறார்கள்.
அருவருப்பாய் பார்க்கப் படும் பறவை மிருகங்கள் கூட அன்பினால் அழகாகிவிடுகின்றன.குரங்கு,பாம்புகள் எல்லாமே.

எங்கள் ஊரில் பொன்னப்பா,பொன்னாச்சி என்ற வயது முதிர்ந்த தம்பதிகள்.அவருக்கு வயது அப்போது நூற்றிப் பத்து பொன்னாச்சிக்கு நூற்றி ஐந்து. இருவரும் தாம் உழைத்தே வாழ்க்கையை இன்பமாக்கி வாழ்ந்தார்கள்.ஊரார் கண்படும் அளவிற்கு அன்பை சுமந்த அழகான தம்பதிகள். எதிர்பாராமல் வந்த விசக்காய்ச்சலால் பொன்னப்பா போய்ச் சேர்ந்திற்றார். பொன்னாச்சி உடைந்தே போனார்.ஒவ்வொருநாளும் காலையில் ,வாசலில் இருந்து என்ர ராசா!என்ர போக்காளனே என்னைவிட்டு போய்விட்டாயே ஐயா என்று ஒப்பாரி வைத்து குளறுவா.அவவின் அந்த ஒப்பாரியைக் கேட்டு ஊரே அழுதது.ஒன்றைவிட்டுப் பிரியாத அன்றில் பறவை போல் வாழ்ந்த தம்பதிகள் இப்போதும் கண்ணுக்குள் நிற்கிறார்கள்.
பொன்னப்பா போய்ச்சேர்ந்து இரண்டாவது வருசம்.மில்லுக்குப் போய் நெல்லுக்குத்தி அரிசிக் கடகத்தைத் தலையில் தூக்கி வரும்போது கார் மோதிக் காலமானார். இவர்கள் எங்களூரில் வரலாறு படைத்தவர்கள். இவர்கள் கவர்ச்சிக்கான ஒப்பனை இல்லாத அழகர்கள்.

“வெள்ளை நிற மல்லிகையோ
வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது”
சுவாமி விபுலானந்தர்.
அவர் கூறியது போல் மெய்யான அன்பே அழகானது.
இது அவர் கூறிய இறைவனுக்கு மட்டுமல்லாது இரண்டு உள்ளங்கள் இணையும் வாழ்க்கைக்கும் இது பொருந்தும்..அழகான வாழ்க்கை வாழ்ந்த பலரின் சிறப்பே இதற்கு உதாரணமாகும்.

-பொன்.புத்திசிகாமணி,யேர்மனி.

1,049 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *