தனக்குத் தானே!

சம்பவம் (11)

கே.எஸ்.சுதாகர்

சமீபத்தில் சண்முகசுந்தரம் என்பவர் தொலைபேசியில் என்னுடன் பேசினார்.

“தம்பி… எனக்கொரு உதவி செய்யவேண்டும். உங்களுக்கு எங்கடை முதியோர் சங்க செயலாளர் நந்தகுமாரைத் தெரியும் என்று நினைக்கின்றேன். அவர்தான் உங்களிடம் கேட்டால், நீங்கள் செய்து தருவீர்கள் என்று சொன்னார். என்னுடைய பெயர் சண்முகசுந்தரம். எனக்கு நீங்கள் தமிழில் ஒரு கடிதம் தட்டச்சுச் செய்து தரவேண்டும்.”

“நந்தகுமாரா… அவர் எனக்கு வேண்டியவராயிற்றே! என்னவென்று சொல்லுங்கள்? கட்டாயம் செய்து தருகின்றேன்.”

“நீங்கள் தட்டச்சு செய்யவேண்டியதை நான் தபாலில் அனுப்பி வைக்கின்றேன். நீங்கள் தட்டச்சுச் செய்தவுடன் என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடுங்கள்.”

“நல்லது. அனுப்பி வையுங்கள்.”

“நன்றி தம்பி.”
°
இரண்டு நாட்களில் ஒரு கசங்கிய பேப்பரில் அந்தக் கடிதம் வந்து சேர்ந்தது. கடிதத்தில் இருந்தது இதுதான்:

கந்தையா சண்முகசுந்தரம் என்பவர், முருகன் கோவில் சபையின் தலைவராக பத்து ஆண்டுகள் இருந்து தமிழ், சமயம், கலை ஆகியவற்றுக்கு மிகவும் சிறந்த சேவை ஆற்றி வருகின்றார்.

இவர் தமிழில் பாண்டித்தியம் இல்லாத மாணவர்களுக்காக தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களின் சாரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இவரின் சேவையால் பல மாணவர்கள் தமிழில் ஆர்வம் கொள்கிறார்கள்.

இவர் பல பத்திரிகைகள் சஞ்சிகைகளுக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதுகிறார்.

இவர் தமிழுக்கும், சமயத்துக்கும் செய்த சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்திக் கௌரவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

அவர் எழுதிய கடிதத்தை தட்டச்சு செய்யும்போது எனக்கொரு சந்தேகம் எழுந்தது. என்னுடன் கதைத்தவரின் பெயர் சண்முகசுந்தரம் என்று சொன்னதாக நினைவு. அப்படியென்றால் அவர் தனக்குத் தானே பொன்னாடை போர்த்திக் கௌரவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றாரா?

கடிதத்தின் கீழே அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி இருந்தது. அவருக்கான கடிதத்தை நான் மின்னஞ்சல் செய்துவிட்டு, நந்தகுமாருடன் தொடர்பு கொண்டேன்.

“என்ன செய்யுறது தம்பி! இந்த நாளிலை சமூகத்துக்கு ஒண்டுமே செய்யாமல் ஏ, பி க்கு பொன்னாடை போர்க்கின்றார். பின்னர் பி, ஏ க்கு பன்னாடை போர்க்கின்றார். இப்பிடியே மாறி மாறி ஆளாளுக்குப் போத்துக்கொண்டும், பட்டங்கள் குடுத்துக் கொண்டும் திரியினம். சண்முகசுந்தரம் தன் வாழ்நாள் முழுவதும் சமூகத்துக்கு சேவை செய்து செய்தே நோயாளியாகிப் போனார். பாவம் மனிசன்… தனக்குத்தானே கடிதம் எழுதுகின்றார். நீங்கள் கடிதத்தை அனுப்புங்கோ. நான் கையெழுத்துப் போட்டு அனுப்பி வைக்கின்றேன். அப்பிடியெண்டால்தானே பிறகு அந்தாளும் எனக்குக் கடிதம் எழுதும்” என்றார் நந்தகுமார்.

நந்தகுமார் ஒரு கணிதப் பேராசிரியர். ஏ பி எண்டு சொல்லி விஷயத்தை நாசூக்காகச் சொல்லி வைத்தார்.

942 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *