சாப்பாட்டுக் கலைஞர்கள்

“சாப்பாட்டுடன் ஒருதலைக்காதல்” என்ற பேச்சுக்கே அங்கு இடமிருக்காது.
-ஜூட் பிரகாஷ்
மெல்பேர்ண்

சமையல் என்பது கலை, அதுவும் ஒரு அற்புதமான கலை.
சமைத்ததை பரிமாறுவதும் ஒரு கலை, அதுவும் ஒரு அழகியல் கலைதான்.

சமைப்பது எப்படி கலை ஆகுமோ, அதை பரிமாறுவது எப்படி கலையாகுமோ, அதேபோல் சமைத்ததை, பரிமாறியதை, சாப்பிடுவதும் ஒரு கலைதான். அழகாகச் சாப்பிட தெரிந்தவர்களும் கலைஞர்கள் தான். சாப்பிடத் தெரிந்தவர்கள் இருப்பதால் தான்,ஆனானப்பட்ட சமையல் வல்லுனர்களுக்கு வாழ்க்கையே அமைகிறது.

சாப்பிட தெரிந்தவன் இல்லாவிட்டால் சமையல் கலைஞர்களிற்கு மாட்சிமையும் இல்லை, சமைத்ததை பரிமாறத் தெரிந்தவனுக்கு மகிமையும் இல்லை. இவருக்கு சமைக்கத் தெரியாது, அவருக்கு தேத்தண்ணியே போடத் தெரியாது என்று யாரையும் குற்றம் குறை சொல்லக்கூடாது, அது அழகல்ல, நியாயமுமில்லை, தர்மமும் இல்லை.

சமைக்கத் தெரியாட்டியும் பரவாயில்லை, எவ்வளவு வடிவாக சாப்பிடுவார் தெரியுமா என்று புளங்காகிதம் அடைய வேண்டும், பெருமைப்பட வேண்டும், தலையில் ஏற்றி வைத்துக் கொண்டாடி மகிழ வேண்டும். சாப்பிடத் தெரிந்த கலைஞர்களை பார்த்தீங்கள் என்றால், இதை இப்படி, அதை அதோடு தான் சாப்பிட வேண்டும் என்ற வரைவிலக்கணம் அறிந்தவர்களாக இருப்பார்கள்.

கண்டதையும் கண்டதோடு கலந்து சாப்பிடவோ, கண்டதையும் நிண்டதையும் சாப்பிடவோ, மறுத்து உறுதியாக எதிர்த்து நிற்கும் மனத் தைரியம் உள்ளவர்காளாக சாப்பாட்டுக் கலைஞர்கள் வலம் வருவார்கள்.
எதை எப்படி எவ்வாறு சாப்பிடுவது என்பது சாப்பாட்டுக் கலைஞர்களிற்கு மட்டுமே தெரிந்த ஒரு அற்புதமான வித்தை என்று கூட சொல்லலாம்.

அந்த சாப்பாட்டு வித்தை, பிறப்பிலேயே அவர்களிற்கு வந்து அமைந்து விடுகிறதா, இல்லை வளர்ந்து வரும் போது வரும் பழக்கமா என்பது பற்றி அறிவதற்கான ஆய்வுகள் இப்பொழுது தான் அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கிறதாம். இடியப்பத்தை சொதியோடு பிசைந்து விளாசிவிட்டு, விரலை சூப்புபவர்கள் எல்லாம் சாப்பாட்டு கலைஞன் தான்டாப்பா.

அது மட்டுமா..

அடுப்பில் கொதிக்கும் சட்டிக்குள் அகப்பையை விட்டு, ஆட்டுக் கறித் துண்டை நைஸாக பொறுக்கி, உள்ளங்கையில் இதமாக இறக்கி, பக்கென்று சுடச்சுட வாய்க்குள் போட்டு விட்டு, உள்ளங்கையில் மிஞ்சிய குழம்பையும் நக்குறவன் எல்லோரும் சாப்பாட்டு கலைஞர் சங்கத்தில் ஆயுட்கால அங்கத்தவர்கள் தான்யா.

அதேபோல..

பட்டரும் சீனியும் முட்டையும் போட்டு கலந்து அடித்த கேக் செய்யும் மாவை, கேக் அடித்த சட்டியில் இருந்து விரலால் தொட்டு நக்கிச் சாப்பிடும் வல்லமை படைத்தவர்கள் இந்த சமையல் கலைஞர்கள்.
சாப்பாட்டு கலைஞன் என்றார் விரல் சூப்புறவன், கறிச் சட்டி நக்குறவன் என்று மட்டும் நீங்கள் தயவுசெய்து குறைவாக எடை போட்டு விடக் கூடாது. நாடு நகரங்களிற்கு பயணிக்கும் போது, அந்தந்த நாட்டு உணவுகளை நாடி ஓடிச் சென்று சாப்பிட்டு மகிழ்பவனும் சாப்பாட்டு கலைஞனே.

சைனீஸ் நூடில்ஸை chop stick ஆலும், ரத்தமோடும் steak ஐ முள்ளுக் கரண்டாலும் கத்தியாலும் சாப்பிடோணும் என்ற அறிவு சாப்பாட்டு கலைஞனிற்கு நல்லாவே தெரியும். வாழை இலையில் எப்படி வழித்து துடைத்து சாப்பிடோணும் என்பதையும் சாப்பாட்டுக் கலைஞர்கள் தெரிந்தே வைத்திருப்பார்கள்.

சாப்பாட்டை சுடச்சுட சாப்பிட வேண்டும், என்று சாப்பாட்டுக் கலைஞர்கள் எப்பொழுதும் அடம்பிடிப்பார்கள். சூடாறிப் போன சாப்பாட்டை மீண்டும் சுட வைத்து சாப்பிடுவது கொடுமையிலும் கொடுமை, மகா கொடுமை என்று அவர்கள் தலையிலடித்துக் குழறுவார்கள். சாப்பாட்டுக் கலைஞர்களிற்கு பழைய சாப்பாடு என்றால் கண்ணிலும் காட்டேலாது. அதுவும் ப்ரிட்ஜில் வைத்து உறைந்து போயிருக்கும் மூன்று, நான்கு நாள் பழங்கறிகளை கண்டால் சாப்பாட்டுக் கலைஞர்களிற்கு விசரே வந்து விடும்.

சாப்பாட்டு கலைஞன் என்பவன் சாப்பாட்டை உயிருக்கு உயிராக காதலிப்பவனாக இருப்பான். சாப்பாடும், பெண்களைப்போல அல்லாமல், அவனை ஆழமாகக் காதலிக்கும். ஆதலால் சாப்பாட்டு கலைஞர்களை பொறுத்தவரையில், “சாப்பாட்டுடன் ஒருதலைக்காதல்” என்ற பேச்சுக்கே அங்கு இடமிருக்காது.
எல்லாம் சரி, உதுக்கேன் இப்ப குத்தி முறிவான் என்று நீங்கள் கேட்கலாம்.

சமையல் கலைஞர்களிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் , கௌரவம், மதிப்பு எல்லாம் இந்த சமூகம் சாப்பாட்டு கலைஞர்களிற்கு கொடுப்பதில்லை என்ற வேதனையால் தான் இந்த பதிவை எழுத உந்தப்பட்டேன்.

Master Chef போன்ற போட்டிகள் வைத்து சமையல் விற்பனர்களை கொண்டாடும் இந்த உலகம், அவர்கள் சமைப்பதை சாப்பிடும் சாப்பாட்டு கலைஞர்களிற்கும் போட்டி வைக்காமல் ஏன் புறந்தள்ளி ஒதுக்குகிறது? இது பாரபட்சம், discrimination அது, இது, இல்லையா?
சாப்பாட்டு கலைஞர்களிற்கு சகிப்புத் தன்மையும் அவையடக்கமும் அதிகம் இருப்பதால், அவர்கள் இந்த அங்கீகாரங்கள், பட்டங்கள், பகட்டுக்களை விரும்பமாட்டார்கள் என்பதால், அவர்களின் முதுகில் ஏறி இந்த உலகம் சவாரி விடுகிறது. போகட்டும் விடுங்கள்..

“சாப்பாடே உங்கள் காதலியானால், பிறகென்ன, வாழ்க்கை குஷ்பூவை ஏற்றிய அண்ணாமலையின் சைக்கிள் போல் இறக்கை கட்டிப் பறக்கத் தொடங்கிவிடும்” என்று யாரோ ஒரு சீன மூதறிஞர் சொல்லியது தான் இந்த இடத்தில் ஞாபகம் வருகிறது. சீன மூதறிஞர் சொன்னால் சரியாத் தானிருக்கும்.

1,089 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *