நான் கவிஞனும் இல்லை

“தௌ;ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் இங்கு அமரர் சிறப்பு கண்டார்” என்ற ஐயன் பாரதியின் வரிகளை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்க்கும் போதே அமர நிலை எய்தி விடுவேனோ ? என்று எண்ணுகையில் தமிழின் மீது உயிர் காதல் பூக்கிறது. அந்த வேகம் உயிரினும் இனிதெனக் கருதும் எம் அபிநயக்ஷேத்திரா நடனப்பள்ளி மாணவர்களுடன் பகிர்ந்து சுவைக்கும் பொற்கணங்களை மடையெனத் தந்தது. நாட்டியத்தை நாம் நோக்கும் பார்வை சற்று தனித்துவமானதும் பேரழுகு கொண்டதும் என நன்கு அறிவோம். ஆதலால் மாணவர்களுடன் நாட்டியத்தின் பல விரிவுகளுக்குள் நம் உரையாடல்கள் இருப்பதோடு ரூமி, ஓஷோ, புத்தர்,ரமணர் எனப் பல உண்மை விளக்கங்களை பேசி மகிழும் வேளை பாரதி தலைவனாவதும் தமிழ் முழக்கத்தின் தொனியே.
எமது முதல் மாணவியின் அரங்கேற்றம் 2010 ஆம் ஆண்டு நடைபெற்றதிலிருந்து இன்று வரை நடனப்பள்ளியின் படைப்புக்களுக்கு இயலாக்கம் செய்வது பாடல் இயற்றுவதென்றால் உள்ளத்தில் குதூகலம். காரணம் தமிழ் சுவை நுகர்வதன்றிப் பிறிதில்லை, ஏனெனில் நான் கவிஞனும் இல்லை. தமிழாழிக்குள் துள்ளி விளையாடும் சிற்றலைத் துளியேனும் என்மீது மோதியதா எனவும் அறிகிலேன்.
கதிர்காம கந்தன் மீதான முதல் பாடல் 2010 இல் எழுதிய போது கம்பவாரிதி ஜெயராஜ் ஐயா அகமகிழ்ந்து வழங்கிய பொன்வாழ்த்துக்களின் பயன், பத்தாண்டுகளின் பின்பு மகாகவி பாரதியின் வம்சத்தில் அவர் கொள்ளு பெயரன் ராஜ்குமார் பாரதி ஐயா என் எழுத்துக்கு இசை அமைத்துத் தருமளவு இன்பபுரிக்கு அழைத்துச் சென்றது.
“சிருங்கார நயனம் காருண்ய வதனம்
சுபாங்க லலிதம் ஆனந்த சலிதம் “
என்று மேல்மருவத்தூர் அம்மன் மீதும்,
” திண்ணபுரத்திலாடும் திகாம்பரம் தில்லை கூத்தன்
சித்தத்துள் வந்தாரடி – மனமே
பித்தம் கொண்டாடுதடி.”
என்று காரைநகர் சிவன் கோவில் மீது சிந்துப் பாடலும் அரங்கேற்ற நிகழ்வுகளில் மேடையேற்றப்பட்ட போது பக்தர்களின் அன்பை ஈட்டித்த தந்தது.
கம்பனின் சுவையறியாதோர் மணிவாசகர் சொல்லுக்கும் உருகார் என்று எண்ணுபவள், அன்றொரு நாள் நள்ளிரவில் குளிர் நிலவில் சீதையின் கோலம் கண்டேன். அப்போது சில சொற்கள் தாமாக வந்து சாமரம் வீசிக் கொண்டிருந்தது. கைது செய்தேன்.
” மயில் இயல் குயில் மொழியாள்
துயில் இல்லாள் அயில் விழியாள்”
என ஆரம்பிக்கும் சில வரிகளை தில்லானாவாக வடிவமைத்து வாரித் தந்தார் ராஜ்குமார் பாரதி ஐயா.
இதே போல இவர் இசையமைப்பில் என் இயல் நுழைய பல்வேறு நடன உருப்படிகள் மடையருளென அமைந்தன. அதில் “திடமாயுறைகிறான் திருக்கேதீஸ்வரத்தான் ” என்ற திருக்கேதீஸ்வரத்தின் ஸ்தல புராண நாட்டிய நாடகத்திற்கான இயலாக்கம் அவரது முன்னிலையிலேயே எழுதிக் களித்திருந்தேன்.
நாட்டிய நாடக இயலாக்க வரிசையில்
” மனமே சென்றிடு நம் வீடு
மாய உலகிது நமக்கேது ? “
“காற்றிலா ஒளியிடை தீப சுடர் போல்
மாற்றிலா மனத்திடை மருந்தவன் “
“கதையல்ல கவியல்ல பரமானந்தம்
மொழித்தோற்கும் விழியெங்கும் மெய்யானந்தம் “
என 2012 இல் 90 நிமிடங்களும் சுவாமி விவேகானந்த சரிதம் நாட்டிய நாடகத்தில் அத்வைதப் பொருளை அணுகிட தமிழ் என்மீது கருணை கொண்டது.
2013இல் அரன் புகழ் பாடும் அருமறை என்ற நாட்டிய நாடகத்தில் நம் பக்தி இலக்கியத் தமிழினை தழுவி அணைத்தேன், 2014 இல் ஒவ்வையார் நாட்டிய நாடகத்தில் சங்கத் தமிழோடு உறவு கொண்டேன் . 2016 இல் ராவண காவியமாக “தசக்ரீவன் ” நாட்டிய நாடகத்தில் இலக்கிய தமிழோடு கலந்து நின்றேன்.
2015 இல் ராஜ யோகாவின் படிகளை உள்வாங்கி ஒரு வர்ணம் அமைக்கும் பணி கிட்டியது. என்னகத்து நின்றாடும் சிவனை உருகி உருகி உணர்ந்து திருவாசகத்துள் தோய்ந்து எழுந்து ஆக்கியதும், 2021 இல் மீண்டும் நடராஜ தத்துவ வர்ணம் ஆக்கியதும் அவனருளன்றிப் பிறிதில்லை
சீரடி சாயியின் சத்சரிதத்தின் ஒவ்வொரு சொல்லும் சாயியின் அருளாகி மலர்ந்ததவை. அம்மகானின் எளிமையான தோற்றத்தையும் எல்லை கடந்த வியப்பையும் தாங்கவல்ல தமிழ் மொழி எத்தனை விசாலமானது என்று அப்படைப்பினூடு உணர்ந்தேன் .தமிழ் தந்த மற்றொரு பரிசு லால்குடி புதுசு கிருஷ்ணன் ஐயாவின் இசை.
அபிநயக்ஷேத்திரா நடனப்பள்ளி மாணவிகளின் தமிழ் ஆர்வத்திற்கு சான்று அவர்களின் அரங்கேற்ற மார்க்கம். ” ஞால வெளியினிலே ” முற்று முழுதான பாரதி பாடல்களை வைத்து உருவானது. ” ஐம்பெரும் காப்பிய மார்க்கம் ” , தமிழ் இலக்கிய மரபு மார்க்கம் , இன்னும் பல தொடரும்.
மழை போன்றது தமிழ் எனக்கு. தொட்டு முகர்ந்து கட்டியணைத்து முத்தமிட்டால் போதும் முழுவதும் நனைந்து விடுவேன். பெருவோலப் பெயலாயும் நிற்கும். அருவமாய் மண் வாசனையாகவும் தங்கும். புலன்களுக்குள் சிக்கும் புத்தமுதம் தமிழ். உணர்வெனும் கருவிற்கு காரணமும் ஆகிறது. அதனை சரிவர பிரசவிக்கும் வல்லமையையும் தருகிறது. தமிழ் வெறும் மொழியல்ல எனக்கு. அழியா இன்பம் தந்த வாழ்வின் விழி. சின்ன சின்னதாய் சேகரித்த இன்ப நினைவுகளெல்லாம் ஏதோ ஒரு வகையில் தமிழால் வந்தவையே. வாழ்தல் இனிதென வாழும் வழி தந்த தமிழைப் போற்ற என்னிடம் தமிழ் இல்லை. முடிந்தால் மௌனம் மொழி பெயர்க்க கூடும்.
” தலைமை புலமை செழுமை பழமை
தாய்மை சீர்மை பெருமை நீர்மை
திண்மை ஒண்மை வண்மை உண்மை
தூய்மை நன்மை இறைமை இனிமை
இம்மை மறுமை தவமே தமிழே “
(துவி ராக தில்லானா – தமிழ் இலக்கிய மரபு மார்க்கம்)