உடல்,உள்ளம் சார்ந்த கிராமிய விளையாட்டுகள்
பிரியதர்ஜினி.பாலசுப்ரமணியம்
மறவன்குளம்-வவுனியா-இலங்கை.
கிராமிய வாழ்வியலில் மிக முக்கிய பங்காக விளையாட்டுகள் காணப்படுகின்றன. உடல் மற்றும் உள்ளம் சார்ந்து தம்மை துடிப்பாக வைத்துக் கொள்கிற பண்பையும் தமக்கிடையே ஒற்றுமையுணர்வை மேம்படுத்தும் திறனையும் மக்கள் விளையாட்டுகளினூடாக வளர்த்துக் கொண்டார்கள்.ஒவ்வொரு கிராமமும் தத்தம் பண்பாடுகளின் தன்மைக்கேற்ப விளையாட்டுக்களை கொண்டிருக்கின்றன. விளையாட்டுக்கள் இவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது.
அக விளையாட்டுக்கள் – புற விளையாட்டுக்கள். அதே போன்று – பாடலுடன் விளையாடுவது – பாடலற்று விளையாடுவது என்றும் வகைப்படுத்தப்படுகிறது. ஆண் பெண் என்ற வேறுபாட்டின் அடிப்படையிலும் ,வயது அடிப்படையிலும் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது. சிறுவர் விளையாட்டு, சிறுமியர் விளையாட்டு, சிறுவர் மற்றும் சிறுமியர் விளையாட்டு, ஆடவர் விளையாட்டு, முதியோர் விளையாட்டு.
சிறுவர் விளையாட்டுக்கள் உடல் வலிமை, அக மகிழ்வு, ஒற்றுமைப்பண்பு ஆகியற்றை கொடுக்கும் பண்புடையதாக காணப்படுகின்றன.மென்மையான விளையாட்டுக்களையே சிறுமியர் விரும்பி ஆடுவர்.ஆடவர் விளையாட்டுகள் அறிவு சார்ந்ததாகவும முதியோர் விளையாட்டுகள் மன நிம்மதி கொடுப்பனவாகவும் காணப்படுகின்றன.
சிறுவர் சிறுமியர் விளையாட்டுக்களாக கெந்தல்கோடு,புளியடி.புளியடி எவடம் எவடம், கயிறடித்தல், காத்தாடி, கும்மியடித்தல்,ஒத்தையா இரட்டையா,ஓரம்மா கடைக்கு போனா,நுள்ளு பிராண்டி கிள்ளு பிராண்டி,நண்டூருது நரியூருது,எலியும் பூனையும்,குலை குலையாய் முந்திரிக்காய் நரிய நரிய சுத்தி வா,ஒளிச்சு பிடிச்சு,பம்பரம்,உருளைக்க கிழங்கு பிரட்டல்,வட்டக்கோடு,கொக்கான் வெட்டுதல், பனங்காய் வண்டியுருட்டுதல் என பல காணப்படுகின்றன.
சிறுமியர் விளையாடும் போது பெரும்பாலும் பாடல் இசைத்தபடியே விளையாடுவர்.பாடல்கள் வேடிக்கையாகவும் வினாவிடையாகவும் அமைந்திருக்கும்.உதாரணமாக கிட்டியடித்தலின் போது இறுதியாக மூச்சு விடாது பின்வரும் பாடலை பாடியபடி விளையாடிய இடத்திற்கு ஓடுவார்கள்.
“ஆலையிலே சோலையிலே
ஆலங்காடிச் சந்தையிலே
கிட்டிப் புள்ளும்
கிறுகியடிக்கப் பாலாறு…..பாலாறு
ஆலச் சருகு மடமடக்க
அங்கொரு பன்றி வெருண்டோட
கோரைக் கிழங்கு கொத்தியரிக்கக்
கொம்பேறி மூர்க்கன் குறுக்கால் ஓட
ஆத்துக் கட்டு அலம்பலக் கட்டு
அவிட்டுக் கட்டு இறுக்கிக் கட்டு”
எனத் தொடரும். இவ்வாறு சிறுவர்கள் விளையாடுவதனூடாக இயல்பாகவே மனப்பாடம், கிரகித்தல் மற்றும் தலைமைத்துவப் பண்புகளை பெற்றுக் கொள்கிறார்கள்.
ஆடவர்கள் விளையாடும் விளையாட்டுகளாக மாட்டுவண்டில் சவாரி,கயிறுழுத்தல்,தலையணைச் சண்டை,சறுக்குமரம் ஏறுதல்,கபடி, எனப் பல காணப்படுகின்றன. உடல்வலிமையை பறைசாற்றும் முகமாகவும் அவர்களின் விளையாட்டுகள் காணப்படுகின்றன. முதியோர் விளையாட்டுகளாக ஏணியும் பாம்பும்,தாயம்,கடதாசி விளையாட்டு ஆகியவற்றை குறிப்பிடலாம். அவர்களிடையே மனரீதியான பலத்தையும் ஒற்றுமையையும் இவ் விளையாட்டுகள் ஏற்படுத்துகின்றன.
கிராமிய மக்களின் அன்றாட வாழ்வியலையும் தொழிலையும் அடிப்படையாகக் கொண்டு விளையாட்டுக்கள் அமைந்திருப்பதைக் காணமுடியும்.உதாரணமாக கிளித்தட்டு அல்லது தாச்சி என்று அழைக்கப்படும் விளையாட்டானது வேளாண்மை செய்தலை கருவாக கொண்டது. கிளித்தட்டு ஆரம்பமானதும் கிளி எனப்படுபவர் வயலின் சொந்தக்காரராகவும் கிளித்தட்டு கோடுகள் வரம்புகளாகவும் அக் கோடுகளில் காவல் காப்பவர்கள் காவலர்களாவர்.வயலின் சொந்தக்காரர் கிளிகளை வயலில் விடாது வரம்புகளில் ஓடித் திரிந்து கிளிகளை துரத்துவார்.எதிர் அணியினர்தான் கிளிகள். மேலும் இவ் விளையாட்டு பண்டிகைக் காலங்களில் பெரிதும் விரும்பி விளையாடப்படும் விளையாட்டாக காணப்படுகிறது.
தற்காப்பு தொடர்பான விளையாட்டுகளாக வாள்வீச்சு,சிலம்படி,தீப்பந்தம் சுழற்றல்,மற்போர் என பல காணப்படுகின்றன.விளையாட்டோடு சேர்த்து எதிரி தாக்க வருகையில் எதிர்த்து நிற்க கற்கின்ற கலையாகவும் உருமாறுகின்றன இவ் விளையாட்டுகள். அவை கிராமிய மக்களிடையே மெல்ல மெல்ல மருவி வருவதை காணமுடிகிறது.முன்பள்ளிகளிலும் கற்றல் செயற்பாடுகளில் இவ் விளையாட்டுகள் இல்லாது போவதை குழந்தை களின் செயற்பாடுகளில் உணரமுடிகிறது.அவர்களின் கற்றலை இலகுவாக்குவதற்கு பதிலாக சுமையாக மாற்றிக் கொண்டிருக்கிறோம்.பிள்ளைகளின் தசைநார் விருத்திக்கும் துடிப்பான செயற்பாடுகளுக்கும் கிராமிய விளையாட்டுகள் முக்கிய பங்காக அமைகின்றன. இக் கிராமிய விளையாட்டுகளை முன்பள்ளி ஆசிரியர்கள் அறிந்திருத்தல் அவசியமானதொன்றாகும். நாட்டுப்புற பண்பாட்டிலிருந்து நகர்ப்புற பண்பாட்டிற்கு மக்கள் மாறி வருவதனால் நாட்டுப்புற பண்பாடுகள் கலைகள் மற்றும் விளையாட்டுகள் மருவிக் கொண்டு வருகிறது.
மேலைத்தேய விளையாட்டுகளான கிரிக்கெட்,கால்பந்து,மேசைப்பந்தாட்டம்,கொக்கி,பட்மின்ரன்,டாம்,எனப்பல விளையாட் டுகள் உள்நுழைந்து வளர்ந்து வருகின்றன. இதனால் தலைமுறை தலைமுறையாக விளையாடப்பட்ட விளையாட்டுகள் மீதான நாட்டம் குறைந்து கொண்டே போகிறது. இவ்வாறு மருவும் நம் பண்பாடுகளை மீண்டும் உயிர்ப்பிக்க வைக்க வேண்டும். அவற்றின் நன்மைகள் பற்றி இன்றைய தலைமுறைக்கு எடுத்துக் கூற வேண்டும். இது எல்லோரதும் கடமையாகும்.
“மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா”
உசாத்துணை.1.இலங்கை கிராமிய விளையாட்டுகள் -கேணிப்பித்தன் ச.அருளானந்தம் 2.தமிழர் கிராமிய விளையாட்டுக் கலை மரபு-சு.குணேஸ்வரன்
6,050 total views, 9 views today