கொரனா தடுப்பூசி பீதிகள்!

அலங்காரமாக வந்தமர்ந்தாள் அந்த பெண்மணி.சிகப்பு சேலையும் அதற்கேற்ற பொருத்தமான சட்டையும் அணிந்திருந்தாள்.நெற்றியில் பொட்டு. பூச்சூடி அலங்கரித்த முடி.வயது அறுபது மதிக்கலாம். வழமையான மாதாந்த செக்அப்பிற்காக பிரசர் கொலஸ்ரரோல் ஆகிய பிரச்சினைகள் அவளுக்கிருந்தன.
பிரஷர் சோதிக்க அருகில் சென்று கருவியை மாட்டினேன். ஏதோ கெட்ட மணம் அடிப்பது போலிருந்தது.சுற்றும் முற்றும் பார்த்தேன். ஏதும் தெரியவில்லை. அவளில் இருந்துதான் வருவது போலிருந்தது. ஆயினும் உடைகள் மிகவும் சுத்தமாகத்தான் இருந்தன. விரைந்து சென்று எனது இடத்தில் அமர்ந்து கொண்டு, அவதானிப்புகளை பதிவு செய்ய ஆரம்பித்தேன்.
அவளது கேள்வி இடைமறித்தது.”டொக்டர், கொரனா தடுப்பூசி போட்டால் குளிக்கலாமோ” நான் நேரிடையாக பதில் கூறாது எதிர்க் கேள்வி போட்டேன். “ஆருக்கு போட்டது ” “எனக்குத்தான்” “எப்ப போட்டது” “பத்து நாளாகுது” “ஆறு மாதங்களுக்கு குளிக்கக் கூடாது” அவளது ஆரம்ப கேள்விக்கு எனது விடையாகச் சொன்னேன். திகைத்து விட்டாள். ஒரு கணம் தான்!!. மறு கணம் கலகலவெனச் சிரித்தாள்.!! “டொக்டர் பகடி விடுறார்,”
“வீட்டை போன உடனேயே நல்லா சோப் போட்டுக் குளியுங்கோ……. இல்லையெண்டால் கொரனாவுக்கு தப்பினாலும் மற்ற நோயளட்டை இருந்து தப்ப ஏலாது.” சிரிப்பை அடக்கி, சீரியஸ் முகமூடி அணிந்து சொன்னேன். சிரித்த அவள் முகம் சீரியஸ் ஆனது. உங்களை கண்டால் மற்றவை மூக்கைப் பொத்திக் கொண்டு ஓடுவினம் என்று எண்ணியதையும் சொல்லியிருந்தால் …..கொரனா தடுப்பூசி போட்டால் குளிக்கக்கூடாது என்ற தவறான பீதி பலரையும் போட்டு ஆட்டுகிறது. வழமைபோல குளியுங்கள் என்று சொல்லி சொல்லி என் வாய் நொந்ததுதான் மிச்சம்.