ஒரே கேள்வி – இரு பதில்கள்

(பாலேந்திரா ஆனந்தராணி)
கேள்வி: நாடகப் பயணத்தில் இதுவரை பொதுவெளியில் அதிகம் பகிர்ந்துகொள்ளாத மறக்க முடியாத தருணங்கள்..?
ஆனந்தராணியின் பதில் :
என்னுடைய நாடகப் பயணம் சந்தோசங்கள் சங்கடங்கள். சவால்கள் நிறைந்த ஒன்று. இதில் எதைச் சொல்வது எதை விடுவது? அதிகம் பகிர்ந்து கொள்ளாத தருணங்கள் பல உண்டு. மனதில் ஆழப் பதிந்தவை. எனது மகள் (இவர் எமக்கு ஒரே பிள்ளை) பிறந்த 41ஆவது நாள் நான் மீண்டும் நாடகம் நடிக்க மேடையில் ஏறினேன். குழந்தையையும் மண்டபத்திற்குக் கொண்டு சென்றிருந்தோம். நாடகக் குடும்ப நண்பர்கள் மகளைப் பார்த்துக் கொண்டார்கள். நான் மேடையில் நடித்துக்கொண்டிருந்தபோது மகளின் அழுகுரல் பலமாகக்; கேட்டது. ஒரு கணம் நான் தடுமாறிப்போய்விட்டேன். பிறகு சமாளித்துக் கொண்டு நடித்தேன். அன்றிலிருந்து எல்லா நாடக ஒத்திகைகள் நாடக மேடையேற்றங்களுக்கும் எம்மோடு மகளும் பயணித்தார்.
2013ஆம் ஆண்டு லண்டனில் இருந்து இலங்கைக்கு நாடகப் பயணத்தை நாங்கள் மேற்கொண்டபோது 1978ஆம் ஆண்டு நான் வீரசிங்கம் மண்டபத்தில் நடித்த ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகத்தை மீண்டும் 35 வருடங்களுக்குப் பின்னர் அதே வீரசிங்கம் மண்டபத்தில் நடித்தது எனக்கு மறக்கமுடியாத நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது. இது சாத்தியப்படும் என்று நான் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. 78இல் மகள் பாத்திரம். 2013இல் தாய் பாத்திரம்.
இலங்கையிலும் சரி புலம்பெயர் நாடுகளிலும் சரி நீண்டதூர நாடகப் பயணங்கள் எப்போதும் மிக மகிழ்ச்சியானவை. அதிலும் குறிப்பாக பாடல்கள் உள்ள நாடகங்களை மேடையேற்றச் செல்லும்போது இசைக்குழுவினருடன் பயணம் செய்வோம். இலங்கையில் இசைவாணர் யாழ். எம். கண்ணனும் எம்மோடு வருவார். ரயிலில் வாத்தியக் கருவிகளை எடுத்து வைத்துக்கொண்டு நாடகப் பாடல்கள் திரையிசைப் பாடல்கள் எனப் பாடிக்கொண்டு செல்வோம். நாம் பயணம் செய்யும் பெட்டிக்கு சக பயணிகள் பலர் வந்து குவிந்துவிடுவார்கள். அவர்களும் மகிழ்ச்சியாகக் கை தட்டி எம்மை உற்சாகப்படுத்துவார்கள். நேயர்விருப்பமும் இசைக்கப்படும். லண்டனுக்குப் புலம்பெயர்ந்த பின்னர் ஒரு நாடக நிகழ்விற்காக நாம் நெதர்லாந்திற்குக் கப்பலில் சென்றோம். இதேமாதிரி வாத்தியங்களை இசைத்துப் பாட ஆரம்பித்தோம். கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்த பிற இனத்தவர்கள் பலர் எம்மைச் சுற்றிவர வந்து நின்று கை தட்டி ஆடி மகிழ்ந்தார்கள். 5 மணி நேரப் பயணம் அது. எமக்கு நேரம் போனதே தெரியவில்லை. நெதர்லாந்தில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நாமெல்லோரும் கப்பலில் திரும்பியபோது வாத்தியங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு எல்லோரும் தூங்கி வழிந்ததையும் குறிப்பிடத்தான் வேண்டும்.
பாலேந்திராவின் பதில் :
நான் பொதுவாகப் பாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருப்பேன். இதனை எனது நாடகங்களில் அவதானித்துப் பலர் சொல்லியிருக்கிறார்கள்.
முன் அனுபவம் இல்லாத நடிகர்களை எனது நாடகங்களுக்குத் தேர்வு செய்யும்போது எப்பொழுதும் அவதானமாக இருப்பேன். இருந்தும் ஒரு நாடகத்தில் ஒத்திகை ஆரம்பத்தில் ஒரு பாத்திரத் தேர்வு சரியாக அமையவில்லை. அந்தப் பாத்திரம் நாடகத்தில் சரியாக வெளிப்படாவிட்டால் நாடகம் நிச்சயமாகத் தோல்வியடையும் என்று நான் உணர்ந்தேன். சில வாசிப்பு ஒத்திகைகளின் பின்னர் இந்தப் பிரச்சினையை இனம் கண்டேன். உடனேயே திருத்திக்கொண்டேன். முதலில் நடிக்க வந்தவரை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வேறு ஒருவரை அந்தப் பாத்திரத்திற்குத் தெரிவு செய்தபோது நாடகம் வெற்றிகரமாக அமைந்தது. முதலில் தேர்வானவர் அவருடைய பாத்திரத்தை மாற்றிய பின்னர் அடுத்த ஒத்திகைக்கு வரவில்லை. கோபித்துவிட்டார். அவர் என்னiவிடப் பல வயது கூடியவர்.
இளைஞர்கள், சிறுவர்கள், நண்பர்கள் போன்றவர்களைப் பயிற்றுவிக்கும்போது நாடகப்பட்டறையின்போது அவர்களின் திறமையை அறிந்து அதற்கேற்றபடி பாத்திரங்களைத் தெரிவு செய்து கொடுப்பேன். இந்த நாடகத்தில் அப்படிச் செய்ய முடியவில்லை.
20 வயதிலிருந்து 70 வயது வரையிலான பெண்களே நடித்தனர். 42 வருடங்களுக்கு முன்னர் 1979இல் நான் நெறிப்படுத்தி, முழுக்க முழுக்கப் பெண்கள் நடித்த ‘ஒரு பாலை வீடு’ நாடகத்தில்தான் இது நடந்தது. யாழ். சுண்டுக்குளி மகளிர் பாடசாலை பழைய மாணவிகள் நடித்த நாடகம் இது.
60 வயது நிரம்பிய மிகவும் கண்டிப்பும் திமிரும் நிறைந்த விதவைத் தாய், முதிர்கன்னிகளான ஐந்து பெண் பிள்ளைகளை வீட்டில் அடைத்து வைத்திருக்கிறார். அவர்களுக்கிடையில் நடைபெறும் உணர்ச்சி மோதல்கள் நாடகமாக விரியும். இந்த நாடகத்தில் அந்த வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண் பாத்திரம் மிக முக்கியமானது. அதற்கு முதலில் நான் உருவத்தை வைத்து ஒருவரைத் தேர்வு செய்தேன். அந்த நடிகை அந்த நேரத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பாடசாலை உப அதிபராக இருந்தார்.
எல்லோரையும் அடக்கி ஆளும் தாய் பாத்திரத்தை விட வயது கூடிய பாத்திரம் பணிப்பெண்ணினுடையது. அந்த வீட்டில் நிகழும் அமுக்கி வைக்கப்பட்ட பெண்களுக்கிடையில் நடைபெறும் மோதல் அனைத்தையும் அறிந்த, அங்கு வேலை பார்க்கும் இந்தப் பாத்திரம், நேரடியாகப் பேசும்போது பணிவாகத் தெரியும். ஆனால் அந்த வார்த்தைகளுக்குக் குத்தல் நிறைந்த வேறு அர்த்தங்கள்; இருக்கும். இப்படியான பாத்திரங்களை வெளிக்கொணர்வது சில நடிகர்களால் மட்டுமே முடியும்.
இந்த சம்பவம் நடந்த பின்னர் சுண்டுக்குளி மகளிர் பாடசாலை அதிபர் அந்தப் பெண்மணியைச் சமாதானப்படுத்தி வேறு பாத்திரத்தில் நடிக்கச் சம்மதிக்க வைத்தார். தனது பிரச்சினையை உணர்ந்த அவர் நாடகத்தில் நான் கொடுத்த மற்றப் பாத்திரத்தை முழுமனதோடு நடித்து ஒத்துழைத்தார்.
கேள்வி : ஆற்றுகை செய்த நாடகங்களில் பிடித்தமானதும் சவாலானதுமான நாடகம் எது?
ஆனந்தராணியின் பதில் :
பிடித்தது ‘மழை’ நாடகம். சவாலானது ‘மரணத்துள் வாழ்வு” நாடகம்.
பாலேந்திராவின் நெறியாள்கையில் 1976ஆம் ஆண்டு நான் முதன்முதலாக நடித்த நாடகம் ‘மழை’. மனதில் பதிந்த நாடகம். தமிழக நாடக ஆளுமை பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி எழுதியது. உளவியல் சார்ந்த நாடகம். ;நோய்வாய்ப்பட்ட தந்தையார் அவரைக் கவனித்துக் கொள்வதற்காகத் தன்னைத் திருமணம் செய்து கொடுக்காமல் வீட்டோடு வைத்திருக்கிறார் என்று தகப்பனை வெறுக்கும் மகள் பாத்திரம். பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடிக்கவேண்டிய நாடகம். கதை நகரும் விதம், பாத்திர வார்ப்பு, நெறியாள்கை எல்லாமே எனக்குப் பிடித்திருந்தது. பாலேந்திராவும் நானும் இதில் அண்ணன்- தங்கையாக நடித்திருந்தோம். 40 தடவைகளுக்கு மேல் மேடையேறிய இந்த நாடக வசனங்கள் முழுவதையும் இப்போது கேட்டாலும் நான் சொல்லுவேன்.
சவாலான நாடகம் ‘மரணத்துள் வாழ்வு’.; கைதாகிக் கொடுமையான சித்திரவதைகளுக்கும் பாலியல் வன்முறைக்கும் ஆளாகி வடுக்களுடனும் மன அவஸ்தைகளுடனும் வாழும் ஒரு பெண், தான் பட்ட துன்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனப் போராடும் கதை. மிகவும் உக்கிரமான இந்த நாடகம் இரு மணித்தியால முழுநீள நாடகமாகும். மூன்று பாத்திரங்கள் மட்டுமே. நான் மிகவும் க~;டப்பட்டு நடித்த நாடகம் இதுவென்று கூறலாம். பல்வேறு உணர்ச்சிக் கொந்தளிப்பில் தகிக்கும் பாத்திரம். அநேகமான நாட்கள் ஒத்திகைகள் முடிய எனக்குத் தலையிடி வரும். அவ்வளவு உக்கிரம். இதன் தயாரிப்பிற்கு பாலேந்திராவிற்கு எட்டு மாதங்கள் எடுத்தது. 2009ல் முதல் மேடையேற்றம் கண்டது.
பாலேந்திராவின் பதில் :
நான் நெறிப்படுத்திய எல்லா நாடகங்களுமே எனக்குப் பிடித்த நாடகங்கள்தான். பிடித்த நாடகங்களை மட்டுமே செய்திருக்கிறேன். எனது பல நாடகங்கள் தமிழ்ச் சூழலில் மிகவும் சவாலானவை. இதனை தமிழக நாடக ஆளுமை இந்திரா பார்த்தசாரதி பதிவு செய்துள்ளார்.
எனக்குப் பல காலமாக நான் வாழும் ஆங்கிலேய நாட்டில் பிறந்த N~க்ஸ்பியருடைய ஒரு நாடகத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. இந்திரா பார்த்தசாரதி அவர்கள் 2000ஆம் ஆண்டளவில் N~க்ஸ்பியருடைய இறுதி நாடகமான டெம்பஸ்ட் நாடகத்தைத் தமிழில் தழுவல் ஆக்கமாக எழுதி எனக்கு அனுப்பியிருந்தார். இதனை எப்படியும் மேடையேற்ற வேண்டும் என்று நினைத்துச் செயல்பட்டேன். லண்டனில் சிறுவயது முதல் எம்மோடு நாடகத்தில் பயணிக்கும் இளையவர்களை வைத்து சுமார் ஒரு வருடம் கடின பயிற்சி கொடுத்து இந்த நாடகத்தை 2013ஆம் ஆண்டு லண்டனில் மேடையேற்றினேன்.
பல விடயங்களில் மிகவும் சவாலான நாடகம் இது. கண்ணுக்குத் தெரியாத மாருதி பாத்திரம் மேடை நிகழ்த்துதலுக்குச் சவாலானது. மாயாவித்தை காட்டும் பாத்திரம் அது. அதற்கான அங்க அசைவுகள் ஆட்டங்கள் இணைத்து இருவராக மாற்றிக் காட்சிப்படுத்தினேன். ஆனந்தராணி கூத்து அசைவுகளை வடிவமைத்தார்.
தமிழ் மரபில் கூத்து வடிவத்தில் உடையமைப்பை செய்ய விரும்பினேன். சென்னையில் எனது நண்பர் ஆழி வெங்கடேசன் இதில் வல்லவர் என்று அறிந்தேன். அவரைத் தொடர்பு கொண்டு நாடகத்தை விளங்கப்படுத்தி இதற்கான உடையமைப்பு, முகமூடிகள் ஆகியவற்றைச் செய்து பெற்றுக் கொண்டோம். இந்நாடகத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது எனக்கு நல்ல மகிழ்ச்சி.