நீயெலாம் ஒரு ஆம்பிளை போய்ப் புடவையைக் கட்டிக்கோ! அவமானப்படுத்த எத்தனை! எத்தனை!! யுக்திகள்!!!.

பிரியா இராமநாதன் -இலங்கை

ஒரு தமிழ்த் திரைப்படத்தில் கடனைத் திருப்பித்தராத விவேக்கை நோக்கி இன்னொருவர் காறி உமிழ்வார் , உடனே விவேக் “ஏன்டா எங்கேடா கத்துக்கிட்டிங்க இதெல்லாம் ? எச்ச துப்பினா அவமதிக்கிறதா அர்த்தமா ? இப்படி துப்பித்துப்பித்தாண்டா ஊரையெல்லாம் நாறடிச்சு வெச்சிருக்கீங்க ! இதெல்லாம் அப்டியே ராம்நாட் பக்கம் திருப்பிவிட்டா நாலு போகம் வெளையுமேடா? என்பார் .

      ஒருவரை  அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு மற்றொருவர் செய்யும் செயல் பற்றிய இந்தக் காட்சியே "அவமானப்படுத்தும் செயல்கள் " பற்றி என்னை சிந்திக்கத் தூண்டி இதை எழுதிவைத்து எனலாம் .   ஆம்,அவமதிக்கும் செயல்கள் என்பது இந்த உலகம் முழுத்திலும் பரவியுள்ள ஒன்றுதான் . ஆனால், அவை நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது எனலாம்.இவற்றையெல்லாம் எங்கிருந்து எப்போதிருந்து மனிதன் கற்றுக் கொண்டிருக்கக்கூடும் ?

தூள் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும், “அவ புடவையை வாங்கி கட்டிக்கோ ” ! அந்த திரைப்படம் என்றில்லை தமிழ்திரைப்படங்களில் காலம்காலமாய் ஒருவனை அவமானப்படுத்த அல்லது அவன் கோழை என்பதை கேலிபேச அல்லது புரட்சி செய்ய அஞ்சும் ஊர்மக்களை உசுப்பேத்த என்று பல தருணங்களில் புடவை கட்டிக்கொள் என்ற வசனம் வரும் . நிஜவாழ்க்கையில்கூட நாமே பலர் நீ எல்லாம் ஒரு ஆம்பிளை “பாவாடை கட்டிக்கோ , புடவை கட்டிக்கோ ” என்று கேலி பேசுவதைக் கேட்டிருப்போம் . இதையெல்லாம் வைத்துப் பார்க்கின்றபோது புடவை என்பது சமுதாயத்தில் கேலி சின்னமாகவும் கோழைகள் அணிய வேண்டியதாகவும், ஒரு ஆணை அவமானப்படுத்த சிறந்த யுக்தியாகவும் கையாளப்பட்டிருக்கிறது போலும்! திரைப்படங்களில் ஒரு ஹீரோவின் சட்டையை விரும்பி அணிந்துகொள்ளும் ஹீரோயின்களை நாம் பாராட்டுகின்றோம் , அது தீராக்காதலின் வெளிப்பாடு என்கின்றோம் . ஆனால்,பெண் உடையினை ஒரு ஆணுக்கு அணிவிக்கச் சொல்வதென்பது மட்டும் அவனை எள்ளலுக்கும் கேவலத்துக்கும் ஆளாக்கும் அவமானச்செயல் என்ற கண்ணோட்டத்தினை வைத்துக்கொள்கின்றோம். இதெல்லாம் எப்படி ? புடவை என்ற அசாத்திய உடை ஆணை அவமதிக்கும் உடையாக மாறியது எப்போது ?

இந்தியர்களை அவமதிக்கும் பொருட்டு அமெரிக்கர்கள் தங்கள் வீட்டு நாய்களுக்கு “இந்தியா” என்று பெயர் சூட்டுவதுற்பட, கீழைத்தேயர்களை அவமானப்படுத்த மேற்கத்தையவர்கள் கைக்கொள்ளும் அவமானச் சின்னங்கள் ஏராளம்.அவற்றுள் சிலதான் இந்து மற்றும் பௌத்த தெய்வங்களின் உருவங்களை காலணிகள்,மற்றும் பெண்களின் உள்ளாடைகளில் அச்சிட்டு விற்பனைக்கு விடுவது, கதவுகளுக்கு முட்டுக்கொடுக்க (பிள்ளையார் போன்ற) இந்து தெய்வ சிலைகளை வைப்பது போன்ற பல! (ஒன்றில் அவர்கள் அவற்றையெல்லாம் மிகப்பெரியவோர் பொருட்டாக நினைப்பதில்லை. ஆனால் நாம் அவற்றை நமக்கான அவமானமா நினைத்துக் கொள்வோம்). நாகரீகம் வளர்ந்தாலும் மக்களின் மனம் மாறவில்லை என்பதைக் காட்டும் செயல்களாகவே இவை தென்படுகின்றன அல்லவா ?

மேலும் ஒருவர் எப்படி அமரவேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். தன்னுடைய உடல் சௌகர்யம் கருதியே பலர் கால்மேல் கால் போட்டு அமர்கிறார்கள் என்பது என்னுடைய அனுபவபூர்வமான உண்மை . சில வருடங்களுக்குமுன் கமல்ஹாசனின் விழா ஒன்றில் கால்மீதுகால் போட்டு மேடையில் அமர்ந்திருந்த எழுத்தாளர் ஜெயகாந்தனை ரசிகர்கள் கத்தி ரகளை செய்த சம்பவத்தினை நாம் இவ்விடத்தே நினைவுகூர வேண்டியிருக்கிறது . வயதில் மூத்தவர்கள்முன் கால்மீது கால் போட்டு அமரக்கூடாது என்று வளர்க்கப்படுவது நம் தமிழ்க் கலாசாரம் என்று வைத்துக்கொண்டால்கூட, மூத்த எழுத்தாளரான ஜெயகாந்தன் கமல்ஹாசன்முன் கால்மீது கால் போட்டு அமர்ந்தது எப்படி கமலை அவமானப்படுத்துவதாக அவரது ரசிகர்களை கருத செய்தது ?

பெண்கள் தங்கள் கால் தெரிவது போன்று உடையணிந்தால் அது அவமதிக்கும் செயலாக இன்றுவரையில் பல நாடுகளில் கருதப்படுகிறது . பெண்கள் தங்கள் தலை மயிரினை தொப்பி அணிந்து அல்லது முக்காடிட்டு மறைக்காவிட்டால் அது மதத்தினை அவமதிக்கும் செயலாக சில மதங்கள் சொல்கிறது . வேலிச் சண்டை , ஆட்டுச் சண்டை போன்ற சண்டைகளில்கூட சட்டென தம்முடைய ஆடையினை விளக்கி அல்லது அவிழ்த்து எதிராளிக்கு தம் பிறப்புறுப்பைக் காட்டும் ஆண்களும் பெண்களும் உள்ள கிராமங்கள் இன்றும்கூட உள்ளன . ஒருவரை அவமானப்படுத்த அவர் வீட்டு குடும்ப பெண்களை தகாத வார்த்தை கூறி அல்லது தூசிப்பது என உலகமெங்கிலும் பைத்தியங்கள் உண்டு என்பது தெரிந்ததுதான் என்றாலும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில்தான் இப்படியான வினோதமான பைத்தியங்களைக் காணமுடியும்போலும்! அடுத்தவரை அவமானப்படுத்து வதாக நினைத்துக்கொண்டு தங்கள் ஆடைகளை அவிழ்த்து தங்களைத் தாங்களே அசிங்கப்படுத்திக்கொள்ளும் பைத்தியங்கள் …

அண்மையில் பெரும் சர்ச்சைக்குள்ளான சென்னை மாநகராட்சியின் புதிய வரி வசூல் முறைமை பற்றியும் நாம் இங்கு பேசியேயாகவேண்டும். சொத்து வரி செலுத்தத் தவறிய நட்சத்திர விடுதியின் முன்பு திருநங்கையரை ஆடவிட்டு வரி வசூல் செய்திருக்கிறது நகராட்சி. ஒருவரை அவமானப்படுத்துவது தவறு என்றால் ஒருவர்மேல் சமூகம் தொடர்ந்து சுமத்தியிருக்கும் அவமானத்தைக் கருவியாகக்கொண்டு இன்னொருவரை அவமானப்படுத்துவது எவ்வளவு பெரிய தவறு ? எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல் ? உண்மையில் மாநகராட்சி அவமானப்படுத்தியது நட்சத்திர விடுதிக்காரர்களையோ அல்லது திருநங்கையரையோ அல்ல மாறாக அது தன்னைத் தானே தாழ்த்திக்கொண்டது. ஒரு சமூகம் தனது சிறுபான்மையினரையும் விளிம்பு நிலையினரையும் நடாத்தும் விதத்தைக்கொண்டுதான் அது எவ்வளவு நாகரீகமடைந்த சமூகம் என மதிப்பிடப்படும் எனில், நமது நாகரீகத்தின் முகமோ தற்போதும் கிழிந்து தொங்குகிறது என்றல்லவா கூறவேண்டும் ?

பொதுநல வழக்குகள் மூலம் எத்தனையோ மக்கள் பிரச்சினைகளை கையில் எடுக்கவேண்டிய வழக்கறிஞர்களும் இப்படியான சில தேவையற்ற வழக்குகளை தொடுப்பதும்கூட துரதிஷ்டமானதே..மாற்றமடைய வேண்டிய மக்களின் மனநிலைகளில் இதுவும் ஒன்றே !

839 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *