தவில் கற்கமுடியாதா என்று தவித்த காலம் மாறுகிறது!


மாதவி


இலங்கையில் நாதஸ்வரம் தவில் இந்த இரண்டும் தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் வருவதற்கு முன்னமே உச்சம் தொட்டு இருந்தகலைகளாகும். பல பாடல்கள் பாடல்களாக கேட்பதிலும் பார்க்க, நாதஸ்வரம் தவில் இவற்றுடன் வாசித்து கேட்கும்போது அதன் இனிமையே வேறு. இந்த வாசிப்பில் மயங்காத ஆண்கள் பெண்கள் எவரும் கிடையாது. கர்நாடக இசைக் கச்சேரிகளில் பிரதான பாடகர் தான் முதலில் தொடங்குவார். பக்கவாத்தியம் பின்தொடரும். வயலின், புல்லாங்குழல்,வீணை போன்ற வாத்தியங்களின் தனிக் கச்சேரியிலும் அந்தந்த வாத்தியங்கள் தான் தொடங்கும். நாதஸ்வரக் கச்சேரிகளில் நாதஸ்வரம் தான் பிரதான வாத்தியம்; தவில் பக்கவாத்தியம். ஆனால் நாதஸ்வரக் கச்சேரி தொடங்கும்போது தவில் வாசிப்போடு தான் தொடங்கும். இது தவில் வாத்தியத்தின் தனிச் சிறப்பு. இப்படி தவிலின் சிறப்புகள் பற்றி பலரும் பலவிதமாக எழுதியுள்ளனர்.

எமக்கு தவில் என்றதும் தாயகத்தில் தன்னிகரில்லாத் தவில் மேதை தட்சணாமூர்த்தி அவர்களே முதல் ஞாபகத்தில் வருவார். நாதஸ்வரம் தவில் இப்பெரும் கலைகள். பரம்பரை பரம்பரையாக தொடர்ச்சியாக வளர்ந்துவரும் உன்னதக்கலை. வீணை, வயலின், மிருதங்கம், அனைவரும் கற்றுமகிழும் கலையாக உள்ளது. ஆனால்; தவிலும்,; நாதஸ்வரமும் அப்படி அல்ல. இவை பரம்பரை பரம்பரையாக குருகுலத்தில் கற்பதுபோல் கற்றுவந்த கலையாகும். நாதஸ்வரம் தவில் இந்த இரண்டிற்கும் தாயகத்தில் கற்றவர் கல்லாதவர் என்ற வேறுபாடுகள் இன்றி எவரையும் தம்வசமாக்கும் தன்மைகொண்டதாகத் திகழ்ந்ததை, திகழ்வதை யாவரும் அறிவர். இதனை இலகுவாக எவரும் கற்றுத்தேறும் அளவிற்கு அன்று இருக்கவில்லை. ஆனால் இன்று புலம் பெயர்ந்துவாழும் இளைஞர்கள் பலர் இங்கே பிறந்து வளர்ந்து தவில் வாசிப்பதைப்பார்த்து அக்கலைமீது தணியாத தாகம்கொண்டு, பரம்பரை வட்டத்துக்கும் அப்பால் பயின்று மக்களின்; பாராட்டுதலைப் பெற்றுவருகின்றார்கள்.

யேர்மனியில் கடந்த மாதம் பல ஆலயங்களில் நடந்த தேர் தீர்த்த நிகழ்வுகளில் யேர்மனியில் பிறந்த ஜெறுஷணன் மணிவேந்தன் (சுவெற்ரா), தனுஸ் சுரேந்திரன் (முனிஸ்ரர்) மற்றும் இலங்கையில் பிறந்து யேர்மனியில் வளர்ந்த தினேஸ். மனோகரன் (சுவெற்ரா.) இந்த இளைஞர்களது தவில் வாசிப்பு பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
இவர்கள் அக்கலைப்பரம்பரையில் இருந்து வரவில்லை என்றாலும், அக் கலையின் ஆணிவேர்களின் அபாரமான ஆதரவுடனும் வழிநடத்தலினாலுமே இன்று சிறந்தது விளங்குகின்றனர். மங்கலகரமான இத்தெய்வீகக்கலை யாவரும் கற்று மகிழ்ந்திடும் கலை என்பதற்கு முன் உதாரணமாக திகழும் இளைஞர்களுக்கு பாராட்டும், பயிற்றுவித்த, குருவினர்க்கு நன்றியும் உரித்தாகட்டும். படங்கள்:ஆன்மீகத்தென்றல்.த.புவனேந்திரன்.

1,172 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *