தலைக்கனம் தவிர்ப்போம்
(அடக்கம் அமரருள் உய்க்கும்)
கரிணி-யேர்மனி
“நலம் வேண்டின் நாணுடமை வேண்டும்
குலம் வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு”
ஒருவருக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவராக இருத்தல் வேண்டும், குலப்பெருமை காத்துக் கொள்ள வேண்டுமெனில் எல்லோரிடத்திலும் பணிவு வேண்டும்.
வாழ்வின் ஆரம்ப பருவம் முதல் கற்றுக்கொள்ள வேண்டிய பண்பு கீழ்ப்படிதலாகும். பெற்றோருக்கு, பெரியவர்களுக்கு, ஆசிரியருக்கு என அடிப்படைப் பண்பாக பணிந்து வாழ்தல் கற்பிக்கப் படுகிறது. இந்த பண்பு நன்கு காணப்பட்டாலேயன்றி வேறு எந்த சிறந்த பண்பும் உயர்ந்து விளங்க முடியாது. சமூகத்தில் மதிப்பும், அரவணைப்பும், அங்கீகாரமும் பெறுவதற்கு இதுவே அடிப்படை.
ஒரு கலையினையோ, வித்தயினையோ கற்றுக் கொள்வதற்கு முன்பு குருவிற்கு பணிவிடைகள் செய்து பணிவாக பொறுமை காக்க வேண்டும். தகுதி அடைந்துள்ளனரா என குருவினால் உணரப்பட்ட பின்னரே அவை மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். எதையும் சரியாகக் கையாளுவதற்கு பொறுமை அவசியம். தகுதியற்றவர் கையில் சேரும் அற்புத விடயம் குரங்கினுடைய கையில் பூமாலை சேர்ந்ததைப் போலாகும்.
‘பணிவை விட சிறந்த பண்பும் இல்லை, துணிவை விட சிறந்த ஆயுதமும் இல்லை’ என்பார்கள். வளைந்து கொடுக்கும் மரங்கள் பெரும் காற்றுக்கு கூட தப்பிவிடுகின்றன. ஆனால் அசையாமல் நிற்பவை வேரோடு சாய்கின்றன. வளைந்து கொடுப்பவர்கள் தான் வளர்ந்து கொண்டே போவார்கள். வாழ்வில் வெற்றிகள் அடையும் போது பணிவும், தோல்விகளின் போது பொறுமையும் அவசியம். பணிவு என்பது தாழ்மை எனப் பொருளாகாது அதுவே உயர்ந்த பண்பின் அடிப்படை
எண்ணம் அமைதியாக இருக்கும் போது சுவாசம் சீராக விளங்கும். இந்நிலையில் எந்தவொரு தடுமாற்றமும் ஏற்படுவதில்லை. அன்புடன் கூடிய பணிவும், பொறுமையும் வாழ்வில் நிம்மதி நிலைத்திருக்கச் செய்யும். பரபரப்பான உலகியல் வாழ்வில் மனநிலை பரபரப்பாக இருக்கும் போது தெளிவாக சிந்திக்க முடியாது இந்நிலையில் சாதிக்க கூடியது யாதுமில்லை. நடந்து கொண்டே உண்பதும், பறந்து கொண்டே பணியில் ஈடுபடுவதும் என துரித கதியில் வாழ்வு நகர்கிறது.
“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து”
ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் அரணாக இருந்து உதவும்.
மௌனத்தை தீவிரப்படுத்தும் போதுதான் பேச்சில் ஆர்வமும் கூர்மையும் ஏற்படும். பலர் தாம் புதிதாக கற்ற அல்லது அறிந்த விடயங்களை எப்போதும் தேவையற்ற இடங்களில் எல்லாம் விளம்பரப்படுத்தும் பாணியில் பேசி சலிப்பூட்டுவார்கள். வெறுமனே பல புத்தகங்களை கற்றவர்களை விடவும், பட்டப்படிப்பு படித்தவர்களை விடவும் பாடசாலை கல்வி கற்காத சாதாரணமான ஒருவரிடம் உலகியல் அறிவு, இயற்கை சார்ந்த நுண்ணுணர்வு பல்கி இருப்பதை கண்டிருப்போம். ‘பட்டப்படிப்பு படித்து வந்தாலும் பாட்டி சொல்லை தட்டாதே’ என்பார்கள். மீண்டும் பெற்றுக் கொள்ள முடியாதது பேசிவிட்ட வார்த்தை. எப்போது பேசுவார் என்ற ஆவலை தூண்டும் வகையில் வார்த்தைகள் உயர்வாகவும், கனிவாகவும் இருக்க வேண்டும்.
யார் வாழ்வையும் வாழ எவரும் இப்பூமிக்கு வருவதில்லை. அவரவர் தமது வாழ்வை வாழ்வதற்கே வருகின்றனர். எமது கருத்துப்படி இன்னொருவர் வாழ வேண்டுமென எதிர்பார்ப்பதோ கட்டாயப்படுத்துவதோ இரு பக்கமும் துன்பத்தையே விளைவிக்கும். நல்வழியை அறிமுகப்படுத்தலாமேயன்றி பயணிப்பவர் தமக்கு விருப்பம் இருந்தால் அந்த வழியில் தன் பயணத்தை தொடர்வார்.
அசோகச் சக்கரவர்த்தி பெரும் போர்கள் புரிந்து வெற்றியீட்டிய பின் இரவும் பகலும், கனவிலும் நனவிலும் இரத்த வாடையும் ஈனக்குரல்களும் நினைவில் நிழலாட நிம்மதியின்றி தவித்தார். அத்தருணத்தில் அமைதி வேண்டி பற்பல சமயத்தவர்களிடம் மன்றாடிய போது “துஷ்டன்” “மாபாவி” என்று தம் புனித ஆலயங்களுக்குள் அனுமதிக்காது அச்சமயத்தவர்கள் புறக்கணித்தனர். ஆனால் மனம் திருந்த முயற்சித்து அமைதி தேடிய சக்கரவர்த்தியை பௌத்த துறவிகள் கனிவோடு வரவேற்று அமைதியை போதித்தது மட்டுமன்றி நல்வழியில் வாழவும் செய்தனர். அச்செயல் இன்று உலகெங்கும் பௌத்தம் பரவிப் பெருக காரணமாக அமைந்து விட்டது. தீமை புரிந்தவர்கள் அமைதி வழி நாடும் போது புறக்கணிக்கப்பட்டார்களேயனால் இன்னும் மோசமான நிலைக்கு செல்ல வாய்ப்புண்டு. அகங்காரம் கொண்டவர்களை அன்பினால் திருத்திவிடலாம். ஆணவத்தால் அணுகினால் அழிவுகள் இன்னும் அதிகமாகும்.
வாழ்வில் மிக உயர்ந்த நிலையினை அடைந்தவர்கள் குறைவாகப் பேசுவதுடன் அதிகம் பணிவாக இருப்பதை காணலாம். பரபரப்பானவர்களால் தாம் அடைந்த உயர் நிலையை தக்க வைத்தல் கடினம். பிறர் பேசும் போது பொறுமையாக நன்கு கவனித்துவிட்டு பணிவாக கூறப்படும் பதில்கள் மதிப்பு வாய்ந்தவை. அமெரிக்காவில் உலக சமய மாநாட்டில் உரை ஆற்றும் போது சுவாமி விவேகானந்தரின் அணுகுமுறை இன்றளவும் பேசப்படுகிறது. இப்பாரிய பேரண்டத்தில் நான் என்பது மிகச் சிறு பொறி மட்டுமே என்றுணர்ந்தால் தலைக்கனம் தானே விலகிவிடும்.
1,409 total views, 3 views today