‘அவன் அப்ப அப்படி ஆனால் இப்ப மாத்திரம் எப்படி இப்படி?’

கனகசபேசன் அகிலன்-இங்கிலாந்து
படிக்காதவன்

சில வருடங்களுக்கு முன் கனடாவிற்கு போயிருந்தேன், அங்கு என்னுடன் கூடித்திரிந்த என் பள்ளி நண்பனொருவன் சில கேள்விகள் கேட்டான்…’மச்சான், பள்ளிக்கூடத்திலை படிக்கேக்கை பாஸ் பண்ணவே கஷ்டப்பட்டவனெல்லாம் இப்ப இங்கிலாந்திலை என்ஜினீயராய் கனகாலம் வேலை செய்யிறாங்கள், எப்படி மச்சான் உதெல்லாம்…? இலண்டனிலை டிகிரி(Degree) என்ன சும்மாவே குடுக்கிறாங்கள்?’…

என்னக்கு எப்படி இங்குள்ள நிலைமையை அவனுக்கு முழுமையாக விளக்குவது என்று புரியவில்லை, நேரமுமில்லை… நான் சொன்னேன் ‘உன் கேள்வியில் தான் பதிலும் உள்ளது’ என்று… அவனுக்கு அது விளங்கவில்லை, சிறிது விளக்கமாக கூறினேன்…’ டேய், டிகிரி இஞ்சை சும்மாதான் குடுக்கிறாங்கள் என்று வைத்துக் கொள்வோம், ஆனால் அதை வைத்துக் கொண்டு வேலையெடுத்து அந்த வேலையில் பல வருடங்கள் நிலைத்து நிற்பது இலகுவான விடயம் அல்ல, அதற்கு ஒரு திறமை வேண்டும்…ஒத்துக் கொள்கின்றாயா?’ என்றேன்.

மேலே உள்ள கேள்விகள், அவனைப் போல் வேறு பலருக்கும் எழுந்திருக்கலாம், இலங்கையில் சில புள்ளிகள் போதாமையால் தமக்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுக்க முடியாத அவலம் வெளிநாடுகளில் குறைவு. வெளிநாடுகளில் எமக்கு விருப்பமான உயர் கல்வியை கற்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம், பலர் அந்தச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி கொள்கின்றார்கள். அத்துடன், பாடசாலைக்கு (உயர்தரத்தை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்) வெளியே வந்த பின் தான் பல விடயங்களை கற்றுக் கொள்கிறோம் – அதுவரை பேப்பருடனும் பேனாவுடனும், நாலு பாடத்தை மட்டும் நினைத்துக் கொண்டு மூழ்கியிருந்தவர்களுக்கு, பாடசாலையை விட்டு வந்தவுடன் தான் உலகம் சரியாக புரிய தொடங்குகின்றது – இதுவரை கற்றது கை மண்ணளவை விடக் குறைவு என்று!

ஆனால் இப்பவும் பலர் ‘அவன் அப்ப அப்படி ஆனால் இப்ப மாத்திரம் எப்படி இப்படி?’ என்ற முட்டாள் தனமான கேள்விகளை கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள். எவனும் எப்பவும் எதையும் கற்கலாம், தன்னை எப்படியும் மாற்றிக் கொள்ளலாம், முன்னேற்றம் அடையலாம் என்பதை புரிந்து கொள்ளும் மனநிலை பலருக்கு இன்னும் வரவில்லை…
இங்கு இன்னுமொரு விடயத்தைக் கூறியாக வேண்டும், இது நான் இங்கு நண்பர்களுடன் ஒன்று கூடல்களுக்கு போகும் போது அடிக்கடி நடப்பது…யாராவது ஒருவனாவது கூறுவான் ‘நீங்கள் மச்சான் ஒரு மாதிரி படிச்சிடீங்கள் ஆனா நான் படிக்கேல்லை’ என்று. அவர்கள் சொல்லும் விதத்தில் தம்மை தாழ்வாக எண்ணுகின்றார்கள் என்பது புரியும். உண்மையில் இப்படி சொல்லும் அனேகமானவர்களிடம், செல்வம், செல்வாக்கு எல்லாமே இருக்கும், இருந்தபோதிலும் கல்வியைப் பற்றிய பிழையான புரிதலும், அதனால் வந்த தாழ்வு மனப்பான்மையும் அவர்களை வீணாக ஆதங்கப் பட வைக்கிறது…ஆங்கிலேயர்களுடன் வெளியில் செல்லும் போது ‘நீ என்ன படித்தாய், எந்தப் பல்கலைக்கழகம் சென்றாய்…’ என்ற கேள்விகழும் உரையாடல்களும் வருவதில்லை, ஆசிய நாட்டவர்களிடத்தேயே இப்படியான விவாதங்கள் அதிகம்…

இந்தப் ‘படிப்பு’ என்பது என்ன? யார் உண்மையாகப் ‘படித்தவர்கள்’? கல்வியின் உண்மையான நோக்கம் என்ன? பாடசாலை, பல்கலைக்கழகம் போனவர்கள் மட்டும்தான் படித்தவர்களா?
பிறப்பில் இருந்தே கற்றல் தொடங்குகின்றது, இறக்கும் வரை அது முடிவதில்லை! இயற்கை எமக்குக் கற்றுத் தந்தவை எவ்வளவு? எறும்பையும் தேனியையும் பார்த்து சுறுசுறுப்பையும், சேமிப்பையும் கற்றுக் கொள்ளவில்லையா? முயலும் ஆமையும் கதை, முயலாமையால் நடந்ததையும், மெதுவாக, திடமாகச் சென்றால் இறுதியில் வெற்றி என்பதையும் எமக்குச் சொல்லித்தரவில்லையா? இப்படி, எம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் சொல்லும் பாடங்கள் பல, நாங்கள்தான் கண்ணை மூடி எம்மை குருடர்களாக வைத்திருக்கின்றோம், பரந்திருக்கும் கல்வியை ஒரு சில இடங்களில் மட்டுமே தேடுகின்றோம்…

கல்வி என்பது எமது கண்களை, மனதை, மூளையை திறக்கும் ஒரு திறவுகோல் – பறவைக்கு சிறகு போல் ! சிறகை வைத்துக் கொண்டு பறப்பதும் பறக்காமல் விடுவதும் எம்மை பொறுத்தது. எம் முன்னே வரும் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, தற்போது இங்கிலாந்தில் செங்கல் தொழிலாளர்களின் (Bricklayers) ஒரு நாள் சம்பளம் £100 லிருந்து £400 வரை உயர்ந்துள்ளதாக கூறுகின்றார்கள், காரணம், அண்மைக்காலத்தில் கட்டிடங்கள் சம்பந்தமாக நடந்த சில விடயங்களால் அவர்களுக்கான தேவை (Demand) அதிகமாகியுள்ளது, பல பட்டம் பெற்றவர்களுக்கு கூட இந்தச் சம்பளம் இல்லை! பட்டம், அது இது அந்தஸ்து என்று பகட்டு பேசாமல் வேலை தெரிந்தவர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்…
நாம் எந்தத் துறையில் கல்வி கற்றாலும், ஏட்டுக் கல்வியுடன் முடித்துவிடாது அதை செயற்கையிலும் பயன்படுத்த வேண்டும், சில நேரங்களில் வித்தியாசமான நல்ல சந்தர்ப்பங்கள் வரும் போது எமது பாதையை மாற்றிக் கொள்வது நல்லதா என பரிசீலிக்க வேண்டும். பல வருடங்களாக படித்த டாக்டர் தொழில் பிடிக்காததால் அதை விட்டுவிட்டு முதலீடுகள் செய்து கோடிக்கணக்கில் பணமீட்டியவர்கள் பலர், வங்கி முதலீட்டாளர் வேலையை தூக்கி எறிந்துவிட்டு ஆசிரியர் தொழிலும் வேறு தொழில்களும் செய்பவர்கழும் உள்ளனர், இப்படி பல உதாரணங்கள் உள்ளன…
எம் கண் முன்னால் இருக்கும் வாய்ப்புகளை எத்தனை தடவை நாம் தெரியாமல் நழுவ விட்டிருக்கின்றோம்? இப்படியான வாய்ப்புகளை கண்டறிந்து அதை எமது வாழ்க்கைக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்ளும் திறனை நாம் வளர்த்துக் கொள்வது மிக அவசியமாகும்.

ஒரு உதாரணம், ஒரு அடர்ந்த காட்டின் நடுவே பிரசித்தி பெற்ற கோவில் ஒன்று இருந்தது. இந்தக் கோவிலுக்கு மணி அடிப்பதற்கு ஆள் தேவையென விண்ணப்பம் கோரியிருந்தார்கள். இந்த வேலைக்கு ஒரு வறிய குடியானவனும் விண்ணபித்திருந்தான். ஆனால் அவனுக்கு படிப்பு அதிகம் இல்லையெனக்கூறி அந்த வேலையை அவர்கள் கொடுக்கவில்லை. வேலை கிடைக்காத கவலையில் காட்டு வழியே நடந்து கொண்டிருந்த குடியானவனுக்கு பெருந் தாகம் எடுத்தது, ஆனால் அவன் எங்கு தேடியும் தாகத்தை தீர்க்க நீர் கிடைக்கவில்லை. இப்படித்தானே காட்டு வழியே கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் அவஸ்தைப்படுவார்கள் என நினைத்து அவன் ஒரு தேநீர்க் கடையை ஆரம்பித்தான். சிறிதாக ஆரம்பித்த அந்தக் கடை நாளடைவில் மிகப் பெரிதாகியது. இப்படி இருக்கையில் இந்த கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டி அதன் விழாவிற்கு ஒருவரை பிரதம விருந்தினராக அழைத்திருந்தனர். விழாவன்று பிரதம விருந்தினரை பார்த்த கோவில் தர்மகர்த்தாவிற்குப் பெரும் அதிர்ச்சி, காரணம், அந்த பிரதம விருந்தினர் வேறு யாருமல்ல, மணியடிக்க தகுதியில்லாத குடியானவன் தான் அவன்… தனக்கு நிகழ்ந்த அந்த கவலையான சம்பவத்தை நினைத்து கவலைப்பட்டு கண்ணீர் விடாது, கிடைத்த சந்தர்ப்பத்தை தன் முன்னேற்றத்துக்கு பயன்படுத்தி பெரிய செல்வந்தனானான் அந்தக் குடியானவன்.

கற்ற கல்வியை பல விதங்களில் பயன்படுத்தலாம், இந்த தொழில் சிறந்தது அந்த தொழில் சிறந்தது, அது பெரிது இது சிறிது என்று வீணாக ஆதங்கப்பட்டு வாழ்க்கையில் நிம்மதியை தொலைத்து விட கூடாது, சந்தர்பத்திற்கு ஏற்றாற்போல் வாழப் பழகிக் கொள்ள வேண்டும், செய்யும் வேலை எதுவானாலும் தாழ்வாக எண்ணாது, முழுமனத்துடனும் பெருமையுடனும் செய்ய வேண்டும்…

1,070 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *