நுரை மகுடம்.
உலகில் குடிமக்கள் ஆண்டு தோறும்
133 பில்லியன் லீட்டர் பியர் குடிக்கிறார்கள்.
– எஸ்.ஜெகதீசன் – கனடா
தண்ணீருக்கும் தேநீருக்கும் அடுத்து உலகெங்கும் அதிகமாக அருந்தப்படுவது பியராகும். உலகில் அதிகம் அருந்தப்படும் மதுபானமும் பியர்தான். உலக மொழிகள் அனைத்திலும் பியர் என்ற சொல்லுக்கு நிகரான சொல் இருப்பினும் இப் போதைக்கு பியர் என்ற ஆங்கிலச் சொல்லே மொழி பெயர்க்க விரும்பாத சொல்லாக சுதேசிகளுக்கும் வெறியூட்டுகின்றது. பியர் என்பற்கு தோப்பி என்ற பதம் தமிழில் இருந்தாலும் எவருக்கும் அதில் போதை ஏறியதாகத் தெரியவில்லை.
பார்லி, கோதுமை, சோளம், நெல் போன்ற தானியங்களிலிருந்து பெறப்படும் மாப்பொருளை நொதிக்க வைத்து பியர் தயாரிக்கப்படுகின்றது. பியருக்குரிய தனிச்சுவையான ஒருவித கசப்பை வழங்க ஹொப்ஸ் பூக்கள் (Hops flowers) சுவையூட்டிகளாக சேர்க்கப்படு வதுடன் அதன் காப்பு பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. மூலிகைகள் பச்சிலைகள் பழங்கள் போன்றன இப் பூக்கள் கிடைக்காதவிடத்தில் பாவிக்கப்படும்.
மதுப்பிரியர்களுள் பலர் பியரை மோகிப்பதற்கு அதன் மதுசார அளவே காரணமாக கூறப்படுகிறது. பொதுவாக 4மூ முதல் 6மூ வரை மதுசாரம் பியரில் காணப்படும்.சில வகைகளில் 1மூ க்கும் கீழாகவும் மிக அரிதாக 20மூ க்கு அதிகமாகவும் இருப்பதும் உண்டு. உலகில் மதுசார அடர்த்தி கூடுதலாக உள்ள பியர் ஸாம் அடம்ஸ் MM II. அமெரிக்க போஸ்டன் தயாரிப்பான இது 24மூத்துடன் விற்பனையாகின்றது. பிரேஸில் தாயாரிப்பான பிரம்மா (Brahma) பியர் மிக அதிகமாக உலகெங்கும் விற்கப்படுகின்றது. ஹெய்னிக்கன் (Heineken) கார்ல்ஸ்பேக் (Carlsberg) உலகெங்கிலும், மோல்ஸன் (Molson) லபாட் ப்ளு (Labatt Blue) கனடாவிலும், லயன் லாகர் (Lion Lager) இலங்கையிலும் மவுசு பெற்றவை.
ஏனைய மதுபானங்களை விட பியரில் வைட்டமின்கள் தாதுப்பொருட்கள் நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் நச்சு ரசாயனப் படிவுகள் குறைவாகவும் உள்ளதால் உடலுக்கு உற்சாகமும் எலும்பிற்கு வலுவும் சேர்வதாக ஆய்வுகள் நுரைக்கின்றன. எனினும் தினமும் பியர் குடிப்பவர்களின் முகம் சோபை இழப்பதும் மோகனாங்க வடிவம் குன்றுவதும் மனம்பாதிப்பதும் மூளை பிசங்குவதும் கசப்பான உண்மையாகும்.
உலகெங்கும் பியர் திருவிழா கொண்டாடப்படுவது உண்டு. 19 வயதுக்கு மேற்பட்ட மக்கள் வித்தியாசமான பியர் வகையை பார்வையிட்டு தமக்கு பிடித்தமானதில் மூழ்கி பின் உச்ச போதையில் எழுத்தெண்ணிப் பேசுவர்.அல்லது உச்ச ஸ்தாயியில் பாடுவதாக கோவையாக பேசுவர். பயன்படாத வார்த்தைகள் பயன்படும்.உடைந்த வார்த்தைகள் உற்சாக வார்த்தைகளாகும். பியர் மௌனத்தை துரத்தும்- மயக்கத்தை மனதில் கோதும்-அண்ட சராசரங்கள அசைக்கும் என்ற நம்பிக்கை அங்குள்ளோரிடம் கரைபுரளும். உற்சாகம் உல்லாசம் ஆரவாரம் அமளிதுமளி அழிச்சாட்டியம் போன்றவற்றால் திடல் நிரம்பி வழியும்.
சுமேரிய நாகரீகம் நின்க சி என்ற தெய்வத்தை பியருக்குரியதாக தோத்திரங்களால் அபிஷேகிக்கின்றது.கி.மு.9000 முதலே எகிப்து மெசபடோமியா பபிலோனியா பகுதிகளில் பியர் மயக்கமளிக்க, தண்டோடு கூடிய சிறு கருங்குவளை மலர்களே பழந்தமிழரின் பியரை ‘ஜில்லிட’ வைத்தன என கம்பர் உண்டாட்டுப் படலத்தில் தொன்மையைத் தெளிவாக்குகின்றார்.
உலகிலேயே ஆகக்கூடியதாக பெல்ஜியத்தில் 400 வகையான பியர் தயாரிக்கப்படுகின்றது. செக் குடியரசில் சேடாவார் என்ற ஆடம்பர பயணியர் விடுதி உண்டு. அங்குள்ள குளிக்கும் தொட்டி உட்பட எந்தக் குழாயை திருகினாலும் பியர் வருமாறு வடிவமைக்கப்பட்ள்ளது.
வயகரா கலந்த பியர் ஒன்று இளவரசர் வில்லியம்ஸின் திருமண நாளன்று எழுக வில்லி எனும் பெயரில் இரட்டை அர்த்தம் தொனிக்க லண்டனில் சந்தைப்படுத்தப்பட்டது. ஜேர்மனியில் 1040 ம் ஆண்டு முதல் அதாவது சுமார் 1000 வருடங்களாக தொடர்ந்து பியர் தயாரிக்கும் வடிசாலை இன்று வரை பிரபலமாகத் திகழ்கின்றது.
பியரின் அடர்த்தியை கரைத்து அதனை நீர்த்துப் போக வைத்து சுவையைக் கெடுக்கும் என்பதால் அதில் ஐஸ் கட்டிகளை சேர்ப்பதில்லை.
மது பானங்களை உறைய வைப்பதற்கு – 114 பாகை செல்ஸியஸ் தேவை. வீடுகளில் பாவனையில் உள்ள குளிர் சாதனப் பெட்டிகள் அதிக பட்சமாக – 23 பாகை செல்ஸியஸ் முதல் – 14 பாகை செல்ஸியஸ் வரையில் மட்டுமே குளிரூட்ட முடியும்
அனேகமான பியர் வகை கிளாஸில் ஊற்ற நுரை மேலேழும். நுரை கீழிறங்கும் அபூர்வ தயாரிப்புகளும் சில இடங்களில் உண்டு. பியர் போத்தல் நிமிர்ந்து நின்றால் நல்ல சகுனமாம். சரிந்திருப்பின் வாழ்வும் சரியுமாம். வெற்று மது கிண்ணங்களை பார்த்து மனதில் நிரம்பும் பயம் cenosillicaphobia,ஆகும்.
பியர் போத்தல் தத்துவம் (Beer Bottle Principle) என்று ஆங்கில பிரபல சொலவடை ஒன்று உண்டு.ஆரம்பம் ஆர்ப்பரிக்கும்.பின்பு அடங்கிவிடும் என்பது இதன் கருத்து. ஆவுஸ்திரேலியாவில் உள்ள எடித்கோவன் பல்கலை கழகம் இளமானி பட்டத்தையும் இங்கிலாந்திலுள்ள நாட்டிங்ஹாம் பல்கலை கழகம் முது மானி பட்டத்தையும் முறையாக பியர் தயாரித்து குடிப்பவர்களுக்கு… மன்னிக்கவும் படிப்பவர்களுக்கு வழங்குவதில் பிரபலமானவை.
ரத்தத்தை அழுதது போல கண்கள்சிவக்க குடிப்பவர்களால் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி பியர் தினமாக வெறியுடன் பருகப்படுகின்றது. குடித்தவர்கள் வெட்கப்படுதை அனுபவிக்கும் நாளாக அடுத்த நாள் hangover நாள் நெடி சிந்துகிறது! செப்டம்பர் 28, அகராதிக்கும் அப்பாற்பட்ட ஆறேழு சொற்களால் வாய்கொப்புளிக்கும் ‘வெறிக்குட்டியர்’ தினமாகும். தாயக கிராமங்களுக்கும் இவை பரவும்பொழுது அசிங்கமான வார்த்தைகள் ஒழுங்கைகள் முழுக்க ஒலமிடும்!
உலகில் ஆண்டு தோறும் 133 பில்லியன் லீட்டர் பியர் பருகப்படுகின்றது.
சீனா, அமெரிக்கா, ஜேர்மனி, ரஷ்யா, இங்கிலாந்து, பிரேஸில், கனடா, நெதர்லாந்து, ஆவுஸ்திரேலியா, ஜப்பான், மெக்ஸிக்கோ போன்ற நாடுகள் அதிகமான பியரைக் குடித்து உலகிற்கு ‘சியேர்ஸ்’ சொல்கின்றன.
1,136 total views, 6 views today