உப்புக்கருவாடு ஊற வைச்ச சோறு ஊட்டிவிடத் தோணுதடி எனக்கு
கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்.
கௌசி.யேர்மனி
~~கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம். இந்த கௌரவப் பிரசாதம். இதுவே எமக்குப் போதும். புளியோதரையும் சோறும் வெகு பொருத்தமா சாம்பாரும் பூரிக்கிழங்கு பாரு” இந்தச் சமையல் இலக்கியச் சமையலா? இல்லை காய்கறிச் சமையலா? இவை இரண்டும் இந்த உலகத்தில் மனங்கவரும் மந்திரங்களே. உயிரும் உடலும் உள்ளமும் வளர்க்கும் மகான்கள் இலக்கியச் சமையலையும் அடுப்படிச் சமையலையும் இரசிப்பார்கள். இச்சமையல் இக்கால கட்டத்திலும், பழந்தமிழ் இலக்கியங்களிலும் எவ்வாறு பேசப்படுகின்றது என்பதே இம்மாத சிந்தனை.
புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணுக்கு சொல்லும் அறிவுரைகளில் ஒன்று காலைவேளை எழுந்து வாசலிலே நீர் தெளித்துக் கோலம் போட்டு சமையல் வேலையைத் தொடங்க வேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால் அப்பன் பாட்டன் பெயர் கெட்டுப் போகும் என்பார்கள். குடும்ப வாழ்க்கைக்கு சமையல் முக்கியமாகப் பேசப்படுகின்றது. ஆனால், இன்று வாசலில் கோலம் போடுகின்றார்களோ என்னவோ யூரியூப் பார்த்து சமையலில் சப்பைக் கட்டு கட்டுகின்ற இளையவர்களை நாம் காண்கின்றோம்.
இன்று உலகநாடுகளின் அனைத்துப் பண்டங்களும் இளையவர்கள் அடுக்களையில் காணப்படுகின்றன. அம்மா கைப்பக்குவத்தை விட யூரியூப் சமையல் குறிப்புக்கள் அடுக்களையில் ஆர்ப்பாட்டமாக இருக்கின்றன. அரிசியும் பருப்பும் அளவாய் இருந்தால், அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள் என்பது மாறி கைத்தொலைபேசியும் இணையத் தொடர்பும் இருந்தால் ஐந்து வயதுப் பெண்ணும் ஆக்கிப் போடுவாள் என்றாகி விட்டது. சமைப்பது மட்டுமல்ல சமைத்த உணவு இன்ஸ்ரகிராம் எல்லாம் வண்ணம் வண்ணமாய் காட்சிப்படுத்தப்படுகின்றது. திரௌபதி கையிலிருந்த அட்சயபாத்திரத்தில் அள்ள அள்ளக் குறையாது உணவு வந்து கொண்டிருந்தது போல் யூரியூபில் பார்க்கப் பார்க்க குறையாத சமையல் குறிப்புக்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இச்சமையலிலே நிற்பன, நடப்பன, ஊர்வன, பறப்பன, பறிப்பன, தோண்டி எடுப்பன என விதம் விதமாக பல் நாட்டுக் கலாச்சார உணவுகளும் பரிமாறப்படுகின்றன. இதில் தமிழன் பண்பாட்டின் ஓர் அம்சமான விருந்தோம்பலும் இடம்பெறுகின்றது. அந்தக்கால சமையல் முறைகளை சங்க கால இலக்கியங்களான பெரும்பாணற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, போன்ற பாடல்களிலும், நாலாயிர திவ்யபிரபந்தம், பெரியபுராணம் எனப் பல நூல்களில் பாடல்கள் மூலமாக விளக்கியிருக்கிறார்கள். சங்கக்காலத்தில் சோற்றை அடிசில், அயனி, அவிழ், கூழ், சொன்றி, நிமிரல், புழுக்கல், புன்கம், பொம்மல், மிதவை, மூரல் என்ற சொற்களினால் பயன்படுத்தியுள்ளார்கள். வரகரிசி, தினையரிசி, புல்லரிசி, மூங்கிலரிசி போன்ற அரிசி வகைகளை உண்டிருக்கின்றார்கள்.
அகநானூற்று 393 ஆவது பாடலிலே வேங்கட மலையில் வாழ்ந்த இடையர்கள் விருந்து படைக்கும் முறை அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. நீண்டு வளர்ந்த காதுகளுடைய இடையர் குல பெண்கள், கொல்லையில் உள்ள வரகினை எடுத்து வந்து, உலக்கையில் போட்டு குற்றி, உமியைப் போக்கி சுளகினால் கொழிக்கப்பட்ட வெண்மையான வரகரிசியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்தனர். மண்ணால் செய்த பானையில் அருவியில் இருந்து விழும் சுனை நீரை ஊற்றி, அந்த அரிசியைப் பின்பு சோறாக்கித் தாம் உண்டதுடன் வழிப்போக்கர்களுக்குக் கொடுத்துள்ளார்கள்.
~~வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை
முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை
பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ
வெண்புடையக் கொண்ட துய்த்தலைப் பழனின்
இன்புளிக் கலந்து மாமோ ராகக்
கழைவளர் நெல்லின் அரியுலை ஊழ்த்து”
என்னும் வரிகளிலே மானுடைய கொழுப்பான பகுதியில் சமைக்கப்பட்ட கறியும், பன்றிக் கறியும், உடும்புக் கறியும் சமைத்து அத்துடன் புளியும் மோரும் சேர்த்துச் சமைத்த மூங்கில் அரிசிச் சோறும் சேர்த்து விருந்து கொடுத்ததாக இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார் குறிஞ்சிநில விருந்து பற்றிப் பாடியுள்ளார்.
மன்னன் தன்னிடம் வந்த வறிய பாணனுக்கு செம்மறி ஆட்டின் இறைச்சியை தணலில் வாட்டி அந்த இறைச்சியுடன் முல்லை மொட்டுப் போன்ற அரிசிச் சோற்றையும் அவன் கழுத்துவரை நிறையும் படி உண்ணக் கொடுத்தான் என்று பொருணராற்றுப் படையிலே ஒரு பாடல் இருக்கின்றது. உடும்பு இறைச்சிக் கறியுடன் சிவப்பரிசிச் சோற்றை உண்டதாக பெரும்பாணாற்றுப்படையில் ஓர் பாடல் எடுத்துரைக்கின்றது
முல்லைநில மக்கள் வரகரிசிச் சோறும் அவரைப் பருப்புக் கூட்டும் உண்டதாகவும் மருதநில மக்கள் வெள்ளை அரிசிச் சோறும் நண்டுக் கறியும் ஏழைகளுக்கு உண்ணக் கொடுத்ததாக சிறுபாணாற்றுப் படை எடுத்துக் காட்டுகின்றது. இது இவ்வாறாக இருக்க கடலும் கடல் சார்ந்த பகுதியிலும் வாழ்ந்த மக்கள் கள்ளும் குழல் மீனின் சுட்ட கருவாடும் விருந்தினருக்குப் படைத்திருக்கின்றார்கள்.
நெய்தல் நில மக்களுடைய இவ்வுணவு வைரமுத்துவின் உப்புக்கருவாடு ஊற வைச்ச சோறு ஊட்டிவிடத் தோணுதடி எனக்கு” என்னும் பாடலும் கங்கை அமரன் வரிகளில் நித்தம் நித்தம் நெல்லுச் சோறு நெய் மணக்கும் கத்தரிக்கா நேத்து வச்ச மீன் குழம்பு என்னை மயக்குதையா, பச்சரிசிச் சோறு உப்புக் கருவாடு சின்னமனூரு வாய்க்கால் சேறு கண்ட மீனு” என்னும் பாடலும் நெஞ்சுக்குள் நிழலாடுகின்றது.
இவ்வாறு பீட்ஸாவும் பேர்கரும் விலைப் போகும் காலத்திலே இன்னும் இலக்கியப் பெண்கள் போல் காணொளிச் சமையல் பெண்களும் வாழுகின்றார்கள்
1,403 total views, 6 views today