நமது பூமி எதிர்த்திசையில் சுழன்றால் என்ன நடக்கும்?
நமது பூமி தோன்றிய நாள் முதல் இன்று வரை மேற்கிலிருந்து கிழக்கை நோக்கிச் சுழன்றுகொண்டு இருக்கிறது. இதே பூமி திடீரென்று அதன் சுழற்சியை எதிர்த்திசைக்கு மாற்றிவிட்டால், அதாவது கிழக்கிருந்து மேற்கை நோக்கிச் சுழன்றால் என்ன நடக்கும்? அதனால் நம் பூமியில் வாழும் உயிரினங்களுக்கு ஏதும் பாதிப்பு இருக்குமா?
ஒன்றை மட்டும் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகின்றேன். இவ்வாறு நமது பூமி தனது சுழற்சியை எதிர்த்திசைக்கு மாற்றி விட்டால், நமது பூமி அடையாளமே காணாதவாறு மாறிவிடும். அது ஏன் என்பதைப் பார்ப்பதற்கு முன்பு, நமது பூமி அதி வேகத்துடன் தன்னைத் தானே சுற்றி வருகின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா? 460 அஃள அதாவது ஒரு நொடியில் மட்டுமே 460 மீட்டர் அல்லது ஒரு மணி நேரத்தில் 1.656 கிலோ மீட்டர் சுற்றி வருகின்றது. இவ்வாறு வேகமாகச் சுற்றும் பூமி திடீரென்று தனது திசையை மாற்றி எதிர்த்திசையில் சுழன்றால் விபரீதமான சூறாவளிகளும், பேரலைகளும் ஏற்படக்கூடும். இந்த இயற்கைப் பேரழிவைத் தாங்கி நிற்கப் பூமியின் மேற்பகுதியில் எதற்கும் சக்தி கிடையாது. அதாவது கட்டடங்கள், உயிரினங்கள் போன்று அனைத்தும் உடனடியாக அழிந்துவிடும். அவ்வளவு தான். கதை முடிந்துவிடும்.
சரி, தற்போது பூமியின் சுழற்சியின் திசை மாறினால் அழிவு நிச்சயம் என்பது புரிந்திவிட்டது. ஆனால் நமது கற்பனையைச் சற்று தூண்டித் தான் பார்ப்போமே? நமது பூமி, தோன்றிய காலத்திலிருந்தே மேற்கிலிருந்து கிழக்கை நோக்கிச் சுழலாமல் கிழக்கிருந்து மேற்கை நோக்கிச் சுழன்றிருந்தால் எப்படி இருந்திருக்கும்? இது மிகவும் சுவாரசியமாக இருந்து இருக்கும். ஏன் தெரியுமா? சூரியனும் சந்திரனும் மேற்கில் தோன்றி கிழக்கில் மறைந்திருக்கும். இதைத் தவிர்த்து நமது பூமி இன்னும் பச்சைப் பசேலென்று இருந்திருக்கும். இதற்குக் காரணம் பரந்து காணப்படும் சமுத்திரங்கள் தான். இவை நமது பூமியின் காலநிலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, குறிப்பாகச் சூரியனின் வெப்பத்தைப் பூமி முழுவதும் பரவ உதவும். பூமியின் சுழற்சி மாறினால் சமுத்திரங்கள் அசையும் திசைகளும் முற்றிலும் மாறி சூரிய வெப்பத்தை வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லும். உதாரணத்திற்கு தற்போது காணப்படும் பாலைவனங்கள் பிரேசில் மற்றும் தென் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இடம் மாறிவிடும். தொடர்ந்து மேற்கு ஐரோப்பாவில் இருக்கும் நாடுகள் மிகவும் குளிரான நாடுகளாகி விடும். இதுவே ரஷ்யா வெப்பம் கூடிய நாடாக மாறிவிடும். அது மட்டும் இல்லாமல் நமது காற்று மண்டலத்தில் காணப்படும் இரசாயன பொருட்களின் அளவு வேறுபட்டு இருப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. இதன் விளைவால் பூமியில் உயிரினங்கள் தோன்றுவதற்கான முன் நிபந்தனைகள் இல்லாமல் கூட இருந்திருக்கலாம். ஆகவே ஒரு சிறிய மாற்றம் எவ்வாறு ஒரு பெரிய விளைவை ஏற்படுத்தியிருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக இருக்கிறது. இது சுவாரசியமாக இல்லையா?
நண்பர்களே, எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும் என்பது போல் நமது பூமி எவ்வாறு தோன்றியதோ, அதனால் தான் நீங்கள் இன்று இந்த உலகில் வாழ்ந்து நான் எழுதிய இந்தக் கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கிறீர்கள். அன்று மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால், நாம் அனைவரும் தோன்றியிருப்போமா என்பதே கேள்விக்குறியாகி விட்டிருக்கும்.
1,485 total views, 6 views today