விபத்திற்கு காரணம் சிவப்பு அல்ல வெள்ளையே !
- மாதவி
கார்கள் மோதிக்கோண்டது. என்ன நடந்தது ஏது நடந்தது ஏதும் புரியவில்லை. ஒரு செக்கன் கவனித்திருந்தால் தவிர்த்து இருக்கலாம். வீட்டில் மனிசி வெளிக்கிடும் போது எப்ப பார்த்தாலும் ஒரு வெள்ளைச் சேட்டு, என்ன இன்ரவிக்கே போறியள். கடைக்குப்போறதிற்கும் நீங்கள் இப்படியே போகவேண்டும்.
தோய்த்து மினுக்க, நான் இருக்கிறேன், ஒரு ஐந்து நிமிடம் தான் பிந்தும், உதை மாத்தி இதைப்போடுங்கோ என்று கத்தினவ, நான் கேட்கவில்லை. வாழ்கையில் ஒருக்கால் இந்தச் சின்ன விடையத்தை கேட்டு இருந்தால் கூட, இந்த விபத்து நடந்திராது. ஒரு செக்கனில் மோதிய கார் ஒரு ஐந்து நிமிடம் முந்திப்; போயிருக்கும். இப்படி நான் யோசிக்க, என்னோடு மோதின கிழவி இப்படி யோசித்து இருந்தால்….
ஆட!நாய் குலைக்க, குலைக்க, வீட்டில் கட்டிப்போட்டு வந்திட்டன், ஒரு ஐந்து நிமிடம் மினைக்கெட்டு, நாயை அவிட்டு விட்டிருந்தால் இந்நேரம்;, அது இப்ப என்னோடு வந்திருக்கும். நான் மோதிய காரும் ஒரு ஐந்து நிமிடம் முன்னால போயிருக்கும்.
ஆட! அப்படி என்றல் எப்படியும் இந்த விபத்து நடந்தேதான் இருக்கும். இப்பவும் நேரக்கணக்கு ஒரே விபத்துப் புள்ளியில் அல்லவா வந்து நிற்குது. இதைத்தான் வீதியில் எமக்கு எழுதப்பட்ட விதிக்கணக்கு என்று சொல்வதா? நல்ல வேளை, எவருக்கும் காயம் இல்லை. ஆனால் இருவரது காருக்கும் காயம் படதா இடமே இல்லை.
5 நிமிடத்தில் பொலிஸ் வந்திட்டுது. அடிபட்ட நாம் வெளியில் நிற்கிறோம். அவர்கள் அடிபட்டு நொருங்கிய காருக்குள் எம்மைத் தேடுகிறார்கள். நாம் அடிபட்டதும் இறங்கி வெளியே வந்திட்டோம் உள்ளே இருக்கப்படாது கார் எரியலாம் அல்லவா என்று பேரன், பொலிசுக்கு சொல்லி முடித்தான். மற்றக்காருக்குள் வயதான அந்தக் கிழவி இறங்கவே இல்லை, ரெலிபோனை நோண்டியபடி இருந்தா. தன் மகனை வரச்சொல்லி எடுக்கிறா போலை!
இதற்கிடையில் பொலீஸ் விசாரனை தொடங்கியது. எனக்கு எந்த நாட்டிலை பொலிஸ் மறிச்சாலும், இந்திய பொலீஸ்தான் வந்து பயப்படுத்தும். தினமும் பார்க்கும் படங்களில், இந்த இந்தியப் பொலீசுடன் தானே வாழ்கின்றோம்.
பொலிஸ் கேட்க முதலே ‘நான்தான் சிக்னல் லைட்டில சிவப்பில எடுத்திட்டேன்’ என்று உள்ளதைச் சொன்னேன். பொலீசை விட பேரனை பக்கத்தில் வைத்துக்கொண்டு பொய்சொல்ல முடியாது. ஒவ்வொரு தாத்தாக்களுக்கும் பேரன் பேத்திகள், மனச்சாட்சி மாதிரி.பேரப்பிள்ளைகள் உள்ளவர்களுக்கு நன்குபுரியும்.
உடனடியாக கொரோனா காலம் என்பதையும் மறந்து, பொலீஸ் என்னை ஒரு மிசினுக்கு முன்னால் ஊதச்சொன்னார். ஊதினேன். அல்ககோல் ரெஸ்ராம், நான் பாஸ் என்றான் பேரன். அட நான் வாழ்க்கையிலே குடித்ததில்லை என்றேன்.
அவன், தாத்தா இப்ப குடித்திருக்கிறீர்களா என்பதுதான் அவர்களுக்கு முக்கியம். சரி நீங்கள் போதையில் ஓடவில்லை, நல்லது என்றபடியே பதிவு செய்வதை தொடர்ந்தார்கள்.
ஒரு கார் படக்கென்று அருகில் வந்து நின்றது. நல்ல தடியன் ஒழுங்கில்லாத தாடியும். உடம்பு முழுக்க பச்சையும் குத்தி இருந்தான்.விறு விறு என்று அடிபட்ட மற்றக்காருக்குள் சென்றான். பொலீஸ் இவர் அடிபட்டு நிற்கும் அந்த மனிசியின் மகன் என்றான். எனக்கு மீண்டும் திரைப்படங்கள் பல மனதில் ஓடியது. இப்ப படத்தில் வரும். வில்லன் போல் வருகிறான். நான் மெல்ல பொலிசுக்கு பின்னால் மறைகிறேன். அவனோ பொலிசை விலத்தி என்னிடம் ஒரு கேள்வி என்றான். எனக்கு திக் என்றது.
‘குடிச்சிட்டு போதையில் என் தாயுடன் மோதி நீங்களா’ என்றான். நான் இல்லை என்பதற்கு முன்பே, பொலிஸ் இல்லை அவரை ரெஸ்பண்ணியிட்டோம், அவர் குடிக்வில்லை எனப் பதில் சொன்னார். உடன் செயல் இழக்கச் செய்த பாம் போல் சிரித்தபடி, எனக்கு கை தந்துவிட்டு திரும்பினான். பச்சை குத்தினவன் எல்லாம் பச்சை ரவுடி என்ற தோற்றம் மறைந்தது. விபத்து எப்பவும் வரலாம். யாருக்கும் வரலாம், ஆனால் போதையில் வரப்படாது,என்பதையே அவன் பச்சையாகக் குத்திச் சென்றான். இவ்வளவும் முடிந்து இப்பதான் மனிசிக்கு போன் செய்தேன்.
மறு முனையில் ‘அக்சிடன்ரா! நான் அப்பவே சொன்னேன் ஒரு ஐந்து நிமிடம் உந்த வெள்ளை சேட்டை மாற்றிப்போட்டு போயிருந்தால் இப்ப உந்த அக்சிடன் நடந்திருக்குமா’ என்றா. அட நான் நினைத்ததைத்தான் அவளும் நினைத்து இருக்கிறாள்.
968 total views, 6 views today