தாயம் தரும் ஆதாயம்!

கௌசி.யேர்மனி

சூதும் வாதும் வேதனை செய்யும்|| என்பது கொன்றை வேந்தன் சிறுவயதில் எமக்குக் கற்றுத் தந்த பாடம். சூதாடுதலும் தேவையற்ற வாக்குவாதம் செய்தலும் துன்பத்தையே தரும் என்று கூறப்பட்ட கருத்துக்கு மகாபாரதம் ஒரு எடுத்துக்காட்டாகக் காணப்படுகின்றது. தருமன் சூதாட்டத்திலே தன்னுடைய நாடிழந்து, மானம் இழந்து, மனைவியுடனும் தம்பியருடனும் காட்டுக்குப் போன கதை யாவரும் அறிந்ததே. இந்தக் கதையின் களம் தமிழ்நாடாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், இது நாம் கற்ற பாடமாக இருக்கின்றது. பந்தயப் பொருள் வைத்து ஆடுகின்ற போது வஞ்சிக்கும் எண்ணம் தோன்றலாம். ஆசையை மீதப்படுத்தலாம். இதனாலேயே குதிரை ஓட்டம், சீட்டாட்டம், (சூதாட்டம்) தாயம் போன்றவை அச்சத்தைத் தரும் விளையாட்டுக்களாகக் கருதப்படுகின்றன. சங்க இலக்கியத்தில் பரத்தை தன் மகளிடம் ~~தீயவர் செல்வம் ஒழிய நம்மையும் கள்ளையும் சூதையும் நான்முகன் படைத்தாவாறே|| என்று சொல்கின்றாள்.

இருந்தும் இன்றும் கூட கேளிக்கைகள் கொண்டாட்டங்களிலே சீட்டுக்கட்டுடன் சீட்டாட ஆயத்தமா கின்றவர்களையும் தாயமாடி அந்தச் சத்தத்தினால் வீட்டை இரண்டாக்குபவர்களையும் காணக்கூடிய தாகவே இருக்கின்றது. இங்கு இவை களிப்பூட்டும் விளையாட்டுக்களாக காணப்படுகின்றன. இவ்விளையாட்டுக்கள் எந்தப் பந்தயப் பொருளையோ பணத்தையோ வைத்து விளையாடுபவை அல்ல. இதைவிட இக்கொரொனா காலப்பகுதியில் வீட்டுக்குள் இருந்து விளையாடுவதற்கு ஏற்ற விளையாட்டுக்களாக இவை இருக்கின்றன. இவற்றில் தாயம், என்றும் தாயக்கட்டை என்றும் விளையாடுகின்ற விளையாட்டை எடுத்து நோக்கினால், இது ஒரு விடயத்தில் கவனம் செலுத்துகின்ற ஒரு பயிற்சி விளையாட்டாகவும், மூளைக்கு நல்ல பயிற்சி அளிக்கும் விளையாட்டாகவும், ஆளுமைப் பண்பை மனதில் பதித்து தலைமைப் பண்பைக் கொண்டுவரும் ஒரு விளையாட்டாகவும் கருதப்படு கின்றது.

~~தாயமும் தாரமும் தருவேன் உனக்கு|| என்று இராமன் சுக்கிரீவனிடம் கூறுகின்றான். அதாவது தலைமையோடு உன்னுடைய தாரத்தையும் தருகின்றேன் என்னும் போது தiலைமைப் பண்பை தாயம் என்னும் சொல் எடுத்துக் காட்டுகின்றது. தாயக்கட்டை உருட்டுகின்ற போது அதில் கவனம் செலுத்தி அதில் விழுகின்ற எண்ணிக்கையை எடுத்து முழுக்கவனத்தையும் செலுத்தி, எந்தக் காயை எந்த இடத்திற்கு நகர்த்த வேண்டும் என்ற புத்தியை சரியான முறையில் செலுத்தி அந்தக் காயை நகர்த்த வேண்டும். அந்தக் காய்க்கு குறி வைத்திருப்பவர்களின் கண்களைக் கட்டி முன்னேறிச் செல்லும் போது ஒவ்வொருவராக விழுத்த வேண்டும். இறுதியில் அக்காய் வெற்றிக்கனியாக முடி சூட்டும் போது அக்கனி தலைமைக் கனியாகின்றது. இங்கு எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுகின்ற போது தலைமையைப் பெறுகின்ற ஆளுமையை பெறலாம் என்னும் உணர்வு ஊட்டப்படும் மதிக்கூர்மையுள்ள விளையாட்டாகக் காணப்படுகின்றது.

இக்காலத்தில் விளையாட்டுத் தொடங்கும் முன் தாயம் என்று 1 விழுத்த வேண்டும். ஒன்று விழுத்தும் வரை விளையாடுபவர்கள் விளையாட்டைத் தொடங்க முடியாது. தாயக்கட்டைகளை ஒவ்வொரு முறையும் உருட்ட வேண்டும். ஆனால், சங்ககாலத்திலே முதலில் 5 விழுத்த வேண்டும் என்று அதன் விளையாட்டுக் கட்டுப்பாடு இருந்திருக்கின்றது. இக்காலத்தில் 6 விழுந்தால் திரும்பவும் தாயக்கட்டைகளை வீசுவதற்கு அனுமதி உண்டு. அக்காலத்தில் 10 விழுந்தால் மறுபடியும் ஒருமுறை கையாட்டமாக உருட்டி அந்த எண்ணிக்கையையும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், அக் காலத்தில் விளையாட்டிலே பத்து என்ற எண்ணிக்கையை பெற்றவன் மனம் மகிழ்வதை கலித்தொகை 136 ஆவது பாடலிலே

முத்து உறழ் மணல் எக்கர் அளித்தக்கால், முன் ஆயம்
பத்து உருவம் பெற்றவன் மனம் போல, நந்தியாள்
அத் திறத்து நீ நீங்க, அணி வாடி, அவ் ஆயம்
வித்தத்தால் தோற்றான் போல், வெய் துயர் உழப்பவோ?

முத்துப் போன்ற மணலில் நீ என் தலைவிக்கு அருள் செய்தாய். அப்போது அவள் கவறு விளையாட்டில் பத்து எண்ணிக்கை உருவம் பெற்றவள் போல மகிழ்ந்தாள். அவளை விட்டுவிட்டு நீ நீங்கியபோது அவள் வாடி அந்த ஆயத்தாரின் தந்திரத்தால் தோற்றவர் போல துன்பத்தில் உழல்கின்றாள். இப்படி அவள் உழலலாமா? என்று தாய விளையாட்டில் பெறுகின்ற இன்பத்தைத் தலைவனில் பெற்ற இன்பத்தில் ஏற்றி இப்பாடல் பாடப்பட்டுள்ளது.
சிறுதாயம் விளையாட்டிற்குப் புளியங்கொட்டைகள் பயன்படுத்தப்பட்டன. வெள்ளை நிறமாக அப்புளியங்கொட்டைகள் வரும் வரை கல்லின் மேல் அல்லது கெட்டியான தரையின் மேல் ஒரு பக்கமாகத் தேய்ப்பார்கள். சிலர் புளியங்கொட்டைகளைத் தேய்ப்பதற்குப் பதிலாக இரண்டாகப் பிளந்து கொள்வார்கள். நான்கு புளியங்கொட்டைகளை ஒரு பகுதி வெண்மையாகவும், மறுபுறம் கருமை நிறம் உள்ளதாகவும் இருக்கும்படி தாயக் கொட்டையைத் தயாரித்துக்கொள்கின்றனர். புளியங்கொட்டையைக் குலுக்கித் தரையில் போடும் போது விழும் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள்.

~~நறு வீ தாழ் புன்னைக் கீழ் நயந்து நீ அளித்தக்கால்,
மறுவித்தம் இட்டவன் மனம் போல, நந்தியாள்
அறிவித்து நீ நீங்கக் கருதியாய்க்கு, அப் பொருள்
சிறுவித்தம் இட்டான் போல், செறிதுயர் உழப்பவோ?

புன்னை மரத்தடியில் நீ இவளுக்கு அளி செய்தாய். அப்போது அவள் மறுவித்தம் அதாவது மறு தாயம் பெற்றவள் போல மனம் மகிழ்ந்தாள். நீ பொருளீட்ட நீங்கக் கருதியபோது அப்பொருள் சிறுவித்தம் பெற்றவள் போல செறிந்த துயரில் வருந்துகிறாள். இவள் இப்படி வருந்தலாமா? என்று தோழி தலைவனிடம் கேட்கின்றாள். சிறு வித்தம் என்றால் விரும்பாத எண்ணிக்கை என்பது பொருள்.
எனவே வாழ்வியலை புலப்படுத்துகின்ற இலக்கியங்கள் தாம் விளையாடுகின்ற விளையாட்டுக்களைக் கூட தம்முடைய பாடல்களில் கொண்டு வந்திருப்பது புலப்படுகின்றது.

1,030 total views, 12 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *