என்ன வைத்திருக்கிறோமோ அது நாகரிகம், என்னவாக இருக்கிறோமோ அது பண்பாடு.
கௌசி. சிவபாலன் யேர்மனி
இன்று உலகம் முழுவதும் பரவலாகப் பேசப்படும் கருப்பொருள் பெண் அடிமை, பெண் சுதந்திரம். இது ஏன் பேசப்படுகின்றது? இது இன்று தேவைதானா? என்ற கேள்வி பலர் மத்தியில் இருக்கின்றது. இதற்கு விடைதேடும் வினாக்கள் எனக்குள்ளும் எழுகின்றன. பெண் சுதந்திரம், பெண் விடுதலை என்ற சொல்லாடலை உடைத்தெறியும் கருவி மனித மனங்களிலேயே இருக்கின்றன. மனிதத் தோற்றக் காலங்கள், தன்னடக்கம், மன அடக்கம், இருபால் வேற்றுமை இன்மை, எதிர்பாலார் பற்றிய புரிந்துணர்வு, காதல் காமம் பற்றிய புரிதலும் அவசியமும் போன்றன மனித மனதில் ஆழாக ஊறியிருந்தால் அன்றி இவ்வார்த்தைகளை நாம் எடுத்தெறிய முடியாது.
பண்பாடு கலாசாரம் என்ற போர்வையிலே அதீதமாகப் பெண்களைப் புகழ்வது போல் புகழ்ந்து அடிமைத் தனத்தை ஏற்படுத்துவது கண்கூடு. மக்களது அறிவுநலம், கருத்து நலம், குணநலம், கொள்கை நலம், ஒழுக்க நலம், வாழ்க்கை நலம் முதலியன மேலும் மேலும் வளர்ந்து திரிந்து வரும் முறையையே மேத்யூ ஆர்னால்ட் பண்பாடு என்கிறார். மனம், ஆன்மா ஆகியவற்றின் அகநிலையைத் தருகின்ற நிறைவைப் பற்றிப் படிப்பது என்கிறார். என்ன வைத்திருக்கிறோமோ அது நாகரிகம், என்னவாக இருக்கிறோமோ அது பண்பாடு. எம்முடைய நாகரிகமும் பண்பாடும் உலகமயமாக்கலினால், கலந்துபட்டுக் கிடக்கிறது. இந்த காலகட்டத்தில் பெண்மையை ஒரு போகப்பொருளாகக் காணும் ஆண்வர்க்கத்தின் மனநிலை மாற்றப்பட வேண்டியது அவசியம். தற்போது பெண்களின் காலப் படிமுறைகளைச் சற்றுப் பின்னோக்கிப் பார்ப்போம்.
மனிதஇனம் தோன்றி நாடோடியாகத் திரிந்து உணவுப் பொருள்களைச் சேகரித்த நிலையிலிருந்து மாறி உணவுப் பொருள்களை ஒரு இடத்திலே தங்கி உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது பெண்களே நிலாக்கிழார்களாக நில வேளாண்மை நடத்தியவர்களாக காணப்பட்டனர். இதனாலேயே பூமியைப் பூமாதேவி என்று சொல்லும் வழக்கம் இருந்தது. பெண்களின் உயிர்ப் போக்கற்ற இரத்தப்பெருக்கு, கர்ப்பக் காலங்கள் போன்றவை காடு, மேடு சுற்றித் திரிவதற்கு இடையூறாக இருந்த காரணத்தினால், இயற்கை அவர்களுக்கு அளித்த வரத்தை உற்பத்திப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தி நிலக்கிழார் ஆகினர். அக்காலகட்டத்தில் தாய்வழி சமுதாயமே இருந்தது. தாய்வழி சமுதாயத்திலே காதுகுத்தும் விழா, பூப்பு நீராட்டுவிழா, திருமணவிழா போன்ற விழாக்களில் தாய்மாமனுக்கே முதலுரிமை வழங்கப்பட்டது. தாய்ப்பெயரைப் பெண்களுக்கு முதல் பெயராக வைத்தல், தாய்த்தெய்வ வழிபாடு முதன்மையாகவும் காணப்பட்டன. முருகனை கொற்றவை சிறுவன் என்று அழைக்கப்பட்ட நிலைமை பிற்கால சங்ககாலத்திலே தந்தைவழி சமுதாய அமைப்புத் தோன்ற முருகனைப் பெற்றவள் வழிபாடாக மாறியது. அக்காலத்தில் ஆண்களின் ஆதிக்கம் முற்றாக இல்லாத காரணத்தினால், காதல் திருமணங்கள் சிறப்புற்று இருந்தன. அன்று தவமிருந்து பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த மரபினை
~~குன்றக் குறவன் கடவுள் பேணி
இரந்தனன் பெற்ற எல்வளைக் குறுமகள்
ஆயரி நெடுங்கண் கலுழச்
சேயகால் தெய்ய நீ பிரியும் நாடே||
என்ற ஐங்குறு நூற்றுப்பாடல் எடுத்துக் காட்டுகின்றது. வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்த நிலைமை அக்காலத்தில் இருந்ததில்லை. பெண்கள் தினை புலங்காத்தல், உப்பு, மோர், மீன் போன்றவை விற்றமை, கணவனுடன் சேர்ந்து மது அருந்துதல் (ஐரோப்பாவில் இன்று றiநெ அருந்துதல்) ஆண்களுடன் சேர்ந்து கைகோர்த்து விளையாடுதல், கடலில் காதலனுடன் சேர்ந்து நீராடுதல் நிலத்தொழில் செய்தல், போர்க்களம் செல்வது போன்று ஆணுக்கு நிகராகப் பெண்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்று இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இதனை
துணைப் புணர்ந்த மட மங்கையர்
பட்டு நீக்கித் துகில் உடுத்தும்,
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும்,
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்,
என பட்டினப்பாலை சான்று பகர்கின்றது. திருமணம் செய்கின்ற போது மணமகன் மணமகளின் பெற்றோருக்கு முலைக்கூலி வழங்கப்பட்ட.து. அந்த அன்பளிப்பை வழங்கியமை அகநானூறு புறநானூறு ஆகிய பாடல்களில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
~~முழங்கு கடல் முழவின் முசிறியன்ன
நலம்சால் விழுப் பொருள் பணிந்து கொடுப்பினும்
புரையர் அல்லோர் வரையலள் இவள் எனத்
தந்தையும் கொடா அன்||
இவ்வாறு மணமகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்க முடியாத மணமகன் அவர்களுடைய வீட்டிலே இருந்து தொண்டு செய்து தான் கொடுக்க வேண்டியதை தொண்டின் மூலம் ஈடு செய்வதுண்டு. இம்முறை ஆரிய வருகையின் பின் வரனுக்குரிய காணிக்கை வரதட்சணை என்றும் ஸ்ரீதனம் எனப்படும் பெண்ணோடு கொடுக்கப்படும் பொருள் சீதனம் என்றும் ஆணுக்குப் பெண்வீட்டார் கொடுக்க வேண்டும் என்னும் முறை வழக்கத்தில் வந்தது.
வட இந்தியாவில் இருந்து தென்னிந்தியா புகுந்த சைன மதத்தினராலேயே பெண்ணடிமை தலைதூக்கியது எனலாம். பெண் நேராக வீடுபேறு அடைய முடியாது. பெண்பிறவி இழிபிறவி என்றெல்லாம் வன்மத்தை ஏற்படுத்தினர். அதன் பின் வந்த வேத ஆரியர்கள் கூட ஆணுக்கு நிகராகப் பெண்ணைப் போற்றிப் பார்க்கும் பக்குமற்றவர்களாகவே இருந்தார்கள். பெண்கள் இளமைக்காலத்தில் பெற்றோரையும் பின் கணவனையும் அதன் பின் பிள்ளைகளையும் சார்ந்தே வாழ வேண்டும் என்ற நிலை உருவாகியது. தாய்வழி சமுதாயம் தந்தை வழிச் சமுதாயமாக மாற்றம் பெற்றது. அக்காலகட்டத்திலிருந்து விதவைகள் மறுமணம் செய்யக் கூடாது, கணவன் இறந்தபின் தீக்குளித்து உயிர்விடுதல், எட்டு வயதுப் பெண் பிள்ளைக்கும் திருமணம் செய்வித்து அவள் உயர்ச்சியைத் தடுத்தல், ஆண்கள் பல பெண்களைத் திருமணம் செய்வதற்குத் தடையில்லை. போன்ற அடக்கு முறைகள் ஆரம்பமாயின.
இன்றைய நிலையில் மெல்ல மெல்ல இந்த முறைகள் திரும்பவும் மாற்றம் பெற்று வந்திருப்பதை நாம் உணரக்கூடியதாக இருக்கின்றது. பெண்கள் தம்முடைய பலவீனங்களைப் (மாதவிடாய், பிள்ளைப்பேறு) பலமாக மாற்றி வானவூர்தி இயக்கவும் கடலில் கப்பல் விடவும் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவும் குத்துச் சண்டை புரியவும் ஆரம்பித்து விட்டார்கள். பெண்களுக்கு பல உரிமைகள் வழங்கப்பட்ட போதும், ஆணாதிக்க மரபணு துரிதமாகத் தொழிற்படும் ஆண்கள், இன்றும் பெண்களை அடிமைகளாக பாவனை பண்ணுகின்ற குணாதிசயங்கள் உடையவர்களாகக் காணப்படுகின்றார்கள். இது காலப் போக்கில் நீக்கப்பட்டு விடும் என்னும் நம்பிக்கை பெண்கள் மத்தியில் இருக்கின்றது.
மேலும் பெண்மையைக் குறி வைத்து அவளின் சுயநினைவற்ற நிலையில் மானபங்கம் செய்கின்ற மனநிலை பாதிக்கப்பட்ட ஆண்கள் இன்றும் உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இதற்கு தீர்வு காண்பது கடினம். காமம் என்பது புனிதமானது என்ற புரிந்துணர்வும், சந்ததி வளர்ச்சிக்கு உரியது என்னும் அறிவும், சிறுவயதில் இருந்து போதிக்கப்பட்டால் அன்றி தீர்வு காணமுடியாது. மனிதன் தானாகவே தன்னை அடக்கும் மனவளக் கலையைக் கற்றுத் தேற வேண்டியது அவசியம். காலமே அனைத்துக்கும் தீர்வு சொல்லும். சிணுங்குவதை விட்டுவிட்டு மனச்சிரத்தையுடன் பெண்கள் தொழிற்பட வேண்டியது அவசியம்.
உசாத்துணை நூல்: தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள்
716 total views, 6 views today