பறவைகளின் அறிவு

பறவைகள், விலங்குகள் பயிற்சியினால் பல வியப்பான செயற்பாடுகள் புரிவதை நாம் அறிந்துள்ளோம். அப்படிப் பயிற்சி இல்லாமலேயே பறவைகள் தங்களுடைய அன்பினைத் தெரிவித்த ஓர் அற்புத நிகழ்வு இன்றைக்கு 20 நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது. அந்த நிகழ்வினைத் தன் சொற்களாலே அகநானூறு 208ஆம் பாடலிலே காட்சிப்படுத்தியுள்ளார் பரணர் என்னும் புலவர். ஆய் எயினன் என்னும் மன்னன் பறவைகளுக்குப் பாதுகாவலனாக விளங்கினான் என்பதைச் சங்கப் பாடல்களால் அறிகிறோம். இம்மன்னன் மிஞிலி என்னும் மன்னனுடன் போரிட்ட பொழுது, வாட்போரிலே படுகாயமுற்றுக் களத்திலே வீழ்ந்தான். நடுப் பகலிலே நடைபெற்ற போராகையால் எரிக்கும் வெய்யிலிலே களத்தில் வீழ்ந்து கிடந்தான். அப்பொழுது பறவைகள் பல ஒன்றுகூடி வானிலே வட்டமிட்டு எயினனுடைய உடலுக்கு நிழல் வழங்கித் தம் அன்பினை வெளிப்படுத்தின. பரணர் அதனைப் பின்வருமாறு கூறுகிறார்:
“….புள் ஒருங்கு
அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
ஒண்கதிர் தெறாமை, சிறகரிற் கோலி
நிழல்செய்து
உழறல்…………………”
“அழகிய இடத்தையுடைய வானத்திலே விளங்கும் பகலவனது ஒளியுடைய கதிர்கள் அவன் உடலைச் சுட்டு வருத்தாமல் இருப்பதற்காகப் பறவைகள் எல்லாம் ஒன்றாகக் கூடித் தம் சிறகுகளால் பந்தல் இட்டு நிழல் செய்து காத்தன.” இவ்வாறான ஒரு செயற்பாட்டுக்குப் பயிற்சி பெறாமலே இப்பறவைகள் இயங்கின.
பயிற்சி பெற்று ஓர் அரிய செயலினைப் பறவைகள் ஆற்றியது பற்றி அகநானூறு 78ஆம் பாடல் கூறுகிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் படைகள் பாரி மன்னனுடைய பறம்புக் கோட்டையினை முற்றாகச் சூழ்ந்து நின்றன.பாரியின் நண்பரான புலவர் கபிலரும் கோட்டைக்குள்ளேயே இருந்தார்.இதனால் கோட்டைக்குள் உணவில்லா மல் இருந்தவர்களுக்குக் கிளிகளைப் பயிற்றி நெற்கதிர் கொண்டுவரச்செய்து கபிலர் பசி நீக்கினார். அதனைப் புலவர் மதுரை நக்கீரனார் பின்வருமாறு கூறுகிறார்:
“உலகுடன் திரிதரு பலர்புகழ் நல்லிசை
வாய்மொழிக் கபிலன் சூழச் சேய்நின்று
செழுஞ்செய்ந் நெல்லின் வினைகதிர் கொண்டு
தடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி”
“உலகெங்கும் சுற்றிக்கொண்டிருக்கும் பலரும் புகழ்கின்ற நல்ல பெருமை பெற்ற வாய்மை தவறாத மொழியினை உடைய கபிலன் ஆராய்ந்து செயற்பாட்டினை மேற்கொள்ள, நெடுந் தொலைவினின்று வளம்பொருந்திய வயல்களிலே விளைந்த நெற்கதிர்களைக் கொண்டுவந்து, அவற்றைப் பெரிய தண்டினையுடைய ஆம்பல் மலராகிய அவியலொடு கூட்டிச் சமைத்து உண்பித்து….” என்று கூறப்படுகிறது.
பறவைகளின் பகுத்தறிவையும் பயிற்றறிவையும் நன்கு கூர்ந்து கண்காணித்து நமக்கு சொல்லோவியங்களாகப் பண்டைத் தமிழ்ப் புலவர் தந்துள்ளனர்.