அற்புதமான நடிகர் முத்துராமன்

  • நடிகர் சிவகுமார்;

1981 – அக்டோபர்- 16 -ந்தேதி -காலை 6.30 மணி ஊட்டி – கால்ப் காட்டேஜ் ஆயிரம் முத்தங்கள் – படத்திற்கு ஒப்பனை செய்து கொண்டிருந்தேன். உதவியாளர் ஓடிவந்து ‘சார்,முத்துராமன் சார் தெருவில் மயக்கமா கிடக்கறார் சார் என்றான். ஓடிச்சென்று காரில் ஏற்றி ஊட்டி டாக்டரிடம் காட்ட, உயிர்போய் அரைமணி ஆகிவிட்டது என்றார்.

மீண்டும் காட்டேஜ்… காரிலிருந்து உடம்பை நிமிர்த்தி இறக்கும்போது அவர் மூச்சுக்காற்று குபுக்கென என்மேல் பட, அய்யோ உயிரோட இருக்கறவரை செத்துப்போயிட்டார்னு டாக்டர் சொல்லிட்டாரே’ அண்ணா, அண்ணா எழுந்திருங்கண்ணா’- என்று நானும் நடிகை ராதா, அவர் அம்மா, மூவரும் யூகலிப்டஸ் ஆயிலை அவர் உடம்பு முழுக்க பூசி தேய்த்தவாறு கதறினோம். அவர் பேசவில்லை. போய்விட்டார்.

ரத்த அழுத்த நோய் பல ஆண்டுகளாக அவருக்கு… படத்தில் ராதாவுக்கு அப்பாவாக நடிக்க வந்தவர்- நான் நேற்று காலை ஓடியதைப் பார்த்து ஆர்வத்தில் ஓடியிருக்கிறார். ஊட்டியில், 7000 அடி உயரத்தில் அதிகாலையில், பனிமூட்டம் அதிகம் இருக்கும்போது, ஆக்சிஜன் மிகவும் குறைவாக இருக்கும். அதனால் ஓடியவர் மூச்சுத்திணறி விழுந்து விட்டார்…

நெஞ்சில் ஓர் ஆலயம் – படம் கண்ணியமான இந்தக் கலைஞனை திரும்பிப் பார்க்கவைத்தது… காதலிக்க நேரமில்லை- தூக்கி நிறுத்தியது.. வங்காள நடிகரைப் போல் கம்பீரத்தோற்றம், காந்தக்கண்கள், கணீரென்ற குரல்,கனிவான உள்ளம், எவரையும் குறை சொல்லாத, எல்லோரையும் நேசித்த- சகோதரக் கலைஞன்- இதோ நம்மை விட்டு அவசரமாகப் புறப்பட்டுப் போய்விட்டார். தாங்க முடியாத சோகத்துடன் இந்தச்செய்தியை சென்னையிலுள்ள அவர் வீட்டுக்குத் தெரிவித்தோம். தாயே உனக்காக – காவல் தெய்வம் -ராஜ ராஜ சோழன்- காரைக்கால் அம்மையார்- திருமாங்கல்யம் – தீர்க்க சுமங்கலி என அவரும் நானும் 15 படங்களுக்கு மேல் சேர்ந்து நடித்தோம். ஒரு மூத்த சகோதரனாக என் மீது அன்பைப் பொழிவார்.

மாலை 4 மணிக்கு – ஊட்டியிலிருந்து புறப்பட்டு மறுநாள் விடியற்காலை 5.00 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தோம். சிவாஜி அண்ணனும் திரளாக, திரை உலகத்தினரும் காத்திருந்தனர். சென்ற வாரம் சிரித்துக்கொண்டு ஊட்டி போனவர், சடலமாய்த் திரும்பிய கோரக்காட்சியைக் கண்டதும், மயங்கிச் சரிந்து விட்டார் திருமதி. சுலோசனா. முத்துராமன் தமிழ் உச்சரிப்பு காதுக்கு இனிமை. சொல்வளம் மிக்க நடிகர். திருவிளையாடல் திரைப்படத்திலும், ராஜராஜ சோழன் திரைப்படத்திலும் அவரது வசனங்கள் கம்பீரமானவை. சிறந்த கலைஞன். உரிய இடம் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை. இப்பவும் அவர் நடித்த படங்களை விரும்பிப் பார்ப்பேன்.

902 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *