உகாண்டா கரன்சியுடன் இலங்கையில் இருந்து சென்ற விமானங்கள் – பின்னணி என்ன?
இலங்கையில் இருந்து பெரும் தொகை மதிப்புள்ள நோட்டுகள் உகண்டா நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் வெளிவரும் இரு வித தகவல்களால் நாட்டில் சர்ச்சை நிலவி வருகிறது. அங்கு ஆளும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், சமூக ஊடக பக்கங்களில் இது பற்றிய தங்களுடைய சந்தேகங்களை பகிர்ந்து வருகின்றனர்.
இலங்கையில் ஆளும் ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 3 சரக்கு விமானங்களின் மூலம் 102 டன் கரன்சிகள் உகண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இந்த விவகாரத்தில், கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, உகண்டாவின் என்டெபே சர்வதேச விமான நிலையத்திற்கு பணத்துடன் கூடிய சரக்குக் கலன்கள் கொண்டு செல்லப்பட்டதாக ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.
அது முழுமையான வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட சேவைகள் எனவும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிரிட்டனைச் சேர்ந்த சரக்கு கையாளும் நிறுவனதுக்காக தங்களுடைய விமானங்கள் குத்தகைக்கு விடப்பட்டிருந்த காலகட்டத்தில் உகாண்டாவுக்காக அச்சடிக்கப்பட்ட அந்நாட்டின் கரன்சிகள் இடம்பெற்ற நோட்டுகள் அடங்கிய கலன்கள் பயணிகள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக ஸ்ரீPலங்கன் விமான நிறுவனம் கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் பிரிட்டனைச் சேர்ந்த நாணயம் அச்சிடும் நிறுவனமான டே லா ரூ (DE LA RUE), அதன் ட்விட்டர் பக்கத்தில் De La Rue உலகெங்கிலும் உள்ள நாடுகளின் மத்திய வங்கிகளில் பாதிக்கு மேலானவற்றுக்கு அவற்றின் நோட்டுகளை வழங்குகிறது. இலங்கை, கென்யா, மால்டா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் உள்ள எங்கள் தளங்களில் இருந்து, சம்பந்தப்பட்ட நாடுகளின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் இலங்கை மற்றும் கென்யாவில் உள்ள கூட்டு நிறுவனங்கள் மூலம் நாங்கள் இதைச் செய்கிறோம். வாடிக்கையாளர்களைப் பற்றி நாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை என்று கூறியுள்ளது.
சந்தேகம் எழுப்பும் அரசியல்வாதிகள் இருப்பினும், இந்த இரு நிறுவனங்களின் விளக்கத்தால் சில அரசியல் கட்சிகள் சமாதானம் அடையவில்லை.உகண்டாவிற்கு தேவையான பணத்தை அச்சிட இலங்கைக்கா வர வேண்டும் என முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ கேள்வி எழுப்பியுள்ளார். உகண்டாவுடன் இந்த கொடுக்கல் வாங்கல் மாத்திரமல்ல, மேலும் பல கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
நாட்டில் தற்போது காணப்படும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள் சிலர், தமது சொத்துக்களை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்கிறார்களோ என்ற தெளிவான சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் கூறினார். இதேவேளை,ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி ராஜித்த சேனாரத்ன, உகண்டாவிலிருந்து வரவழைக் கப்பட்ட ஜெட் விமானத்தின் ஊடாகவே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் ஆலயங்களுக்கு சென்றதாக குறிப்பிட்டார். தென் இந்தியாவிற்கு இலங்கையிலிருந்து ஒன்றரை மணி நேரத்தில் செல்ல முடியும் எனக் கூறிய அவர், அதற்காக 20 மணி நேரம் செலவிட்டு உகண்டாவிலிருந்து ஜெட் விமானத்தை வரவழைத்தது தொடர்பாகவும் சந்தேகம் எழுப்புகிறார்.
உகண்டாவிற்கு பணம் அச்சிடப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாக தற்போது கூறப்படும் நிலையில், இதற்கு முன்னர் உகண்டாவிற்கு யார் பணம் அச்சிட்டார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மூன்று விமானங்கள் நிரம்பும் வகையில் அச்சடிக்கப்பட்ட நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
திடீர் சர்ச்சை ஏன்?
2020-2021 ஆண்டில் ஆளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது இலங்கை நாணய அச்சடிக்கும் உள்ளூர் அச்சகத்தின் விவரங்கள் பற்றிய தகவல்கள் சில ஊடகங்களில் வெளியாயின. பிரதமரின் இல்லமான ”அலரி மாளிகை’ பகுதியில் இருந்து லாரிகள் நிறைய பணத்தை ஏற்றிச் சென்றதாக அந்த செய்திகளில் கூறப்பட்டிருந்தன.
இலங்கை ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் வேளையில் திடீரென அதிபர் கோட்டாபயவுக்கும் மஹிந்தவுக்கும் எதிரான மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன. இந்த போராட்டத்தை பலவீனப்படுத்த அவசரநிலை மற்றும் மேலதிக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. ஆனாலும், பொதுமக்கள் இந்த தடைகளை பொருட்படுத்தாமல் வீதிகளில் இறங்கி போராடினார்கள்.
உகாண்டா நாடு ஏற்கெனவே தனது மோசமான நிதி நிலைமை காரணமாக, சர்வதேச நிதி அமைப்புகளால் ‘கிரே லிஸ்ட்’ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது, இது நாடுகளின் நிதி அமைப்புகளின் பாதுகாப்பு அல்லது அபாயத்தின் அளவைக் காட்டும் ஒரு பட்டியலாகும். இந்த நிலையில், “தடுப்புப் பட்டியலில்” தரமிறக்கப்படுவதைத் தவிர்க்க, உகாண்டா மே 2022க்குள் திருத்தப்பட்ட நிதி அறிக்கையை சர்வதேச அமைப்புகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நிலையில், 1986 முதல் 2021 வரை உகாண்டாவின் வெளிநாட்டு கையிருப்பு சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இருப்பினும் 2021 இல் அந்த எண்ணிக்கை 4.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது என்றும் சமங்கிலி வனிதா பலவேகயவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர கூறினார்.
இத்தகைய சூழலில் நிதி மற்றும் பணப் பாதுகாப்பு தொடர்பான பல பிரச்னைகளைக் கொண்ட ஆப்ரிக்க நாடான உகாண்டாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நடந்த பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்,இலங்கையர்கள் மத்தியில் கவலைகளை அதிகரித்துள்ளது.நன்றி:பி.பி.சி.ஈழநாடு.18.04.2022
1,103 total views, 3 views today