விரல் சொடுக்கும் போது ஏன் சத்தம் கேட்கிறது?
விரல் சொடுக்குவது, நெட்டி முறிப்பது அல்லது “cracking your knuckles“ என்று சொல்வார்களே, அதை நிச்சயமாக உங்களில் சிலரும் கூட வழக்கமாகக் கொண்டிருப்பீர்கள். சரி தானே? பொதுவாக விரல் சொடுக்கும் போது ஏதோ எலும்புகள் எல்லாமே முறிவது போல் ஒலி கேட்கும். ஆனால் இந்த விரல் சொடுக்கலுக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? நாம் விரல்களைச் சொடுக்கும் போது ஏன் சத்தம் வருகிறது என்று எப்பொழுதாவது சிந்தித்துப்பார்த்திருக்கின்றீர்களா? இல்லையா? அப்படி என்றால் தொடர்ந்து படியுங்கள்…
விரல் சொடுக்குவது என்றால் என்ன? சிலர் ஒவ்வொரு விரலின் முனையையும் நீட்டி இழுத்துச் சொடுக்குவார்கள், வேறு சிலர் தங்கள் முட்டியை இறுக்கமாக மூடி அல்லது ஐந்து விரல்களையும் பின்னோக்கி வளைத்து எல்லாம் விதம் விதமான வித்தைகள் காண்பித்து நெட்டி முறிப்பார்கள். இப்படிச் செய்தால் தான் அவர்களுக்கு நிம்மதி அல்லது சுகம் கிடைக்கின்றது என்று கூறுகின்றார்கள். 25 முதல் 54 சதவீத மக்கள், அதிலும் குறிப்பாக பெண்களை விட ஆண்களே அதிகமாக நெட்டி முறிக்கின்றார்கள்.
இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் அப்படி விரல் சொடுக்கும் பொழுது வரும் அந்தச் சத்தம் எவ்வாறு தோன்றுகிறது? இதற்குரிய பதிலை கண்டுபிடிக்க 1947ம் ஆண்டிலே ஆரம்பித்து விட்டார்கள். அன்றிலிருந்து பல்வேறு ஆராய்ச்சி குழுவினர் வெவ்வேறு காரணங்களை முன்வைத்தார்கள், ஆனால் இதில் சரியான விளக்கம் எது என்பது யாராலும் சொல்ல முடியவில்லை. எனவே இந்த மர்மத்துக்குப் பின்னால் இருக்கும் உண்மையைக் கண்டு பிடித்தே ஆகவேண்டுமென்று நினைத்து ஒரு புதிய முயற்சியை ஆரம்பித்தார்கள். „Pull my finger study“ எனும் பெயரில் அல்பேர்ட்டா பல்கலைக்கழகத்தில் (University of Alberta) ஒரு புதிய பரிசோதனை ஒன்றைச் செய்தார்கள். அது எப்படி என்றால் ஒரு நபரை விரல் சொடுக்கச் சொல்லிவிட்டு அவர் சொடுக்குவதை காந்த அதிர்வு அலை வரைவு அதாவது ஆசுஐ என்று அழைக்கப்படும் „Magnetic Resonance Imaging“ ஊடாக அந்தச் சம்பவத்தை அவதானித்தார்கள். அப்பொழுது தான் ஆராய்ச்சியாளர்களுக்கு உண்மை தெரிய வந்தது. நமது மூட்டுகளுக்கிடையே Synovial Fluid என்று அழைக்கப்படும் ஒரு நீர்மம் உள்ளது. விரல் சொடுக்கும்போது ஒரு குறுகிய நேரத்தில் நமது மூட்டு இணைப்புகளுக்கு இடையே 2,3-4,5 அஅ அளவான ஒரு இடைவெளி ஏற்படுகின்றது. அப்படி ஏற்பட்ட அந்த இடைவெளிக்குள் உடனடியாக அந்த நீர்மம் செல்லமுடியாததால் வெற்றிடம் ஏற்படும் போது தான் அந்தச் சத்தம் கேட்கின்றது. அவ்வளவு தான்! இது தான் இந்த மர்மமான விஷயத்துக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் விளக்கம் ஆகும்.
ஆனால் இன்று வரை, ஏன் இந்த ஆராய்ச்சியின் ஊடாகாக்கூட, தெரியாத விஷயம் என்ன தெரியுமா? இப்படி விரல் சொடுக்குவது உடலுக்கு நல்லதா இல்லை தீங்கானதா என்பது தான் இன்னும் தெரியாத விஷயம் ஆகும். எனவே, அதற்கும் விரைவில் பதிலை கண்டறிவார்கள் என்று நம்புவோம்.
877 total views, 6 views today