கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை

இந்த வையகத்தின் சில நாடுகளிலே பறவைகளுக்குக் கொடுக்கும் பாதுகாப்பும் மரியாதையும் எங்களை வியக்கவைக்கின்றன. யப்பானிலே நாம் நேரிலே கண்ட காட்சி ஒன்று. ஒரு தாய்ப் பறவை குஞ்சு பொரிப்பதற்காக விதியைக் கடந்து செல்கிறது. அது வீதியைக் கடக்கும் வரையும் அந்த வீதியால் வந்த வாகனங்கள் எல்லாம் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டன. எங்களுக்குப் பெரும் வியப்பாக இருந்தது. அருகில் நின்றவரிடம் இக்காட்சி பற்றிப் பேசினோம். அவர் சொன்னார்: “நீங்கள் இப்பொழுது பார்த்த காட்சியை விட இன்னும் வியப்பான காட்சியை இப்பறவை தன் குஞ்சுகளுடன் திரும்பும்போது காணலாம்” என ஒரு திகதியையும் நேரத்தையும் குறிப்பிட்டார். அன்று அந்த இடத்துக்கு வந்தோம். காவல் துறையினர் மிகுந்த பரபரப்புடன் யாரோ ஒரு பெரியவரை வரவேற்பதற்காக நிற்பதுபோல் மிகுந்த ஆவலுடன் வீதியின் எதிர்ப்பக்கத்தைப் பார்த்தபடியே நின்றனர். சிறிது நேரத்தால் அன்று வீதியைக் கடந்த தாய்ப் பறவை முன்னே வர பின்னால் குஞ்சுகள் பல வந்துகொண்டிருந்தன. மிக அமைதியாக தாயும் சேய்களும் வீதியைக் கடந்து சென்ற காட்சி அவற்றின் அழகினையும் நாட்டின் அழகினையும் அந்நாட்டு மக்கள் அழகினையும் நமக்குக் காட்டியது.

இவ்வாறு குஞ்சுகளுடன்  செல்லும் தாய்ப்பறவை ஏதாவது இடரெனில் உடனடியாகத் தன் சிறகினாலே குஞ்சுகளை மூடிக்கொள்ளும்.  இப்படி ஒரு காட்சியை பண்டைத் தமிழ் இலக்கியமாகிய முத்தொள்ளாயிரத்தில் ஒரு பாடல் காட்சிப்படுத்துகிறது. அப்பாடல் இதுதான்:

அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாய்அவிழ
வெள்ளந்தீப் பட்ட தெனவெரீஇப் – புள்ளினம்தங்
கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேற் கோக்கோதை நாடு

சேறு நிறைந்த வயற் பகுதியில் உள்ள பெய்கைகளில் சிவப்பு நிறம் கொண்ட செவ்வல்லி மலர்கள் பூத்துள்ளன. அதனைக் கண்ட நீர்ப்பறவைகள் வெள்ளத்தில் தீப்பிடித்து விட்டது என்று அச்சப்பட்டு, தம் கைகளான சிறகுகளுக்குக் கீழே தம் குஞ்சுகளை ஒதுக்கும் துன்பமிகு ஆரவாரம், நஞ்சு பூசப்பட்டுள்ள வேலை ஏந்திய சேரமன்னன் கோக்கோதையின் நாட்டிலுள்ளவர்களுக்கு உண்டா? இல்லை என்பதை உணர்த்துவதாகவே இப்பாடல் அமைகிறது. பறவைகள் கொண்ட அச்சம் உண்மையான தீயினால் ஏற்பட்டதல்ல. எனினும் பொய்யான காரணத்தாற்கூட பறவைகள் துயரப்படாமல் இருக்கவேண்டும் என்பது உய்த்துணரக் கூடியதாக உள்ளது. இப்படியான துயரங்கூட நாட்டிலே ஏற்படக்கூடாது என்ற பண்டைய தமிழர் எண்ணத்தின் அழகினை இங்கு தரிசிக்கிறோம்.

786 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *