என் நிலத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாய் காதலிக்க முடியும் என்ற என் ஒற்றைப் பிடிமானம்
டிலோஜினி மோசேஸ்-இலங்கை
குறிப்பிட்டதொரு வயதிலிருந்தே எல்லோருக்கும் போல எதிர்காலம் பற்றிய கனவுகளும் திட்டமிடல்களும் எனக்கும் இருந்து கொண்டேயிருந்தன. வயதும், அறிவும், அனுபவமும் மாறும் போது இலக்குகளும் மாறிக்கொண்டே இருந்தன.
ஆனால் என்றைக்குமே இந்த தேசத்தை விட்டு இன்னொரு மண்ணில் குடியேறும் எண்ணம் வந்ததேயில்லை.
போரோடும் இயற்கை அனர்த்தங்களோடும் மாறி மாறி அல்லாடி கொண்டு,உயிரை மட்டுமே கையில் பிடித்து கொண்டு ஓடிய நாட்களில் கூட அந்த எண்ணம் தலை தூக்கியதேயில்லை.
நினைத்த மாத்திரத்தில் ஓடிப்போய் தொபுக்கென குதித்து நீந்த கூடிய இந்து மகா சமுத்திரத்தின் ஓசை சதா காதில் கேட்கும் ஒரு நிலத்தில் பிறந்து போர் தன் தலை விரித்து உச்ச தாண்டவம் ஆடும் போது கூட பசியையும் பட்டினியையும் நுகராமல் வளர்ந்த ஒரு காரணத்தாலோ அல்லது அந்த வயது என்பது எந்த பொறுப்பும் இல்லாமல் நினைத்ததெல்லாம் சரியானவை என்கிற பட்சத்தில் அவற்றை காலடியில் சாத்தியமாக்கும் ஒரு அப்பனுக்கு பிள்ளையாக பிறந்து போதிய சுதந்திரமாக இருந்ததாலோ இந்த தேசத்தில் அத்தனை காதல் இருந்தது.
சிறுவயதில்; நான் ஆழமாகிய நம்பியிருந்த தமிழ் தேசிய அரசியல் கோட்பாடுகளின் படி நான் நேசித்த தமிழீழமாயினும் சரி,பிறகு இன்றைக்கு மனதார காதலிக்கும் ஈழமாயினும் சரி இந்த புலத்திலிருந்து பெயரும் ஒரு எண்ணம் எனக்கு வந்ததேயில்லை. சொல்ல போனால் பதின்மங்களுக்கு பிறகு வெளிநாட்டு மாப்பிள்ளை கனவோடு திரியும் தோழிகளை அடி மனதில் ஒரு ஏளனத்தோடு கூட கடந்ததுண்டு.
இன்றைக்கு பொருளாதாரம் சரிந்திருக்கிறது,எதை கேட்டாலும் இல்லை என்கிற துயரோடு இருப்பவையும் ஆனை விலை குதிரை விலை என்பது கூட துயரமாயில்லை. ஆனால் வாழ்வில் அடுத்த கட்ட நகர்வுக்கான எல்லா முகாந்திரங்களும் அடைக்கப்பட்ட நிலையில், இதுவரை எம்மை சுமந்த தோள்களுக்கு ஓய்வு கொடுத்து ஒய்யாரமாய் உட்கார வைக்க வேண்டிய அறம் சார்ந்த கடமையை நிறைவேற்ற முடியாமல் தடுமாறி கொண்டு நிற்கும் ஒரு சபிக்கப்பட்ட தலைமுறையின் பிரதிநிதிகளாக தூக்கம் தொலைத்து விட்டு உட்கார்ந்திருக்கும் ஒவ்வொரு இரவிலும் ” எனக்கு இந்த மண்ணை விட்டு ஒரு இடமும் போக விருப்பமில்ல…” என்று உறுதியாக சொல்லும் அந்த குரல் வெளியே எழும்புவதேயில்லை.
போகிற போக்கில் இங்கிருந்து எங்காவது போய் மிச்ச கடமைகளையாவது சரியாக செய்து கொண்டு அடுத்த தலைமுறையை என்றாலும் கொஞ்சம் நிம்மதியாக வாழ வைக்கலாமே என்று எழுகிற மனச்சாட்சியின் குரலை எத்தனை நாளைக்கு தான் அடக்கி வைக்க முடியும்!!
இன்னமும் இந்த நிலத்தை, பெற்றோரும் அவர் பெற்றோரும் உலாவிய வீட்டை, முற்றத்தை, கடலை,காடுகளை, வரப்பு தண்ணீரில் குளித்து பச்சை வயலோரம் சிறகுலர்த்தும் வெள்ளை கொக்குகளை, ஊருக்கு போகும் விழியில் தம் பாட்டில் மேயும் மயில்களை,மான்களை குறுக்கே பாயும் முயல்களை தேகம் வருடும் காற்றை என்று எல்லாவற்றையும் இன்னும் கொஞ்சம் ஆழமாய் காதலிக்க முடியும் என்ற ஒற்றை பிடிமானம் தவிர மீந்திருப்பது ஒன்றுமேயில்லை.
கடலும்நானும்…..
சில மனிதர்களை போல இந்த கடலுக்கு அணைக்கவும் தெரியும் அடிக்கவும் தெரியும். எவ்வளவுக்கு வலிக்க அடிக்கிறதோ,அதே அளவுக்கு அலையால் கால் தடவி ஆறுதல் சொல்லவும் தெரியும். அதனால் அறுத்து கொண்டு போக முடிவதில்லை.
1,040 total views, 6 views today