நமது பிரபஞ்சத்திற்கு அழிவு உண்டா? பூமியின் கண்டங்கள் அனைத்தும் ஒரே கண்டமாகிவிடும்.

Dr.நிரோஷன் தில்லைநாதன்-யேர்மனி

நீங்கள், நான், இந்த உலகம், வேறொரு உலகம், சூரியன், கோள்கள் என அனைத்தும் நிரந்தரம் இல்லை. அனைத்துக்கும் எப்போதாவது அழிவு என்பது நிச்சயமாகும். ஆனால் அது எப்போது, எப்படி என்பது குறித்த பலதரப்பட்ட கருத்துக்களும், பரிந்துரைகளும், விவாதங்களும் பல இடங்களில் நடைபெறுகின்றன. அப்படி என்ன தான் நடக்கப்போகிறது? அதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போமா…?

இந்த பிரபஞ்சத்தின் (Universe) தற்போதைய வயது 13.7 பில்லியன் ஆண்டுகள் ஆகும். பெரு வெடிப்புக் கோட்பாடு (Big Bang Theory) மூலமாகத்தான் இந்த பிரபஞ்சம் உருவானதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். ஒரு சிறிய பொதித்துவைக்கப்பட்ட பொருளில் இருந்து பெரிய வெடிப்பின் மூலம் ஒரு வினாடிக்கும் மிக மிக மிக மிக மிக மிகக் குறைவான காலத்தில் விரைவாக வெடித்து வெளியேறியது. இதற்கு Inflation என்று பெயர் ஆகும். பெருவெடிப்பிற்குப் பின்னர் அடுத்த 380.000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிலிருந்த பொருட்கள் குளிர்ச்சி அடைந்து, குறைந்த அடர்த்தி கொண்டதாக மாறியது. அவற்றைத்தான் நாம் இப்போது பார்க்கிறோம். இந்த காலகட்டத்தில்தான் மிகச்சிறியதாக இருந்த அணுக்கள் உருவாகி தம்மைத்தாமே நிலைப்படுத்திக்கொள்ளத் தொடங்கின. பின்னர் இலகுவான ஹைட்ரஜன், ஹீலியம் மற்றும் லித்தியம் போன்றவை உருவாகத் தொடங்கின. ஆனால் இந்த காலகட்டத்தில் எவ்வித நட்சத்திரங்களும் தோன்றவில்லை. எவ்வித ஒளியுமின்றி பிரபஞ்சமே இருளில் மூழ்கியிருந்தது. இதனால் 380,000 ஆண்டுகளில் இருந்து 400 மில்லியன் ஆண்டுகள் வரையிலான காலம் பிரபஞ்சத்தின் ‘காஸ்மிக் இருண்ட காலம்’ என்றழைக்கப்படுகிறது. அடுத்த அரை பில்லியன் ஆண்டுகளில் வாயுக்கள் மற்றும் இதர பொருட்கள் இணைந்து முதல் நட்சத்திரத்தினை தோற்றுவித்தன. பின்னர் அடுத்தடுத்து விண்மீன் கூட்டங்கள் உருவாகின.

பிரபஞ்சத்தின் விரிவாக்கம் குறையத் தொடங்கி ஈர்ப்பு விசையினால் அவை மீண்டும் இருந்ததுபோல் ஆவதற்கு முயற்சி செய்யத் தொடங்கின. பெருவெடிப்பு நடந்த 3.5 பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் னுயசம நுநெசபல எனும் ஆற்றல், ஈர்ப்பு விசைக்கு எதிராகச் செயல்பட்டு பிரபஞ்சம் மீண்டு வருதலைத் தடுத்தது. இதனால்தான் பிரபஞ்சத்தினைப் பற்றிப் புரிந்துகொள்வது கடினமாக இருந்து வருகிறது. இது குறித்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெருவெடிப்புக்கு ஒன்பது பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு நமது சூரிய மண்டலம் உருவானது. அதன் பின்னரே சூரியக் குடும்பத்தின் கோள்கள் உருவாகின. தொடர்ந்து அவை மேம்பட்ட நிலையில் தான் நாம் இருக்கிறோம். அதாவது பெருவெடிப்பு நடந்து 13,7 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பூமியில் வசிக்கிறோம்.

இதற்கடுத்து எப்படி உலகம் அழிவினைப் பெறும் என்பது குறித்து நாம் கவலைகொள்ளத் தேவையில்லை ஏனென்றால் அப்போது நாம் இந்த உலகில் உயிருடன் இருக்கப்போவதில்லை. இருந்தாலும் அடுத்து என்ன நடக்கப் போகும் என்பதையும் தெரிந்துகொள்வதில் ஆர்வமாகத் தானே இருப்பீர்கள். வாங்க அதையும் சற்று உத்துப் பார்ப்போம்.

இனி வரும் காலங்களில் நிலவினால் பூமியின் சுழற்சி வேகம் குறையலாம், பூமியின் காலநிலை வேறுபாடுகள் அடையலாம். இதனால் அடுத்த ஒரு மில்லியன் ஆண்டுகளில் அழிவு நிகழ்வுகள் ஆரம்பிக்கும். நூறு மில்லியன் ஆண்டுகள் கழித்து டைனோசர் காலத்தில் விழுந்த விண்கல் போன்று விண்கற்கள் பூமியினைத் தாக்கலாம். ஆனால் அப்போது நாம் பூமியில் தான் இருப்போமா? அல்லது விஞ்ஞான வளர்ச்சியினால் வேறு கிரகத்திற்குச் சென்றுவிடுவோமா என்பது தான் தெரியவில்லை.

இப்போதிலிருந்து 250 மில்லியன் ஆண்டுகள் கழித்து பூமியின் கண்டங்கள் அனைத்தும் ஒரே கண்டமாகிவிடும். (அப்போது ஒரே கண்டத்தின் ஜனாதிபதி யார் என்ற கேள்வி எழும்? )இதற்குக் காரணம் பால்வழி அண்டத்தின் சுழற்சியாக இருக்கும். அடுத்த வரிசையில் இருப்பது சூரியன். 600 மில்லியன் ஆண்டுகள் கழித்து சூரியன் ‘Red Giant’ நிலைக்குச் சென்றுவிடும் என்று எண்ணப்படுகிறது. அப்போது சூரியனின் ஹீலியம் அதிகமாக வெப்பநிலையினை உருவாக்கி தற்போதுள்ள அளவினை விட நூறு மடங்கு பெரிய சூரியனை உருவாக்கிவிடும்.

இன்னும் 1.3 பில்லியன் ஆண்டுகளில் பூமியில் பாக்டீரியாக்கள், ஆல்காக்கள் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கும், பிற உயிரினங்கள் அனைத்தும் அழிந்திருக்கும். 1.6 பில்லியன் ஆண்டுகளில் அதிக வெப்பநிலையைப் பொறுத்துக்கொள்ளும் உயிரினங்கள்கூட வாழ்வது கடினமாகிவிடும். 3.5 பில்லியன் ஆண்டுகளில் பூமியின் மேற்பரப்பு வீனஸ் கோளின் மேற்பரப்பினை ஒத்திருக்கும்.

தற்போதிலிருந்து 7.9 பில்லியன் ஆண்டுகளில் மெர்குரி, வீனஸ் மற்றும் பூமி ஆகிய கிரகங்களைச் சூரியன் உள்ளிழுத்துக்கொள்ளும். இப்படி நம்மையே உள்வாங்கிய சூரியன் 8 பில்லியன் ஆண்டுகளில் தற்போதுள்ள நிறையில் பாதி நிறையுடைய வெள்ளைநிற சிறிய விண்மீனாக மாறிவிடும். 14.4 பில்லியன் ஆண்டுகளில் சூரியன் மனிதனின் கண்ணுக்கே புலப்படாத அளவிற்குச் சிறிய விண்மீனாகியிருக்கும். இப்படி அடுத்து வரும் நூற்றாண்டுகளுக்குப் பிரபஞ்சம் என்னவாகும் என வானவியல் மற்றும் பிரபஞ்சத்தின் அறிஞர்கள் பலதரப்பட்ட கருத்துக்களை வைத்தாலும், இவையனைத்தும் கணிப்புக்களே மட்டும் தான். என்ன நடக்கும் என்பதைப் பிரபஞ்சமே முடிவு செய்யும்.

மேற்கூறிய விஷயங்கள் நடைபெறவில்லையென்றாலும் 17 பில்லியன் ஆண்டுகளில் பெரிய அழிவு பிரபஞ்சத்திற்கு ஏற்படும், அதுவும் அடிப்படை பொருட்களுக்கு இடைப்பட்ட ஈர்ப்பு மற்றும் விலக்கு விசைகளுக்கு இயற்பியலின்படி நடைபெறும் எனக்கூடக் கருதப்படுகிறது. பிரியும்.

100 பில்லியன் ஆண்டுகளில் பிரபஞ்சம் முதன் முதலில் இருந்த நிலைக்கே செல்ல வழிவகுக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பிரபஞ்சத்தின் அனைத்துமே செயல்படாமல் இருக்கும் நிலைகூட வரலாம், அப்போது நட்சத்திரங்கள் உருவாகாது, எவ்வித வெப்ப ஆற்றல் மாறுபாடுகளும் ஏற்படாது, எவ்வித ஈர்ப்பு அல்லது விலக்கு விசைகளும் இருக்காது. அவ்வளவு தான்… பிரபஞ்சத்தின் கதை அத்துடன் முடிந்துவிடும்.

2,126 total views, 9 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *