காற்றுக்கு வேலி அமைப்பது நல்லதல்ல
கரிணி.யேர்மனி
அந்தரத்தில் சுழன்று கொண்டிருக்கும் இந்த பூமிப்பந்தில் கட்டணம், வரி வசூலிப்பு இன்றி பிறிதொரு கண்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பிராண வாயுவை கூட நாம் இலவசமாக சுவாசித்துக் கொண்டிருக்கின்றோம். குடிநீரும் பணம் கொடுத்து வாங்கும் நிலை வந்து விட்டது. அப்படி இருக்க இப்பூமி சுழல்வதால் இக்காற்று உலகெங்கும் ஓடி உலவுகின்றது. அமேசான் பெருங்காடு அழிந்து விட்டாலே உலகில் பிராணவாயு தட்டுப்பாடு நிலவும் என்றளவிற்கு பசுமையின் பற்றாக்குறை ஏனைய பகுதிகளில் நிலவுகிறது.
இங்கு பார்க்க இருப்பது பசுமை புரட்சியை பற்றியதல்ல. அதனைப்பற்றி பல்லாயிரம் முறை பலரால் கூறப்பட்டு விட்டது. தற்போது நவநாகரிகம் எனும் மாயையில் நவீன கட்டுமானங்கள் மேல் உள்ள மடத்தனம், தொழில்நுட்பங்களின்பால் உள்ள குருட்டுத்தன நம்பிக்கை, இயற்கையுடனான குறைந்து செல்லும் தொடர்பு நிலை என்பன பற்றி பார்ப்போம்.
முன்பு ஒரு வீடு கட்டுவதென்றால் அதற்காக மனையடி விஞ்ஞானம் என்றும், வாஸ்த்து என்றும் பல முறைகள் உண்டு, சாதாரணமாக ஒரு நாய் நிலத்தில் படுத்து உறங்க போகிறது என்றால் கூட நடந்து வந்து அப்படியே படுத்து உறங்கி விடாது. கவனித்து பார்த்தால் தெரியும் நின்ற இடத்தில் சுழன்று காற்றை கவனிக்கும். பின் அதற்கேற்ற திசையில் தலைப்பக்கம் உள்ளவாறு வைத்து உறங்கும். இந்த கணிப்பின் வல்லமை இயல்பாகவே பிராணிகளிடம் உண்டு. மனிதன் இயற்கையோடு ஒன்றியிருந்த காலத்தில் இத்திறமை பெற்றிருந்தான். அக்காலத்தின் குறிப்பேடுகளின் படி வீட்டின் முன்புறம் வழியாக உட்புகும் பிராண வாயு வீடு முழுக்க நிறைந்து அங்குள்ள அசுத்தக் காற்றையெல்லாம் அடித்துத் தள்ளியபடி பின்புறமாக வெளியேற வேண்டும். இதற்கு ஏற்றாற் போலவே நெருப்பின் உபயோகத்திற்கு ஏற்ற இடத்தில் சமையலறையும், அமைதியான சுவாசத்துக்கு ஏற்ற இடத்தில் படுக்கையறையும், வடக்குத்திசை காந்தப்புல ஈர்ப்பு விசையால் மூளை பாதிக்காத இடத்தில் தலைவைத்து படுக்காதபடி படுக்கை விரிப்பும் அமைக்கப்படும்.
உடலில் நிகழும் சமநிலையானது உடலுக்கு வெளியே உள்ள சமநிலையோடு அனுசரித்து போகும்போதுதான் அங்கு சரியான சமநிலை நிலவும், அதற்கு எதிரான செயற்கை தடைகள் மூலம் மனிதன் தன்னை சிறைபடுத்தி கொள்ளும் போது அந்த நிலையை சமநிலை படுத்தவே இயற்கை போராடும். இந்த போராட்டத்தின் வெற்றி இயற்கைக்கே என்றாலும் இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் மனிதர்களை வெகுவாக பாதிக்கவே செய்கின்றது. குறிப்பாக மரத்தோப்புகளினூடே நடந்து செல்லும்போதே புத்துணர்வு ஏற்பட்டு விடுகிறது. குளிர்ந்த நீரில் நீராடும் போதும் உற்சாகம் பிறக்கிறது.
மொத்த பிரபஞ்சமும் குறிப்பிட்ட சக்தி நிலையிலேயே இயங்குகின்றது. வெற்றுக் கண்ணுக்கு புலப்படாவிடினும் அதுவே உண்மையானது. பொதுவாக கடின வேலை செய்து சோர்ந்து விடுவதை விட ஏதாவது ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு பெரும் மக்கள் கூட்டத்திற்குள் மிருதுவாக அமர்ந்திருந்துவிட்டு வந்தால்கூட உடலில் அதிக சோர்வு இருக்கும். அங்கு தோன்றும் எண்ண அலைகளின் குப்பைகள், பெருமளவு சுவாசங்களில் வெளிச்செல்லும் கரியமிலவாயு, பல்வேறு தன்மையையுடையவர்கள் வெளிப்படுத்தும் சக்தி அலைகளின் தாக்கம், அதிக ஒலிகளின் அதிர்வலைகளால் உண்டாக்கப்படும் மூளைச்சோர்வு போன்றவையே வெளியேற்றி தூய்மைபடுத்த பட வேண்டிய அசுத்தங்கள் ஆகிவிடுகின்றன. வீட்டிற்கு வந்து ஒரு குளிர்ந்த நீரில் குளித்து விட்டாலே அந்த இயற்கை சக்தி தன்னால் இயன்றளவு அந்த அசுத்த அலைகளை வெளியேற்றி சுத்தப்படுத்தி புத்துணர்வை தரும். இது போலவே இயற்கை காற்றின் மூலமும் சுத்தப்படுத்த முடியும். ஆனால் இந்த சுத்தம் தூங்கும் போதும், விழித்திருக்கும் போதும் அன்றாடம் அவசியமானது.
உடல் ஒரு புல்லாங்குழல் போன்றதென்றே சொல்லலாம். புல்லாங்குழலின் துளைகளை அடைத்தால் காற்று உட்புகுதலும், வெளியேறுவதும் தடைபட்டு எப்படி நாதம் வராதோ அது போல இந்த உடலும் சரியான அளவில் காற்றை உள்ளெடுத்து அந்த வினாடியே உடலெங்கும் சக்தியாக பரவி இதயத்தால் வெளியேற்றப்படும் கழிவு இரத்தத்தில் உள்ள கரியமிலத்தை பிரித்து வெளிக்கொண்டுவந்து வெளிச்சுவாசமாக வெளியேற்றாவிட்டால் உடல் இனிய இசைக்கருவி போன்று செயல்படுவது கடினம். உணவு எவ்வாறு முக்கியமோ அதைவிட முக்கியமானது பிராணவாயு. காற்றை மட்டும் உண்டு வாழும் யோகிகளும் உண்டு. அழியா சக்தி தரக்கூடிய அமிர்தம் அதிகாலை இளம்காற்றில் நிறைவாக உண்டு எனப்படுகிறது.
ஓசோன் படலம் பூமிக்கு நெருக்கமாக அடர்த்தியாக உள்ள காலம் அதிகாலை. மார்கழி மற்றும் தை மாதங்களில் இத்தன்மை அதிகம் காணப்படுவதால் தான் அக்காலத்தில் இதிகாலை துயிலெழுந்து அமிர்தக்காற்றை நிறைவாக சுவாசிக்க வேண்டும் என பாவை நோன்புகள் ஏற்படுத்தப்பட்டன. எல்லா நாட்களிலும் யன்னல் கதவுகளையும் மூடிவிட்டு அதிகாலையில் வீட்டில் இன்னும் அசந்து தூங்குவதால் உயராற்றலை தரக்கூடிய இந்த அமிர்தகாற்று கிடைக்க பெறாமலே போகிறது. மற்றும் அடைக்கப்பட்ட சூழலில் உள்ள கழிவு வாயுக்கள் பாதிப்பையும் உண்டுபண்ணும். எனவேதான் இக்கால வாழ்வியல் முறையினால் நோய் எதிர்ப்பாற்றல் மிக குறைவாக காணப்படுவதுடன் மனித ஆயுட்காலமும் குறைவடைந்து விட்டது.
இன்றைய வீட்டுமனை கட்டுமானத்தில் செயற்கை குளிரூட்டி உபயோகிக்க வேண்டும் எனவும், அந்த குளிர்ச்சி வெளியேறிவிடக் கூடாது என்பதற்காகவும் சிறு காற்றுப்புகும் துவாரங்கள் கூட இல்லாதபடி வீடுகள் அமைக்கப்படுகின்றன. முற்காலத்தில் யன்னல்கள் அமைத்தால் கூட உயரமாக மேற்பகுதியில் அழகிய பூக்கள் வடிவங்களையுடைய ஓட்டைக்கற்கள் வைத்து வீட்டினுள் சூரிய ஒளி, காற்று உட்புகுமாறு அமைத்திருப்பார்கள், சுத்தமான காற்று வீட்டினுள் நிறைவாக தழுவிச் செல்ல வேண்டும். அந்த நிறைவான காற்றை குளிர்சாதனம் வழங்கிவிடாது, மற்றும் மின்சாரத் தடை ஏற்படும் காலங்களில் இத்தகைய சூழலில் மின்விசிறி, காற்றுப்பதனி போன்றவையும் செயற்படாமல் போவதனால் அச்சூழலில் அதிக நேரம் தரித்து இருக்கும் போது உடல் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது. சிறு கொசுக்களின் தொந்தரவுக்கு பயந்து யன்னல்களையும் அடைத்து எத்தனையோ இரசாயன கொசு விரட்டியை உபயோகித்து உள்ளே இருக்கும் சிறிதளவு காற்றினையும் விசமாக்கிவிடுவதனால் மூளை நரம்புகள் முதற்கொண்டு உடலின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் பக்கவிளைவுகள் ஏற்படும். காற்று நன்றாக உள்வந்தால் வீட்டினுள் ஏற்படும் ஈரலிப்பு காய்ந்து போகும். இல்லாவிடில் பூஞ்சை பரவல் ஏற்படும். அதிக குளிர் தேசத்தில் வாழ்பவர்கள் வெப்பமாக்கியை பயன்படுத்தினாலும்கூட அடிக்கடி வெளிக்காற்று உள்ளே வந்து சுத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
ஒவ்வொரு விடயங்களுக்குமான மாற்றுவழிகளைத் தேடும்போது அவை எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாதபடி பார்த்துக்கொள்ளல் வேண்டும். உதாரணமாக யன்னல்களில் சிறிய துவாரங்களுடைய வலைகளை பொருத்திவிடுவதன் மூலம் யன்னல்களை திறந்து காற்று உட்புக அனுமதிப்பதோடு கொசுக்கள் வருவதை தடுக்கவும் முடியும். ஒரு வீட்டில் பல காற்று ஓட்டத்திற்கான பாதைகள் இருக்க வேண்டும்.
வீட்டிற்கு உபயோகமான மரங்களை வீட்டு வளாகத்தில் வளர்த்து குளிர்ச்சியான சூழலையும் பேணலாம். இயற்கையோடு நெருங்கிய வாழ்க்கைமுறையோடு அவற்றிலிருந்து தூரம் போகாதபடி கவனமாக காற்றோட்டமான இடங்களிலேயே உண்டு, உறங்கி வாழ்தலே உடல், மன ஆரோக்கியத்திற்கு என்றும் நன்மை பயக்கும்
896 total views, 6 views today