பக்கவாதம் யாருக்கு வரும்? காரணம் என்ன?
னுச.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்-இலங்கை
பக்கவாதம் ஏற்படுவது எமது மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு குருதி செல்லாமல் தடைப்படுவதால் ஆகும். குருதி செல்லாவிட்டால் முளையின் அந்தப் பகுதியில் உள்ள கலங்கள் இறக்க நேரிடும். கலங்கள் இறந்தால் முளையின் அந்தப் பகுதி எதைஎதையெல்லாம் இயங்க வைக்கிறதோ அவை செயலற்றுவிடும்.
உதாரணமாக உடலின் வலது பக்கத்தை இயங்க வைக்கும் கலங்கள் இறந்தால் பாதிக்கப்பட்டவரின் வலது பக்க கைகால்கள் இயங்காது. மாறாக பேச்சுத் திறனுக்கான பகுதிக்கான இரத்த ஓட்டம் தடைப்படால் பேச முடியாமல் போய்விடும். எங்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதுடன் முளையின் எவ்வளவு இடம் பாதிக்கப்படுகிறது என்பதும் முக்கியமாகும்.
மிகச் சிறிய இடம் மட்டும் பாதிப்புற்றிருந்தால் கை கால் இயக்கமின்மை தற்காலிமாக இருந்து குணமாகிவிடலாம்.
மாறாக பாதிப்புற்றது பெரிய பகுதியானால் ஒரு பக்கம் இயங்காமலே போய்விடலாம். அதே போல பேச்சுக்காக பகுதியானால், பாதிக்கப்பட்ட முளையின் அளவுக்கு ஏற்ப அவ்வாறே சில நாட்களில் திரும்பக் கூடும் அல்லது முழுமையாக பாதிப்படையவும் கூடும்.
மூளையின் கலங்களுக்கு குருதி கிடைக்காமல் விடுவது இருவகை காரணங்களாலாகும். முதலாவதும் அதிகமானதும் குருதிக் குழாய்கள் (நாடிகள்) கொழுப்பினால் அடைபடுவதாலாகும்.
இரத்தத்தில் கொலஸ்டரோலின் அளவு அதிகரிக்கும் போது அவை நாடிகளின் உட்புறத்தில் படிகின்னறன. தொடர்ந்து படியும் போது நாடிகளின் உட்புற அளவு குறைந்து குறைந்து வந்து இறுதியில் அடைத்துவிடும். அல்லது அவ்விடத்தில் இரத்தம் உறைந்து குருதி பாய்வதைத் தடுத்துவிடும்.
மூளையில் அவ்வாறு நடக்கும்போது பக்கவாதம் வருகிறது. இருதயத்தில் அவ்வாறு அடைத்தால் மாரடைப்பு வரும் என்பதையும் இங்கு சுட்டிக் காட்டலாம். இந்த வகை பக்கவாதமே மிக அதிகமானதாகும். 10 பேருக்கு பக்கவாதம் வந்தால் அதில் 8 பேருக்கு இவ்வாறு நாள அiடைப்பினாலேயே ஏற்படுகிறது.
இரண்டாவது வகையில் சிறிய இரத்தக் குழாய் வெடித்து இரத்தம் வெளியேறுவதால் மூளையின் அந்தப் பகுதிக்கான குருதி ஓட்டம் தடைப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது. ஆனால் இந்த வகை பக்கவாதம் குறைவானது.10 பேருக்கு பக்கவாதம் வந்தால் அதில் 8 பேருக்கு மட்டுமே இவ்வாறு குருதிக் கசிவினால் ஏற்படுகிறது.
எவருக்குமே பக்கவாதம் வரலாம் எனினும் சில வகை நோயாளிகளுக்கு அதற்கான சாத்தியம் அதிகம்.
மிக முக்கியமானது பிரஸர் என்று அழைக்கப்படும் உயர் இரத்த அழுத்தமாகும். பிரஸர் நோயுள்ள சிலர் ‘எனக்கு தலையிடி தலைச்சுத்து ஒண்டும் இல்லைதானே’ என்று சொல்லி மருந்து சாப்பிடுவதை கைவிட்டுவிடுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. மருந்தைத் தொடர் ந்து சாப்பிட வேண்டும். ஒருவரின் பிரஸரின் அளவுக்கு ஏற்ப மருத்துவர் மருந்தின் அளவைத் தீர்மானிப்பார்.
அடுத்த முக்கிய காரணம் புகைத்தல் ஆகும். புகைத்தல் மட்டுமின்றி புகையிலை வெற்றிலை சப்புதலும் அவ்வாறே. புகையிலையில் உள்ள நிக்கரின் போன்ற இரசாயனங்கள் குருதிக் குழாய்களை சுருங்கச் செய்வதுடன் கழுத்தின் ஊடாக மூளைக்கு செல்லும் நாடிகளில் கொழுப்பு படிவுகளை ஏற்படுத்துவதாலும் பக்கவாதம் வருகிறது.
இதைத் தவிர,நீரிழிவு நோய்,இரத்தத்தில் அதிகரித்த கொலஸ்டரோல் பிரச்சனை,அதீத மது பாவனை,எண்ணெய் கொழுப்பு, உப்பு ஆகியவற்றை அதிகம் உட்கொள்ளும் தவறான உணவு முறை,போதிய உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சி அற்ற வாழ்க்கை முறை,அதீத எடை ஆகியவையும் பக்கவாதம் வருவதற்குரிய ஏனைய காரணங்களாகும். இளவயதை விட வயது முதிரும்போதும் பக்கவாதம் வரக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். அத்துடன் ஏற்கனவே ஒரு முறை பக்கவாதம் சிறிய அளவிலேனும் வந்து குணமாகியவர்களுக்கு மீண்டும் வரக் கூடிய சாத்தியம் அதிகம்.
எனவே எண்ணெய் உப்பு கொழுப்பு இனிப்பு போன்றவற்றைக் குறைத்து, அதிகளவு காய்கற்களையும் பழவகைகளையும் மீன் ஆகியவற்றை உண்ணும் ஆரோக்கியமான உணவு முறையைக் கடைப்பிடிப்பதுடன் தினசரி உடற்பயிற்சி செய்து அளவான உடம்புடன் ஆரோக்கியமாக வாழ்ந்தால் பக்கவாதம் மட்டுமல்ல ஏனைய பல நோய்களிலிருந்தும் எம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.
1,215 total views, 6 views today