நெருக்கடிக் காதல்

வடிவேலு. வடிவழகையன்-இலங்கை
ஏதோ ஒரு
வேலையாகப் போனவர்கள்
இடையில் வந்துகொண்டிருந்த
பெற்றோல் பவுஸரைக் கண்டுவிட்டு
போன வேலையை மறந்து
பெற்றோல் பவுஸருக்கு
பின்னால் ஓடிவருவதைப்போல
உன்னைக் கண்டதும்
எல்லாவற்றையும் மறந்து
உன்பின்னாலேயே ஓடிவருகின்றன
என் நினைவுகள்.
அந்த தாங்கிக்குள்
நிறைய பெற்றோலையே
நிரப்பிக்கொண்டுவருவதாய்
நம்புகிற
வாடிக்கையாளனை மாதிரி
நீயும் உன் மனதுமுழுதும்
என்னையே நிரப்பிக்கொண்டு திரிவதாய்
நப்பாசை எனக்கு.
பெற்றோலுக்காக
பொழுது புலரும்போதிருந்தே
காத்திருப்போரின் வரிசைகளுக்குள்
இடையே புகுந்துகொள்ளும்
இதயமே இல்லாத
கல்நெஞ்சக்காரர்களைப்போல
உனக்கும் எனக்குமிடையில்
எவரும் புகுந்துவிடக்கூடாதென்பதில்
எப்போதும்
கவனத்தோடு இருந்து கொள்கிறேன்.
என்றாலும்கூட
இரவு ஒருமணியளவில்
படி வாகனத்தில் வந்து
பதினைந்து இருபது மஞ்சள் பெரல்களில்
கள்ளத்தனமாக
டீசலை நிரப்பிக்கொண்டுபோகும்
ஈனத்தனம் போல
இரவோடிரவாக
உன்னைக் கடத்திக்கொண்டுபோய்
ஊரறியாமல் மணம்புரியும்
எச்சைத்தனம்
என்னிடத்தில் எள்ளளவும் இல்லை.
இன்றைக்கு வரும்
நாளைக்கு வருமென்று
எரிவாயுச் சிலிண்டருக்குக் காத்திருக்கும்
இன்றைய குடும்பத்தலைவி மாதிரி
உன்வரவுக்காக
எப்போதும் சந்திக்கும்
அந்த மரத்தடியில்
இப்போதும் காத்துக்கொண்டிருக்கிறேன்.
வைத்துக்கொண்டே இல்லையென்று
திருப்பியனுப்பும்
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுகிற
பெற்றோல்செற் பெடியன் மாதிரி
என்னை ஏமாற்றமாட்டாய் எனும்
அசைக்கமுடியாத நம்பிக்கையில்
நாளையும் அந்த மரத்தடியில்
காத்திருப்பேன்.
ஏனெனில்
மண்ணெண்ணெய் கலக்காத
ஒக்ரெய்ன் 92
தூய பெற்றோலைப்போல
எமது காதலும்
கலப்பில்லாத
தூய்மையானதென
இற்றைவரை உறுதியாக நம்புவதால்.