“ முகமில்லாத மனிதர்கள்“ நாடகம் – 1980
எனது நாடக அனுபவப் பகிர்வு – 19
ஆனந்தராணி பாலேந்திரா
1977 இனக்கலவரத்தைத் தொடர்ந்து கொழும்பில் இருந்து எனது பெற்றோர் சகோதரர்களுடன் நான் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாகக் குடியேறிய பின்னர் எனது நாடகப் பணிகள் மேலும் மும்முரமாகின. முழு நேரமாக ஆசிரியத் தொழில் செய்துகொண்டு மேடை நாடகங்களிலும் இடைவிடாது நடித்துக்கொண்டிருந்தேன். நாடக மேடையேற்றங்களுக்காக மட்டுமல்ல, சிலவேளைகளில் சில ஒத்திகைகளுக்காகவும் நான் கொழும்பு செல்லவேண்டி ஏற்படுவதுண்டு. ஆனால் ஒரு முழுநீள நாடகத்திற்கு எல்லா ஒத்திகைகளுக்கும் நான் கொழும்பு சென்ற ஒரு நாடகம் என்றால் அது ‘முகமில்லாத மனிதர்கள்’ நாடகம்தான். 1980இல் க.பாலேந்திராவினால் தயாரிக்கப்பட்டு நெறியாள்கை செய்யப்பட்ட நாடகம் இது. பாலேந்திரா உட்பட மற்றயை நடிகர்கள் கொழும்பில் தொழில் புரிந்துகொண்டும் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டுமிருந்தார்கள்.
வாரத்தில் ஐந்து நாட்களும் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டு வெள்ளிக்கிழமை இரவு பஸ் அல்லது ரெயினில் தனியாக கொழும்பு சென்று ஒத்திகைகள் பார்த்துப் பின்னர் ஞாயிறு இரவிரவாகப் பயணம் செய்து திங்கள் அதிகாலை யாழ்ப்பாணம் திரும்பி அன்று காலையே பாடசாலைக்குப் படிப்பிக்கப் போய் வந்திருக்கிறேன். இப்போது நினைத்துப் பார்க்கும்போது எனக்கே பிரமிப்பாக இருக்கிறது. அப்போது நான் ஆசிரியராகப் பணியாற்றியது வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லுரியில். கனி~;ட பாடசாலை அதிபராக இருந்தவர் மிஸ். எலாயஸ். என்னோடு மிகவும் அன்பாகப் பழகுவார். எனது நாடக ஈடுபாடுகள் அவருக்கு நன்கு தெரியும். நான் சனி ஞாயிறு தினங்களிலும் பிஸியான ஒருவர் என்பதும் அவருக்குத் தெரியும். எப்போதும் என்னை ஊக்குவித்த ஒருவர். நான் முதன்முதல் ஞாயிறு இரவு முழுவதும் பயணித்து திங்கள் காலை 8 மணிக்கு பாடசாலைக்கு வந்திருந்ததை அறிந்த அவர் திங்கட்கிழமைகளில் நான் ஒரு 11 மணியளவில் வகுப்பு எடுக்கும் விதமாக எனது பாட அட்டவணை நேரத்தில் சில மாற்றங்களைச் செய்து உதவினார். அப்போது யாழ்ப்பாணக்கல்லூரி அதிபராக இருந்த திரு. கதிர்காமர் அவர்களும் என்னுடைய நாடக ஈடுபாடுகளுக்கு ஒத்தாசையாக இருந்தார்.
பாலேந்திரா ‘ முகமில்லாத மனிதர்கள்’ நாடகப் பிரதியை என்னிடம் தந்தபோது அதன் தலைப்பு என்னை வெகுவாகக் கவர்ந்தது. நாடகம் பற்றிய பின்னணியைக் கேட்டேன். இந்தியாவின் தலைசிறந்த வங்காள நாடகாசிரியரான பாதல் சர்க்கார் எழுதிய ‘ஏவம் இந்திரஜித்’ என்ற நாடகத்தின் தமிழ் வடிவம் இது என்றார். ‘முகமில்லாத மனிதர்கள்’ என்ற தலைப்பை யார் வைத்தது என்று நான் கேட்டேன். தான்தான் வைத்தேன் என்றார். வழமைபோல இந்த நாடகாசிரியரைப் பற்றியும் நாடகத்தின் கரு, கட்டமைப்புப் பற்றியும் அவர் எனக்கு விளங்கப்படுத்தினார். அப்போதுதான் இந்த நாடகம் நான் இதுவரை நடித்த நாடகங்களிலிருந்து வேறுபடப்போகின்றது என்பதை நான் அறிந்து கொண்டேன்.
‘முகமில்லாத மனிதர்கள்’ நாடகத்தில் நான் ஏற்று நடித்த பாத்திரத்தின் பெயர் மானசி. இந்த மானசி ஒரு இளம்பெண்ணாக வருவார், நண்பியாக வருவார், காதலியாக வருவார், இளம் மனைவியாக வருவார், தாயாக வருவார். இப்படி ஒருவரே பல பாத்திரங்களைத் தாங்கி நடிக்கின்ற வித்தியாசமான நாடகம். நான் நடித்த பாத்திரம் மட்டுமல்ல, ஏனைய பாத்திரங்களும்கூட இப்படித்தான். பொதுவாக பரதநாட்டியத்தில்தான் நடனக்கலைஞர் ஒருவரே இப்படிப் பல பாத்திரங்களாக மாறி அபிநயத்து ஆடுவார். அங்கு ஆடல் மட்டும்தான் இருக்கும். ஆனால் இங்கு நாங்கள் பாத்திரத்தின் தன்மைக்கேற்ப வசனங்களும் பேசவேண்டும். வித்தியாசமான ஒரு நாடகந்தான் இது.
இந்த நாடகத்தை எழுதிய பாதல் சர்க்காரைப்பற்றிக் கட்டாயம் கூறவேண்டும். 1935ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிறந்து கட்டடக் கலைஞராகப் பட்டம் பெற்று நகரத்திட்ட வடிவமைப்பாளராகக் கடமையாற்றிய வங்காள நாடகாசிரியர் பாதல் சர்க்கார் 25க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி மேடையேற்றியுள்ளார். இவர் வங்காளத்தில் தனது நாடகங்களை எழுதினாலும் ஆகக்கூடிய இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாடகாசிரியராகப் புகழ்பெற்று விளங்கினார். இவர் சென்னை உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் நாடகப் பயிற்சிப் பட்டறைகளை நிகழ்த்தியுள்ளார். 1967இல் உருவாக்கப்பட்ட இவரது ‘சதாப்தி குழு’ 1973 முதல் திறந்தவெளி நாடகங்களை நடத்தி வந்தது. அரசியல் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தபோதும் தொடர்ந்து நாடகங்களை நடத்தி வந்தார். பாதல் சர்க்கார் 1962ஆம் ஆண்டு எழுதிய நாடகம் ‘ஏபங் இந்திரஜித்’. இதன் தமிழ் வடிவம்தான் ‘முகமில்லாத மனிதர்கள்’ நாடகம்’.
‘முகமில்லாத மனிதர்கள்’ நாடகத்தில் நாங்கள் ஏழு நடிகர்கள் பல்வேறு பாத்திரங்களைத் தாங்கி நடித்தோம். முதல் மேடையேற்றத்தின்போது என்னுடன் மெல்லிசைப் பாடகர் மா. சத்தியமூர்த்தி, கானகலாதரன், சுப்ரமணியம், மகேந்திரன், பாஸ்கரன், நிர்மலா ஆகியோர் நடித்தார்கள். இதில் முக்கிய பாத்திரமேற்று நடித்த சத்தியமூர்த்தி, கானகலாதரன், இருவரும் நடிப்புத்துறைக்குப் புதியவர்கள். மகேந்திரனும் அப்படியே.
1,072 total views, 6 views today