காதல் என்பது எதுவரை ?
- சேவியர்-தமிழ்நாடு
காதலின் தொடக்கப் புள்ளி எதுவெனக் கேட்டால் ஒருவேளை சட்டென சொல்லி விடலாம். அது ஒரு மழைச்சாரலின் இடையே தெரிந்த காதலியின் மின்னல் முகமாகக் கவித்துவம் காட்டலாம். கூடவே நடந்த தோழி சட்டென பேசிய ஒற்றை வார்த்தையில் உள்ளுக்குள் இடைந்து தெறித்த கண்ணாடிக் கூடென கதைகள் பேசலாம். முகத்தைப் பார்த்திராத டிஜிடல் காதலியின் குறுஞ் செய்தி குறுகுறுக்க முளைத்து வந்ததென தொழில் நுட்பம் பேசலாம். எது எப்படியோ, காதலின் தொடக்கப் புள்ளியைக் கண்டுபிடிப்பதொன்றும் பிரம்மப் பிரயர்த்தனம் இல்லை !
ஆனால் அதன் முடிவுப் புள்ளியை எப்படிக் கண்டுபிடிப்பது. வட்டத்தை வரைந்து விட்டு அதன் மூலைகளைக் கண்டுபிடிக்கச் சொல்வது போல சிக்கலானது அது. கைப்பிடி அளவுக் காற்றை எடுத்து கடித்துத் தின்பது போல இயலாத காரியம் அது.
பெய்து ஓய்ந்த பெருமழையின் கடைசித் துளி எங்கே விழுந்ததென எப்படிக் கண்டுபிடிப்பது ? பிரபஞ்சத்தின் முதல் ஆழியின் கடைசி அலை எப்போது அடிக்குமென எப்படிக் கணக்கிடுவது ? கடைசியாய் எப்போது என் நாசிக்குள் பிராணவாயு படுத்துப் புரளுமென எப்படி உறுதி செய்வது ? நீள்வட்டப்பாதையில் ஓடிக்கொண்டிருக்கும் விளையாட்டு ரயிலின் கடைசிப் புள்ளி எதுவென எப்படித் தெரியும் ? காதலின் கடைசியும் அப்படியே! அது எதுவரை என்பதைக் கணக்கிடுவது கடினம்.
காதலின் கடைசியை நமது வாழ்க்கையின் கடைசிக் கணம் வரை, என முடிவு செய்யலாமா ? அல்லது நம் வாழ்க்கையின் கடைசிக் கணத்தை காதலின் கடைசிக் கணம் வரை, என முடிவு செய்யலாமா ? காற்று உள்ளவரைக்குமா, அந்த தொடுவானத்தின் எல்லை தரையில் தொடும் வரைக்குமா, பூமியின் ஓட்டம் நிற்கும் வரைக்குமா ? அல்லது அந்த வானத்தின் நீலம் உள்ளவரைக்குமா ? இவையெல்லாம் கவிதைகளில் உவமைகளாய் ஒளிந்திருக்கத் தான் லாயக்கு !
எனில், காதல் என்பது எதுவரை ?
அன்பெனும் அகல் விளக்கு இதயத்துக்குள் இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கும் வரை !, அதில் பாசத்தின் எண்ணையும், தியாகத்தின் திரியும் எரிந்து கொண்டிருக்கும் வரை ! அன்பினை அகற்றிவிட்டுப் பார்த்தால் காதலின் திரைச்சீலைகள் கிழிந்து தொங்கும் ! அழகை இழக்கும்.
ஒருவர் குறையை ஒருவர் தாங்கும் வரை ! ஒருவர் நிறையை ஒருவர் ஏந்தும் வரை ! இட்டு நிரப்புதலும், விட்டுக் கொடுத்தலும் காதல் வாழ்க்கையின் ஆனந்த தருணங்கள். முழுமை என்பது எங்கும் இல்லை என்பதை மனதால் புரிந்து கொள்ளும் வரை காதல் வாழும். குறைகள் என்பது அழகியலின் அம்சம் என்பது நிலைக்கும் வரை காதல் நீடிக்கும்.
காமத்தின் மெல்லிய சாரல் காதலுக்குள் பெய்யும் வரை ! காதலின் அடைமழை காமத்துக்குள் கலந்திருக்கும் வரை காதல் வாழும். மோகத்தின் வரிகள் மட்டுமே கவிதை முழுதும் உடல் வாசனை வீசிக் கிடந்தால் காதல் வீழும். மோகத்தின் மெல்லிய காற்று, காதலின் தோட்டத்தில் வீசலாம் ஆனால் மோகத்தின் புயல் மட்டுமே காதலின் தோட்டத்தில் அடித்துக் கொண்டிருக்கக் கூடாது.
சுயநலத்தின் சுருக்குப் பைகளில் அடுத்தவர் ரசனையை முடிந்து விடாமலிருக்கும் வரை ! காதலுக்கு சுயநலம் இல்லை, சுயநலம் இருந்தால் அது காதலில்லை. அடுத்தவர் சுதந்திரத்தின் சிறகுகளை நறுக்கி காதலுக்கான கை விசிறியைச் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் காதல் நிலைப்பதில்லை.
இருவரின் உறவில் பாதுகாப்பின் பரிசுத்தம் பரவிக் கிடந்தால் காதல் வாழும். பயத்தின் ஆக்டோபஸ் கரங்கள் ஆங்காங்கே விரவிக் கிடந்தால் காதல் வீழும். பயம், காதலின் எதிரி. வெளிப்படையாய் இருக்கின்ற காதலில், ரகசிய பயங்கள் எழுவதில்லை. ரகசிய பயங்கள் முளைக்கும் இடங்களில் காதல் வெளிப்படையாய் இருப்பதில்லை. காதல் வெறும் உணர்வுகளின் பிள்ளையல்ல. அது செயல்களின் தாய். உணர்வுகள் நெருக்கமாக்கும், செயல்கள் அந்த நெருக்கத்தை இறுக்கமாக்கும். காதலைக் காதலுடன் வைத்திருக்க காதலால் மட்டுமே முடியும் ! அந்தக் காதலை வார்த்தைகளும், வாழ்க்கையும் பிரதிபலித்தால் காதல் வாழும்.
இப்படி இருந்தால் தான் காதல் வளரும் என படிப்படியாய் சில வரையறைகளை வைத்தால் காதல் மூச்சுத் திணறும். அடுத்தவர் இயல்புக்காய் வருவதல்ல காதல், நமது இயல்பினால் வருவதே உண்மைக் காதல். பறிப்பவரின் இயல்புக்கேற்ப தாவரங்கள் பூப்பதில்லை ! தனது இயல்புக்கேற்பவே பூக்கின்றன. காதலை உள்ளத்திலிருந்து வெளியெடுப்போம், எதிரே இருப்பவரின் எண்ணத்திலிருந்தல்ல.
என்னை விட நீ பெரியவள் எனும் எண்ணம் எழுகையில் காதலுக்கு சிறகு முளைக்கும். எதையும் விட பெரியவள் நீ எனும் சிந்தனை வளர்கையில் சிறகுக்கு வானம் கிடைக்கும். அந்த எண்ணம் இருவருக்கும் எழுகையில் காதலுக்கு ஆயுள் கிடைக்கும் ! அத்தகைய காதல் அழிவதில்லை.
வேற்றுமைகளை அறிந்து கொள்வதிலும் அதை அணிந்து கொள்வதிலும் காதல் வளரும். எல்லா இசைக்கருவிகளும் புல்லாங்குழல் ஆவதில்லை. எல்லா பறவைகளும் குயில்கள் ஆவதில்லை. வேற்றுமைகளே அழகு. காதலிலும் வேற்றுமைகளை விரும்பினால் காதலின் ஆயுள் கிணறு நிரம்பும்.
மன்னிப்பின் மகத்துவம் காதலின் தனித்துவம். அடுத்தவர் செய்யும் பிழைகளை மன்னிக்கும் மனம் காதலின் ஆழத்தின் அடையாளம். மன்னிக்க மறுக்கும் இடத்தில் காதலின் கிளைகள் பூ விடுவதில்லை. காதலின் நிலைகள் வேர் விடுவதில்லை. மன்னிப்பு கேட்கும் முன் மன்னிக்கும் மனமிருந்தால் காதல் தேயாமல் வளரும்.
காதல், வெறும் வார்த்தைகளினால் ஜாலம் கட்டி, செயல்களினால் ஓரங் கட்டுவதில்லை. சத்தத்தில் மௌனத்தையும், மௌனத்தில் சத்தத்தையும் பிரித்தெடுக்கும் வித்தை காதலுக்கு உண்டு. சொல்லாத வார்த்தைகளைப் புரிந்து கொண்டு செயல்களினால் அதை சரிசெய்யும். அத்தகைய காதல் நீண்ட நெடிய காலம் வாழும்.
நான் எனும் சிந்தனை மறைந்து நாமென்பது உள்ளெங்கும் நிறைந்து நிற்பதில் காதல் வலிமையடையும். தன் கனியை தானுண்பதில்லை கொடிகள். தனக்கென எதையும் சேர்த்துக் கொள்வதில்லை உண்மைக் காதலர்கள். காதலின் வளர்ச்சி நாமென்னும் சிந்தனையின் தொடர்ச்சி.
காதலுக்காய் செலவிடும் நேரங்கள், வாழ்க்கையை அழகாக்கும் காலங்கள். நிறைய நேரம் செலவிடும் காதல் நீண்டகாலம் வாழும். பகிரப்படும் நேரங்களே, காதலின் பரவசத்தின் பதுங்கு குழிகள். அவையே காதலை சாகாவரம் தந்து வாழவைப்பவை.
நம்பிக்கை நங்கூரம் வாழ்க்கைக் கடலில் காதல் கப்பலை நிறுத்தும் வரை காதல் வாழும். நம்பிக்கையின் நங்கூரம் கழன்றி விழுகையில் காதல் கப்பல் நிலைகுலையும். எதிர்பாராத திசைகளில் பயணம் நீளும். நம்பிக்கை நங்கூரத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
மலருடன் அமர்ந்திருக்கும் வண்ணத்துப்பூச்சி போரடிக்கிறது என பறந்து போவதில்லை. துணையுடன் இருக்கும் போது போரடிக்காத காதல் நீண்டகால வாழ்க்கைக்கு உத்தரவாதம். சலிப்பை ஏற்படுத்தும் காதலுக்குள் இருப்பது உண்மை நேசத்தின் கருவல்ல. சில்மிஷ சிலிர்ப்பின் கரு.
சொல்லாத காதல் என்பது கொல்லப்பட்ட காதல் ! மின்மினி கூட தன் இருப்பை புள்ளி வெளிச்சத்தால் பூமிக்கு பறைசாற்றிக் கொண்டே தான் இருக்கிறது. காதல் மட்டும் ஏன் காரிருளுக்குள் கவிழ்ந்து கிடக்கிறது ? காதலில் பகிரப்படும் வார்த்தைகள் அதன் ஆயுள் ரேகையை நீளமாக்கும், காதல் பாதையை ஆழமாக்கும் !
ஆறுதல் கரங்கள் தயாராய் இருந்தால் காதல் அழிவதில்லை. பழிபோடும் நிலைவரினும் பழியேற்கும் மனநிலை கொண்டால் காதல் அழிவதில்லை. காதல் என்பது நதியின் ஸ்பரிசம், யார் தொட்டாலும் மனதில் சிலிர்க்கும்.
ஒரு சிலை செய்யும் நுணுக்கத்தில் காதல் நம்மைச் செதுக்கும். காதலின் உளிப்பிரயோகங்களுக்கு காதலர்கள் புன்னகையோடு ஒத்துழைத்தால் போதும். காதலின் உளிப்பிரயோகங்களே ஆயுளின் சிலையை அழகாக்கும்.
அடுத்தவரின் புன்னகையில் மகிழும் உணர்வே காதலின் வளர் நிலை. அடுத்தவர் புன்னகைக்க வேண்டும் என வாழ்வதே காதலின் உயர்நிலை. அந்த எண்ணத்தை இருவரின் இதயமும் ஏற்கும் போது காதலின் ஆயுள் கெட்டியாகும். எனில் காதல் என்பது எதுவரை?காதலர் விரும்பும் வரை !காதலர் விரும்புவது எதுவரைகாதலை விரும்பும் வரை!
1,229 total views, 9 views today