‘சுமையினை இறக்கிச் சும்மா நிற்க’
உருத்திரமூர்த்தி – சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
கவிதா லட்சுமி.நோர்வே
உலகில் உள்ள அனைத்தும் போல இலக்கியமும் மாறிக்கொண்டே இருக்கும். சில சமயங்களில் போர் குணத் துடனும், சில சமயங்களில் பெரும் கூச்சலுடனும் இன்னும் பல சமயங்களில் மொளனித்தும் தமக்கென்ற மாற்றத்திற்கு வழி செய்து கொள்கின்றன.
இந்த மரபுக் கவிதைகள் என்னதான் சொல்கின்றன? எந்த வகையில் அவை மரபுக்கவிதை என்ற பெயரைச் சூடிக்கொள்கின்றன என்று பார்த்தால், மரபுக் கவிதை என்பவை அறம், ஒழுக்கம், மதபோதனை, என்பன பாடுபொருளாகவும், புலமையின் வெளிப்பாடு என்பதும் இங்கே முக்கித்துவம் பெற்று நிற்ப்பதைக்காணலாம் இந்த மரபுகவிதைக்களும் ஒரு காலத்தில் புதுமையானதாவே காணப்பட்டிருக்கும் என்றால் இன்று காணும் புதுக்கவிதையே எமது நாளைய மரபுகவிதை என்பதே உண்மை.
மரபுக்கவிதை காலத்தால் முந்தியது. தொன்றுதொட்டு வரும் தன்மையை மரபு என்கிறோம். தோல்காப்பியம் என்னும் நூல் மூலம் மூவாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய இலக்கண நூல் செய்யுள் தொடர்பான எழுத்து மரபு, பாடுபொருள், யாப்பு ஆகியவைகளைக் கொண்டிருக்கும். இவ்வாறுதான் எழுதப்படல் வேண்டும் என்ற கட்டுக்குள்ச் சுழன்று சொற்கள் தேடி கருத்துப் புதியனவாயினும் இலக்கணத்தின்படி பாடுதல் மரபுக்கவிதை. மரபுக்கவிதை தொழிலுக்கு ஏற்றதாக, மன்னர்காலத்தில் புகழ்பாடுதலாகவும், கோயில்களில் இறைபுகழ் பற்றியதாகவும் இருந்த நிலையை அறியலாம்.
1890களில் மேலத்தேய நாடுகளில் மரப்பை புறக்கணித்து ஆரம்பித்த வசனநடைக் கவிதைகள் பிறர் இதுவரை பேசா பொருட்களைக் கொண்டதாக புறப்பட்டு வந்தன. கவிதையின் கரு முக்கியமே ஒழிய சொல்லோசையில் காட்டுவதன்று என எம் பாரதியும் வசனநடைக் கவிதைகளை நேசித்தவரானார்.
மரபுவழிக் கவிஞர்கள் மூலம் விமர்சிக்கப்பட்டும், யாப்பில்லாக்கவிதை, இலகு கவிதை, வசனநடைக்கவிதை என்ற பெயர்களைச் சூட்டிக்கொண்டு இன்று புதுக்கவிதையென்ற பெயர் கொண்டு எம் மனங்கவர்ந்து நிற்கின்றது. புதுக்கவிதை என்பது வாழ்க்கையின் கண்ணாடி எனச் சொல்லாம். வாழ்வின் நிஜத்தை, சிக்கல்களை, எதிர்புகளை மற்றுமன்றி பொதுவுடமை, நாட்டுப்பற்று, தலித்தியம், பெண்ணியம் போன்ற சமூதாய அமைப்பு முறைகளை எடுத்தியம்பும் விம்பமாகவும் அமைகிறது.
ஈழத்தில் மரபுக்கவிதைகள் பற்றியும் சரி புதுகவிதைகள் பற்றியும் சரி பேசும்போது கவிஞர் உருத்திரமூர்த்தி பற்றி குறிப்பிடாமல் போவது சுலபமல்ல. பாரததேசம் கொண்ட தமிழனுக்கு ஓரு மகாகவி போல ஈழதேசம் கண்ட மஹாகவியின் சில கவிதைகள் இன்று பார்ப்போம்
மஹாகவி உருத்திரமூர்த்தி:
தமிழ்க் கவிதை இலக்கியத்திற்கு புதுமுகம் கொடுத்த தந்தை பாரதிக்குப் பின்னான காலத்தில் சுயம்புவான அடையாளங்களோடு மரபுக்கவிதையிலும், புதுக்கவிதையிலும் தன் மகத்துவத்தை நலைநிறுத்திக்கொண்டவர் கவிஞர் மஹாகவி. கவிஞர் புதுக்கவிதைகளை மட்டுமல்ல மரபுக் கவிதைகளையும் கையில் எடுத்தவர். அளவெட்டியைச் சேர்ந்த இவரது கவிதைகள் 1940களில் நாளேடுகளில் பிரசுரமாகத்தொடங்கின. கவிதைகள் மட்டுமல்லாமல் சிறுகதை, நாடகம் என்று பல துறையில் கால்பதித்தவர். மஹாகவி சமகால ஓட்டத்தினை இணங்கண்டு மரபுவழி நயத்திற்குப் பதிலாக பேச்சோசைத் தன்மையை புகுத்தியது மட்டுமல்லாது பாநாடகம், வில்லுப்பாட்டு ஆகிய துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்தவர்.
கவிஞர் மஹாகவி எழுதி பல நாடகங்களில் பாவிக்கப்பட்ட புகழ் பெற்ற ஒரு கவிதையினைப் பார்ப்போம். சிலநாட்களுக்கு முன் வேறு ஒரு சந்தர்பத்தில் எனக்கு அறிமுகமான இந்தப்பாடல் பல நேரங்களில் அடிக்கடி நினைவில் வந்து போவதாகவும் நான் முனுமுனுக்கும் வரிகளாகவும் ஆகிவிட்ட கவிதையென்றாகிப் போனது.
‘சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
சிலவேளை இதைவந்து கடல் கொண்டு போகும்
கறிசோறு பொதியோடு தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட பயம் ஒன்று காணும்
வெறுவான வெளிமீது மழைவந்து சீறும்
வெறிகொண்ட புயல்நின்று கரகங்கள் ஆடும்
நெறிமாறு பட நூறு சுழிவந்து சூழும்
நிலையான தரைநீரில் இலைபோல் ஈடாடும்
இருளோடு வெளியேறி வலைவீசினாலும்
இயலாது தரவென்று கடல் கூறல் ஆகும்
ஒரு வேளை முகில் கீறி ஒளி வந்து வீழும்
ஒரு வேளை துயர் நீள உயிர் வெந்து சாகும்’
இந்தப் பாடல்வரிகள் ‘புதியதோர்வீடு’ பாநாடகத்தில் இருந்து காணப்பெற்றவை. இது போலவே ‘புதியதோர்வீடு’ நாடகம் முழுவதும் பேச்சோசைத் தமிழிலேயே கவிதை புனைந்தவர். கடலின் துணையோடு வாழும் மீனவர்களின் வாழ்நிலை கூறும் கவித்துவம் நிறைந்த இந்தக் கவிதை மரபுக்கவிதையின் இயல்பும், பாரதி சொன்ன எளிமைத் தமிழும் தெளிவாய் சீரான அலைகளாய் மீனவர்கள் வாழ்க்கைமுறை துயர்சுமந்து எம் கால் நனைத்துச் செல்வதை கவிதையினூடு உணரலாம்.
தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுள் ஒன்றான யாழ்நூலக எரிப்பு (1984) என்பது பலர் மனதில் அக்கினித் துண்டொன்றை விட்டெறிந்தது. அழிக்கப்பட்ட தமிழ்நூல்கள் ஈழத்தமிழ் இலக்கியங்கள் என்பன ஈடுஇணையற்றவை, அவைகளில் பல எவராலும் நாம் மீள்ப்பெற முடியாதவதை. இந்த யாழ்நூலக எரிப்பின் பின் சிலர் ஈழத்து இலக்கியப் படைப்பாளிகளின் கையெழுத்து பிரதிகளை பொறுக்கி எடுத்து மீண்டும் அச்சுவடிவாக்கினர். கவிஞர் மஹாகவி தான் வாழ்ந்த காலத்தில் சில நூல்களே அச்சுவடிவில் கண்டார். அவையாவன ‘வள்ளி 1955, குறும்பா 1966, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் 1966 கண்மணியாள் கதை1968, கோடை1970′ ஆகியனவாகும். எனினும் அவருடைய அனைத்துக் கவிதைகளும் நமக்கு இன்னும் எட்டவில்லை என்பது திண்ணம்.
சாலையோரங்களில் வைக்கப்படும் சுமைதாங்கிகள் பற்றியும் அதுபோல் ஒன்று ஆலயத்திலும் இருப்பது பற்றிய கேள்வியோடும் நகைச்சுவை உணர்வோடு கூடிய அவருடைய ஒரு கவிதை பேசுகிறது.
‘வழியெல்லாம் கற்கள் வைத்தார் தமது
சுமையினை இறக்கிச் சும்மா நிற்க
பேரிய பழியெலாம் சுமக்க பாவியர் கூடி
வாயிலும் வளைவுமாய் வளர்ந்த
கோயிலும் கல் குடியிருந்தினரே’
பாதைகளில் வைத்த சுமைதாங்கிகள் வழிச்சுமையை சுமக்கவென்றும், வாழ்க்கைப் பழிச்சுமைதாங்க என்று ஆலயத்திலும் இதுபோல் ஒன்று இருக்குதென்றும் தானே விடையையும் தந்து செல்கிறார் இந்த கவிதையில்.
மஹாகவியின் பல கவிதைகளில் அசைவையும் மெலிதான இசையையும் இனம் கணலாம். அவை வாழ்க்கைத் தத்துவங்களோடும், தினசரிப் பெழுதுகளோடும் கைகோர்த்து படிப்போரின் மனமேடையில் நடமிடுவதை வாசகராய் நாம் உணரலாம்.
மூத்த ஈழக் கவிஞர்களில் ஒருவரான உருத்திரமூர்த்தி அவர்களுடைய 100 கவிதைகளை மித்ரா பதிப்பகம் ‘பொருள் நூறு’ என்னும் தலைப்பில் வெளிக்கொணர்ந்திருக்கிறது. கவிஞர், மஹாகவி என்ற புனைபெயரில் மட்டுமல்ல மாபாடி, பண்டிதர், மகாலட்சுமி, பாணன், வாணன் போன்ற பெயர்களிலும் எழுதி வந்தது குறிப்பிடத்தக்கது. கவிஞர் மஹாகவி யாழ்பாணத்துக் கிராம மக்களின் வாழ்வையே தனது பாடுபொருளாகிக் கொண்டவர். கிராமிய வழக்குச்சொற்களை கவிதைகளில் உட்புகுத்தினார். கற்பனாவாத அலங்காரச் சொல்லடுக்குகளும் செய்யுள்களும் எழுதப்பட்ட காலத்தில் மஹாகவி பேச்சு மொழியில், வாழ்க்கைப் பிரச்சனைகளையும் சமூக முரண்பாடுகளையும் யதார்த்தமாக பேசுபவையாக இருந்தன.
காலத்திற்கேற்ப நாம் மாறவேண்டும் என்பதை வலியுருத்தியும் அப்படி மாறாதவை இலக்கை அடையாது என்பதையும் அவர் கவிதையொன்று சொல்கிறது
‘அம்பு வில் மூதாதையர் கருவி
ஆதலால் அவைகளை அணிந்தவனாகப்
போர்களத் தெம்மூர்ப் பொடியன் வீரவான்
போயினான்…
ஏய்த அம்பேறி எதிர்தரப் பொருவனின்
காக்கிச் சட்டைப் பொத்தான் கழன்றது
வீரவான் விழுந்தான்… விலாவில்
ஓர் எழும்பின்றி ஒடித்தது குண்டே’
ஒரு கலைப்படைப்பில் கருத்துச் சொல்வது ஒரு நிர்ப்பந்தம் அல்ல என்றாலும் நவீன இலக்கியப் படைப்பாளிகள் பலர் சமூக அக்கறை குறித்து கேள்விகள் எழுப்பிய வண்ணமே இருக்கின்றனர். அதைப்போலவே மஹாகவியின் கவிதைகள் காத்திரமானவை அல்ல என்றும், மஹாகவி என்ற பெயர் தானே தமக்கு சூட்டிக்கொண்ட புனைபெயர் எனவும் பல விமர்சனங்களைத்தாண்டி கவிஞர் உருத்திரமூர்த்தி அவர்கள் மறுக்கப்படமாட்டாத இருபதாம் நூற்றான்டின் இறுதியில் எழுந்த ஒரு சாதனைக் கவிஞராகவும் ஈழத்துத்தமிழ் இலக்கியங்களில் மரபுக் கவிதையூடாகவும், புதுக்கவிதையினூடாகவும், அதிக அளவு மாறுதல்களை ஏற்படுத்தியவராகவும், கவிதை இலக்கிய மறுமலர்ச்சி வரலாற்றில் தம்மை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
1,055 total views, 3 views today