வாய்ச் சொல்லில் வீரரடி
சேவியர் – தமிழ்நாடு.
மனிதர்கள் இயல்பாகவே கதை கேட்பதில் ஆர்வம் உடையவர்கள். தூங்கிக் கொண்டிருப்பவனை எழுப்ப வேண்டுமெனில், “ஒரு ஊர்ல ….’ என ஆரம்பித்தால் போதும். கதை கேட்க சட்டென காதுகள் விழித்தெழுந்து விடும். மனிதனின் மழலைக் காலம் முதல், கடைசி காலம் வரை கதைகளுக்கான ஒரு தேடல் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த மனித இயல்பைப் பயன்படுத்தித் தான் பல கதை சொல்லிகள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். சிலர் நல்ல நீதிக் கதைகளையோ, வாழ்வியல் கதைகளையோ சொல்லி மக்களை நல்வழிப்படுத்துகின்றனர். இவர்கள் நம் பிரியத்துக்குரியவர்கள்.
வேறு சிலர், வாயாலயே வடைசுட்டு, காலமெல்லாம் கதை விட்டு வாழ்க்கையை ஓட்டுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் பெரிய பெரிய இருக்கைகளில் அமர்ந்து கொண்டு பிறரை எரிச்சலடையச் செய்பவர்கள். இவர்கள் வாய்ச்சொல்லில் வீரர்கள் ! நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை, யாராவது உங்கள் மனதில் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயம் அவர்கள் செயலில் வலுவற்றவர்கள் என்பது தான். ஒருவர் செயலில் எந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறாரோ அந்த அளவுக்கு வாயால் வடை சுடுவதில் வல்லவராக இருப்பார். இதை நம் எல்லா இடங்களிலும் பார்க்கலாம்.
அலுவலகங்களில் நமது உயரதிகாரிகளில் சிலர் அந்த வகையில் தான் வருவார்கள். நிறுவனத்தை தலைகீழாய் நிறுத்தப் போகிறேன், நாம் எல்லோரும் இணைந்து இப்படி செயல்பட வேண்டும், அப்படி செயல்பட வேண்டும்ன்என்றெல்லாம் பேசித் தள்ளுவார்கள். புதிதாக வந்திருக்கும் பணியாளர்கள், தங்கள் நரம்பு புடைக்க அதையெல்லம் கேட்பார்கள். காரணம் அவர்களுக்கு அது புதிது ! ஏதோ புதிய நிறுவனம் பிறக்கப் போகிறது என அவர்கள் உண்மையிலேயே நம்பிவிடுவார்கள்.
காலப் போக்கில் அந்த புதிய பணியாளர்களுக்கு உண்மை நிலமை புரிந்து விடும், பிறகு அவர்கள் கடைசி இருக்கையில் உட்கார்ந்து கடலை கொறித்துக் கொண்டே அந்தப் பேச்சை வேடிக்கை பார்ப்பார்கள். அப்போது புதிதாக வந்தவர்கள் முதல் இருக்கையில் விழிகள் விரிக்க பேச்சைக் கேட்டு மூச்சைப் பிடிப்பார்கள்.
இந்த வாய்ச்சொல் வீரர்கள் ஏட்டுச் சுரைக்காய்கள். அதைக் கொண்டு சமையல் செய்ய முடியாது. அப்படிப்பட்டவர்களைப் பார்த்தால் நாம் பரிதாபப் படவேண்டும். ‘பாவம் ஒண்ணும் செய்யத் தெரியாதவன், பேசியே பொழைப்பை ஓட்டுகிறான்’ என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அலுவலகத்தில் மட்டுமல்ல, அரசியல் இருக்கைகளிலும் நாம் இத்தகையோரைப் பார்க்கலாம். அதிகாரத்துக்கு வரும் முன் இவர்கள் பேசுவதைக் கேட்டு வியந்து போயும், மிரண்டு போயும் மக்கள் வாக்குகளைக் கொட்டுவார்கள். எந்த அளவுக்கு ஓவரா பேசுகிறார்களோ அந்த அளவுக்கு செயலில் வீக் ஆக ஒதுங்கி விடுவார்கள். இது வரலாற்று உண்மை !
இன்னொரு விஷயம், அதிகமாய்ப் பேசுபவர்கள் பிறர் மேல் பழி போடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். ‘இவ்ளோ பேசறியே.. என்ன மாற்றம் வந்துச்சு’ என யாராவது கேட்டால்… இந்த அலுவலகத்தில் முன்னால் வேலை செய்த பணியாளர்கள் நாசம் பண்ணி வெச்சுட்டாங்க. அதனால தான் இப்படி இருக்கு. என்னோட திட்டத்தை இங்கே செயல்படுத்த பலர் முட்டுக் கட்டை போடறாங்க. அதனால தான் நாம இப்படி இருக்கோம் என்றெல்லாம் பழியை சகட்டு மேனிக்கு தூக்கி அங்கும் இங்கும் எறிவார்கள்.
அதிகார இருக்கைகளிலும் இதே நிலை தான். எதிரி நாட்டின் சதி என்றோ, எதிர் அணியினரின் சதி என்றோ, முன்னால் இருந்தவர்களின் வேலை என்றோ பழியைத் தூக்கி அடுத்தவர் மீது போட்டுக் கொண்டே இருப்பார்கள். தனது மிகப்பெரிய பலவீனத்தைக் கூட, பலம் என பறைசாற்ற மூச்சு விடாமல் பேசுவார்கள். அதற்கென ஒரு கூட்டத்தையும் சேர்த்துக் கொள்வார்கள்.
ஒருவர் அதிகமாகப் பேசி பழியைத் தூக்கி வழியில் வருபவரின் தலையில் போடுகிறார் எனில், அவர் உதவாக்கரை என புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். காரணம், செயல்படுபவர்கள் பேச்சைக் குறைப்பார்கள். பேசித் தள்ளுபவர்கள் செயலைக் குறைப்பார்கள்.
உளவியல் சொல்லும் இன்னொரு உண்மை என்ன தெரியுமா ? பேசுபவர்கள் தன்னம்பிக்கை குறைவானவர்கள். தங்களுடைய இயலாமையை மறைக்க எதையாவது பேசிக்கொண்டிருப்பார்கள். இவர்கள் ஒருவகையில் அறிவுக் குறைபாடு உடையவர்கள் !
நாம் சந்திக்கும் பலர் அப்படித் தான் இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையை தோண்டிப் பார்த்தால் ஒரு பலவீன மனிதராக அவர் இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அவர்களோ உலகில் தங்களுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை என்றே சாதிப்பார்கள். தெரியாத்தனமாக ‘உங்களுக்கு தெரியாது’ என அவர்களிடம் சொல்லி விட்டால் தங்களுக்குத் தெரியும் எனும் பிம்பத்தை நிலை நாட்ட பேசியே சாவடிப்பார்கள்.
பேசிக்கொண்டே இருக்கும் வார்த்தைப் போராளிகள் வாழ்க்கையில் எந்த ரிஸ்கையுமே எடுக்க மாட்டார்கள். வாயால் தோரணம் கட்டி நம்முடைய கற்பனைக்குள் ஒரு சுவர்க்கத்தையே கட்டி எழுப்புவார்கள். நிஜத்தில் ஒரு குடிசையைக் கூட வேய மாட்டார்கள்.
வாய்ச்சொல் வீரர்கள் ஒரு விஷயத்தை ஏன் செய்யவில்லை என்பதற்கு ஆயிரம் காரணங்களை அடுக்குவார்கள். ஆனால் எப்போதுமே செய்ய மாட்டார்கள். ஆனால் செயல் வீரர்கள் ஏன் செய்யவில்லை என்பதற்கான நிஜ காரணத்தைச் சொல்லி, அதைச் செயல்படுத்தும் வழிகளை யோசிப்பார்கள்.
வாய்ச்சொல்லில் வீரர்களாய் இருப்பவர்களால் நாடோ, அலுவலகமோ, வீடோ எந்த நன்மையுமே அடையப் போவதில்லை ! அதனால் தான் நிறுவனங்கள் பணியாளர்களை மூன்று விதமாக வகைப்படுத்தி வைக்கின்றன.
முதல் வகையினரை, திங்கர்ஸ் அதாவது சிந்தனையாளர்கள் என்கிறது. இவர்கள் மிக நேர்த்தியாக சிந்திப்பார்கள். நிறுவனத்தை முன்னேற்ற என்ன செய்ய வேண்டும் ? எவற்றையெல்லாம் புதிதாக நிறுவ வேண்டும். என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் ? எப்படி தொழில்நுட்ப உலகில் உள்ள புதிய விஷயங்களை நிறுவனத்தில் செயல்படுத்தலாம் ? என்றெல்லாம் யோசிப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் இன்னோவேஷன் எனப்படும் பிரிவில் வேலை பார்ப்பார்கள்.
இரண்டாவது வகையினர், டூயர்ஸ் அதாவது செயல்படுத்துபவர்கள் என்பார்கள். முதல் வகையினர் சிந்திக்கின்ற விஷயங்களைச் செயல்படுத்துவது இவர்கள் பணி. இவர்கள் நிறுவனத்தின் முதுகெலும்பு போன்றவர்கள். இவர்கள் தான் புதியவற்றைக் கட்டியெழுப்புவதிலும், நிறுவனத்தின் வளர்ச்சியை நிர்ணயிப்பதிலும் பெரும் பங்கு வகிப்பார்கள்.
மூன்றாவது வகையினர் இந்த டாக்கர்ஸ், அதாவது பேசுபவர்கள். இவர்களுக்கு தொழில் நுட்பத்திலும் அதிக பிடிப்பு இருக்காது. சிந்தனையிலும் அதிக தெளிவு இருக்காது. ஆனால் எல்லாமே தனக்குத் தான் தெரியும் என்பது போல பேசித் திரிவார்கள். பெரும்பாலும் இவர்களுக்கு மொழிப் புலமை இருக்கும். இவர்கள் கொஞ்சமேனும் செயல்படும் இடமெனில் அது சேல்ஸ் எனப்படும் விற்பனை பிரிவு தான். எதையும் விற்று விடும் திறமை அவர்களுக்கு உண்டு. வாய்ச்சொல் வீரர்கள் இவர்கள்.
ஒரு மாதத்தின் முடிவிலோ, ஒரு ஆண்டின் முடிவிலோ ‘நீங்கள் செய்ததையெல்லாம் பட்டியலிடுங்கள்’ என்றால், பேசிப் பேசியே வாழ்க்கையை ஓட்டுபவர்களுக்கு சொல்ல எதுவுமே இருக்காது. காற்றில் புரட்சிப் போர் விதைத்த அவர்களுடைய பயணம் ஒரு வீணடிக்கப்பட்ட காலமாகவே முடிந்திருக்கும்.
ஆனாலும் அவர்கள் பேச்சை நிறுத்த மாட்டார்கள். அடுத்த ஆண்டு எல்லாம் சரியாகும் என்பார்கள். அல்லது, மற்றவர்கள் சிறப்பாய் செயல்படக் காரணம் நான் தான் என்பார்கள்.
இன்றைக்கு தொழில் நுட்ப உலகம் வாய்ச்சொல் வீரர்களுக்கு நல்ல களங்களை அமைத்துக் கொடுத்திருக்கிறது. பேஸ் புக் போராளிகளாகவும், இன்ஸ்டாகிராம் கில்லாடிகளாகவும், வாட்சப் வீரர்களாகவும் அவர்களை உருவாக்கி வைத்திருக்கிறது. அத்தகைய வாய்ச்சொல் வீரர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டியது அவசியம்.
நம்மைச் சுற்றியோ, நம் அலுவலகத்திலோ, நம் நண்பர் வட்டாரத்திலோ இப்படிப்பட்ட வாய்ச்சொல் வீரர்கள் இருந்தால் நாம் அவர்களை உதாசீனம் செய்ய வேண்டும். குறைந்த பட்சம் அவர்களுடைய வாய் வலையில் விழாமலேனும் தப்பிக்க வேண்டும்.
அதே போல நாம் வாய்ச்சொல் வீரர்களா என்பதை ஒரு முறை சிந்திப்போம். அப்படியெனில் அதன் காரணம் நமது திறமையின்மையா என யோசிப்போம். அந்த திறமையை வளர்த்துவோம். நிறைகுடம் தளும்பாது, காலி குடம் அமைதியாய் இருக்காது எனும் உண்மை உணர்வோம்.
1,353 total views, 6 views today