நாட்டின் வளமும் ஆட்சி முறையும்
கௌசி-யேர்மனி
21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் பல்வேறுபட்ட இயற்கை அழிவுகளையும், ஆட்சி முறைகளையும், மனித மனங்களின் சீர்குலைவுகளையும் அச்சுறுத்தல்களையும், கண்டு கொண்டிருக்கின்றோம். இவற்றைப் படம் பிடித்துக் காட்டும் இலக்கியங்களிலே இவற்றுக்கான தீர்வுகளை முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளையும் உலக வல்லுநர்களும் படைப்பாளிகளும் படைப்பது தவறில்லை. இத்தகைய இலக்கியங்களே காலந்தாண்டி வாழுகின்ற இலக்கியங்களாக காணப்படுகின்றன. வள்ளுவர் உலகம் உய்ய மனித மனங்களில் உயர்வான மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக 1330 குறள்கள் தந்தார். அது இன்றுவரை உயிர் வாழுகின்றது. ஒளவையார் ஆத்திசூடி கொள்றை வேந்தன் போன்றவற்றின் மூலமும் மன்னர்களுக்கு அறிவுரை கூறும் பாடல்கள் மூலமும் நற்கருத்துக்களை விதைத்துச் சென்றிருக்கின்றார். பெருங்காப்பியங்கள், சிறுகாப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள் போன்றவையும் சிறந்த தத்துவக் கருத்துக்களை முன் வைத்தமையால் இன்றும் உயிர் வாழுகின்றன.
சிலப்பதிகாரம் என்னும் பெருங்காப்பியம் படைத்த சிறந்த கதாசிரியரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான இளங்கோவடிகள்; அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என 3 கருத்துக்களை வலியுறுத்தி இக்காப்பியத்தை எழுதியுள்ளார்.
தேரா மன்னா என்று விளித்து உண்மையை விளக்கிய கண்ணகி மூலம் கோவலன் கள்வன் அல்ல என்ற உண்மையை அறிந்த பாண்டியன் ~~பொன் செய் கொல்லன் தன் சொல் கேட்ட நானே கள்வன்|| எனக்கூறி உயிர் விடுகின்றான். மந்திரிகள் மதியுரை கோளாது, பொய்மை கொண்ட பொற்கொல்லன் சொல் கேட்டு உயிர் நீத்த பாண்டியனும் இக்கால இலங்கை அரசியல் நிலைக்கு எடுத்துக் காட்டாகின்றது. ஏதேச்சையாக நீதிவழி அரசைக் கொண்டு செலுத்தாது, தமது சுயநலத்திற்காகவும், எதிர்கால சிந்தனையில்லாது நாட்டை அழகுபடுத்துகின்றோம் என்று அளவுக்கதிகமான கடன்களை பெற்று, பெற்ற கடன்களை தீர்க்கமுடியாது திண்டாடி நாட்டை சீரழித்த தலைவர்கள் தமது தவறை உணர வேண்டும் என்பதற்கு கண்ணகி போல் ஒருவர் முன்வரவேண்டிய நிலையில் இலங்கை நிலைமை ஏங்குகின்றது.
பார்ப்பா ரறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று
கண்ணகி சொன்ன தவிர்க்க வேண்டியவர்களைத் தவிர்த்து தீமை செய்தவர்கள் பக்கமே தீ சேரவேண்டும் என்பது போல் பழி செய்தவர்கள் பக்கமே தண்டனை சேர வேண்டும் என்று ஒருவர் கொதித்தெழவேண்டும்.
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதனை முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்னும் பழமொழியைப் போல் கோவலன் செய்த முன்வினைப் பயனாலேயே வாளால் வெட்டுண்டு இறந்தான் என்பதை கொண்டு வந்து இளங்கோவடிகள் நிறுத்துகின்றார். இக்காவிய எடுத்துக் காட்டு யார்யார் தவறு இழைக்கின்றார்களோ அவர்கள் என்றோ நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். ~~படித்தவன்; சூதும் வாதும்; பண்ணினால் போவான் போவான் ஐயோ என்று போவான்|| என்று படித்தவர்கள் சூதும் வாதும் செய்தால் என்ன நடக்கும் என்பதற்கு பாரதியார் அழகாகச் சொல்லியதுபோல் தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களால் தமக்குத் தீங்கு வரும்போது தலைவர்கள் எப்படி அழிந்து போவார்கள் என்பதற்கு இலங்கை நாடு எடுத்துக்காட்டாக இருக்கின்றது.
பொன்கொண்டு இழைத்த? மணியைக் கொடு பொதிந்த?
மின்கொண்டு அமைத்த? வெயிலைக்கொடு சமைத்த?
என்கொண்டு இயற்றிய எனத்தெரிவு இலாத
வன்கொண்டல் விட்டுமதி முட்டுவன மாடம்
வலிமையான மேகமண்டலத்தைப் பின்னே தள்ளிவிட்டு சந்திர மண்டலத்தை மோதுவனவான மாடிவீடுகள் பொன்னைக் கொண்டு செய்யப் பெற்றனவா? அதன்மேல் மாணிக்கங்களைக் கொண்டு மூடப்பெற்றனவா? மின்னலைக் கொண்டு அமைக்கப் பெற்றனவா? அதன்மேல் வெயிலைக் கொண்டு முலாம் பூசப் பெற்றனவா எந்தப் பொருளைக் கொண்டு இயற்றப்பெற்றன என்று ஆராய்ச்சி செய்ய முடியாதபடி உள்ளன என்று இலங்கை கட்டிடங்கள் கம்பரால் கம்பராமாயணத்திலே வர்ணிக்கப்பட்டன.
ஆனால் இன்று எப்படிக் கட்டப்பட்டன. எங்கு கடன் பெற்றுக் கட்டப்பட்டன. இது எந்த நிலைக்குக் கொண்டு வந்து முடியப் போகிறது என்று மக்கள் ஏங்கிய ஏக்கத்திற்கு இன்றைய நிலை பதில் சொல்வதாக இருக்கின்றது. எடுக்க எடுக்கக் குறையாத அட்சய பாத்திரம் அல்ல வங்கி. எடுத்தால் திருப்பிக் கொடுத்தாலேயே கேட்கக் கேட்கக் கொடுக்கும். சட்டியில் இருந்தாலேயே அகப்பையில் வரும். சட்டியை வழித்து சொந்த சௌகரியங்களுக்கு பயன்படுத்தினால், நாட்டு மக்களுக்கு எங்கே அகப்பையிலே வரப்போகிறது. வாழத் தெரியாதவர்கள் வாழுகின்ற நாட்டில் ஆளத் தெரியாதவர் ஆட்சி நடக்கிறது என்று வேதாத்திரி மகரிஸி சொன்னது போல் எழுதத் தெரியாதவன் ஏட்டைக் கெடுத்தான். ஆளத் தெரியாதவன் நாட்டைக் கெடுத்தான் என்பது கண்கூடு.
தொண்டைமான் தன் படைவலிமையில் கர்வம் கொண்டு அதியமான் நெடுமான் அஞ்சி மீது படையெடுப்பதற்காக முடிவெடுத்து இருந்த போது அப் போரை நிறுத்த எண்ணிய ஒளவையார், தொண்டைமான் தன்னுடைய படைக்கலக் கொட்டிலைக் காட்டிய போது
இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்திநெய் அணிந்து
கடியுடை வியனக சவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்திக் கோடுதுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதேர் என்றும்
உண்டாயின் பதம்கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல்எங் கோமான் வைந்துதி வேலே
கூரிய முனையுடைய வேல்களோ பகைவர்களைக் குத்திப் பக்கங்களும், நுனியும் கூர் இழந்து, கொல்லனுடைய உலைக்களத்திலே இருக்கின்றன. உன்னுடைய படைக்கலங்களோ, மயிற்பீலியை அணிந்து, மாலை சூடி, உருவம் திரண்ட வலிமையுடைய காம்பு அழகுறச் செய்து நெய் இடப்பெற்று, காவலையுடைய அகன்ற அரண்மனையில் இருக்கின்றன என்று தொண்டைமானைப் புகழ்வதைப் போல் அதியமானைப் புகழ்ந்துரைக்கின்றர். இப்போரால் அழிவு அதியமானுககு அல்ல அவனை எதிர்ப்பவர்களுக்கே என்பதை ஒளவையார் மூலம் அறிந்த தொண்டைமான் அச்சம் கொண்டு போர் எண்ணத்தைக் கைவிட்டான்.
இவ்வாறு நாட்டிற்கு ஒரு பங்கம் வரும் போது அதை முளையிலேயே கிள்ளி எறிய சிறந்த ஆலோசகர்கள் இல்லாத நாடு பாரதி சொன்னது போல் ஐயோ என்று தான் போகும். அதை மீண்டும் நிமிர்த்துவதற்குரிய ஆய்வில் இறங்குவதுதான் தற்கால தீர்வாக அமையும்.
776 total views, 3 views today