திண்ணையில் ஒரு பட்சி.

-தனஞ்சயன். பிரியதர்ஜின.இலங்கை
ஒரு வீடு கட்டப்படுகிற போது அங்கு வந்தணைகிற மனிதப் பட்சிகள் கடைசிவரை அங்கு தங்கிவிடுவதில்லை. காலம் மாற மாற வேறு வேறான ஆகாயம் நோக்கி பறக்கத் தொடங்கிவிடும்.
அவள் அதே ஆகாயத்தில் தனித்துப் பறக்கும் பட்சி. கணவன் குழந்தைகள் என்று விழாக் கோலமாக இருந்த வீடு மட்டுமே அவள் நினைவிலிருக்கிறது இக்கணம் வரை.
தான் தனித்து விடப்பட்டு விட்டோம் என்ற எண்ணத்தை அவள் தன் ஆன்மாவிற்கு என்றும் பழக்கியதேயில்லை. உறக்க நேரம் தவிர்த்து மிச்ச நேரங்களில் திண்ணையில் அமர்ந்தபடி திருப்பரங்குன்றம் வரும் மக்களோடு மக்களாக கலந்து கிடப்பாள். ஏனெனில் அவள் வீடு குன்றத்து முருகனின் பார்வையிலிருக்கிறது.
திண்ணையில் அமர்ந்தபடி தன் வீடு முழுக்க நிறைந்து கிடக்கும் கணவனின் காதலோடும் குழந்தைகளின் சேட்டைகளோடும் பேசுபவள். யாரேனும் பேச்சுக் கொடுத்தால் ஆழமான ஒரு புன்னகையை கொடுத்துவிட்டு தன் உலகிற்குள் திரும்பி விடுவாள். சலனமில்லாத புன்னகைக்கு நிறைய இழப்புகளை விலை கொடுக்க வேண்டியதாக இருக்கும் போல.
பெருமூச்செறிந்து தன்னை தேற்றிக் கொள்ளும் போது சாய்ந்து திண்ணையில் கன்னம் வைத்து படுத்துக் கொள்வாள். தனித்த அவளை சத்தமின்றி அணைத்துக் கொள்ளும் திண்ணை.
ஊர்ப் பெரியவர்கள் அமர்ந்து பேசவும்
குழந்தைகள் விளையாடவும்
வழிப்போக்கர்கள் தங்கிச் செல்லவும்
என திண்ணைகள் இருந்தாலும்
ஒருத்தியை தாங்குதல் என்பது எத்தனை பெரிய நன்மை.
திண்ணைகள் மனித மனங்களை மனிதர்களை விட நன்கறியும்.
கோயில்மணி கூட தனக்கு கேட்க கூடாதென காதுகளில் பஞ்சு அடைத்து தூங்குகிற பிடிவாதக்காரி.சாம்பிராணி வாசனை கண்ட வீடு வெறும் சிலந்திகளின் நூலாம்படைக்கு பழக்கமாகிப் போனது ஆச்சரியம்.
அவள் திண்ணையின் ஓரத்தில் அமர்ந்தபடி தாம்பூலம் தரிக்கும் அழகு ஒரு அழகியல் நிகழ்வு போல் நடந்தேறும். முதிர்ந்த கைகளால் வெற்றிலை, பாக்கு என ஒவ்வொன்றாய் தேர்ந்தெடுக்கையில் நிறைய நிதானத்தை அவளிடம் படிக்கலாம். வெற்றிலையை மடித்து வாயில் திணித்து குதப்புகையில் அவளின் காலம் கணவனோடு தாம்பூலம் தரித்த நாட்களுக்கு நகரும். தலைகுனிந்து எதிரினில் கை தானாய் நீளுகையில் இறந்தகாலம் கண்முன் நிகழ்காலமாய் விரியும். அந்த வெட்கம் பூசிய முதிய முகம் சிவந்து கலங்கும் .
அவள் என்ன உண்கிறாள் எப்போது உறங்குகிறாள் என்பது பற்றி யாருக்கும் தெரிவதில்லை. யாரோ சிவப்பு நிறக் கூடையொன்றை காலையில் கொண்டு வந்து வைத்துவிட்டு போவதை மட்டும் அனுமானிக்க முடிகிறது. அந்தியில் அந்தக் கூடை வாசலில் இருப்பதில்லை. காலையில் வாசலில் அவளின் வருகைக்காக காத்திருப்பது போல பூட்டிய கதவின் நடுவில் வைக்கப் பட்டிருக்கும்.
பக்கத்திலிருந்து கவனித்துக் கொள்ளும் அன்புக்குரியவர்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.அவளுக்கும் வாய்க்கவில்லை. தூர நிற்பவர்கள் பற்றி அவள் ஒரு போதும் அலட்டிக் கொண்டதுமில்லை. மிக மோசமான மனித மனங்களின் அண்மையை விட தள்ளியிருத்தல் எவ்வளவோ மேல் என ஒதுங்கிக் கொண்டவள்.
கணவன் குழந்தைகள் என ஒரே நேரத்தில் தன் சந்தோஷத்தை இழந்து நின்ற போது வந்த மனிதர்கள் ஒவ்வொன்றாய் காணாமல் போனபோதுதான் வாழ்வின் இன்னொரு பக்கத்தை படிக்க ஆரம்பித்தாள்.
வாழ்வில் வரும் ஞானமெல்லாம் சன்மானமாக வாழ்வை கேட்கும் போது நிலைகுலைவதுதானே மனித இயல்பு. நிலைகுலைந்து தன்னை தானே தேற்றிக் கொண்டவள் அவள். தன்னைத் தானே தேற்றத் தெரிந்தவன் வாழ்வின் சதுரங்கத்தில் வெட்டுப்படுவதில்லை.
எல்லாக் காரியங்களும் முடிந்து கணவன் குழந்தைகளின் அஸ்த்தியை கரைத்துவிட்டு திண்ணையில் அமர்ந்து குன்றத்து முருகனை அண்ணார்ந்து பார்த்து பெருமூச்செறிந்து தலைகுனிந்தவள்தான் இன்றுவரை அவள் அவனை நிமிர்ந்து பார்ப்பதேயில்லை. துணையிருப்பான் என்று நம்பியவன் பெருவிபத்தில் தன் மொத்த சந்தோஷத்தையும் பறிகொடுத்த போது எங்கு போனான். நாத்திகம் அவளுக்குள் தலையெடுத்தது.
திண்ணையிலோர் பட்சியாய் அமர்ந்தாள்.
வாழ்வெனும் ஆகாயத்தில் ஞாபகங்களோடு சிறகடிக்கிறாள். வாழ்தலுக்கு நல் நினைவுகளும் போதும்.
படம்-குணராசா தனஞ்சயன்-இடம்-திருப்பரங்குன்றம்