எனது நாடக அனுபவப் பகிர்வு – 21 “ முகமில்லாத மனிதர்கள் “ நாடகம் – 1980

-ஆனந்தராணி பாலேந்திரா-இங்கிலாந்து

கடந்த இதழில் ‘முகமில்லாத மனிதர்கள்’ நாடகத்தில் நடிப்பில் முன் அனுபவம் இல்லாத பலர் நடித்தது பற்றியும் மெல்லிசைப்பாடகர் மா.சத்தியமூர்த்தி பற்றியும் எழுதியிருந்தேன். இந்த நாடகத்தில் மற்றுமொரு முக்கிய பாத்திரமான இந்திரஜித் என்ற பாத்திரத்தில் நடித்தவர் கானகலாதரன். இதுவே அவர் நடித்த முதலாவது மேடை நாடகம்.

அப்போது கானகலாதரன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து கொழும்பிலே வேலை செய்து கொண்டிருந்தார். இவர் இந்த நாடகத்தின் நெறியாளர் பாலேந்திரா 1976ஆம் ஆண்டு நெறியாள்கை செய்த ‘மழை’ என்ற நாடகத்தில் அப்பாவாக நடித்த இரா. சிறீனிவாசனின் உறவினர். அந்த அறிமுகம் மூலம் கானகலாதரனை இந்திரஜித் பாத்திரத்திற்குத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தார். அந்தப் பாத்திரத்துக்கு அவர் மிகவும் பொருந்தினார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த நாடக ஒத்திகைகளின்போதுதான் நான் கானகலாதரனை முதன்முதல் சந்தித்தேன். மிகவும் நகைச்சுவையுடன் பேசும் ஒருவர். எல்லோருடனும் நல்ல சகஜமாகப் பழகுவார். ‘முகமில்லாத மனிதர்கள்’ நாடகத்தில் நானும் கானகலாதரனும் ஒன்றாக நடிக்கும் காட்சிகள் பல இருந்தன. நாங்கள் இருவரும் காதலர்களாக நடித்தோம். ஓரளவிற்கு நெருங்கி நடிக்கும் காட்சிகளும் இந்நாடகத்தில் இருந்தன. அவரின் பேச்சும், பழகும் விதமும் எனக்கு எந்தவித கூச்சமும் இல்லாமல் நடிப்பதற்கு உதவியாக இருந்தது.

கானகலாதரன் பின்னர் 1982ஆம் ஆண்டு பாலேந்திரா நெறியாள்கை செய்த ‘துக்ளக்’ நாடகத்திலும் ‘மழை’ நாடக மீள் தயாரிப்பிலும் நடித்திருந்தார். நடிப்பது மட்டுமல்லாது மேடையமைப்பு, ஆடை வடிவமைப்பு போன்றவற்றிலும் அவர் திறமை மிக்கவர். ‘துக்ளக்’ நாடகத்திற்கான மொகலாய காலத்து உடைகளை வடிவமைப்புச் செய்து துணிகள் வாங்கி அவற்றைத் தயாரிப்பதில் பெரும்பங்காற்றியவர். 1978ஆம் ஆண்டு பாலேந்திரா நெறிப்படுத்திய மேடை நாடகமான ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகத்தை 1982இல் இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினிக்காக பி. விக்னேஸ்வரன் தயாரித்திருந்தார். இந்த நாடக ஒளிப்பதிவிற்கான செற்றைத் தயாரித்தவர்களில் கானகலாதரனும் ஒருவர். இவர் இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் மிக நீண்ட காலம் வசித்த பின்னர் தற்போது லண்டனில் வாழ்ந்து வருகிறார். நாடகத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்தாலும் நாங்கள் லண்டனிலிருந்து சென்று பிரான்ஸ் நாட்டில் எமது நாடக விழாக்களை நடத்தியபோது மிக ஒத்தாசையாக இருந்தார்.
இவருடன் இணைந்து செற் தயாரித்த மற்றொருவர் மகேந்திரன். ‘முகமில்லாத மனிதர்கள்’ நாடகத்தில் வரும் அமல், விமல், கமல் என்ற பாத்திரங்களில் ஒரு பாத்திரத்தில் நடித்தவர். இவரும் நடிப்பிற்குப் புதியவர். மொரட்டுவ – கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தார். 1976ஆம் ஆண்டு பாலேந்திரா நெறிப்படுத்தி நான் நடித்த ‘நட்சத்திரவாசி’ நாடகத்தில் வரும் பத்து கோரஸ் நடிகர்களில் ஒருவராக நடித்திருந்தாலும் வசனம் பேசி நடிப்பது இதுவே முதல் தடவை. மிக இயல்பாக நடித்தார். ஓவியத்திலும் இவருக்கு நாட்டம் அதிகம். தற்போது ஒஸ்ரேலியாவில் வசித்து வருகிறார்.

‘முகமில்லாத மனிதர்கள்’ முதல் தயாரிப்பில் நடித்த மற்றொரு நடிகர் சுப்ரமணியம். இவர் பாலேந்திராவின் நெருங்கிய நண்பர். அவரோடு ஒன்றாகத் தங்கியிருந்து மொரட்டுவ–கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தில் பொறியியல் கற்றவர். ‘சுப்பர்’ என்று நண்பர்கள் இவரை அழைக்க நானும் அப்படியே அழைக்கத் தொடங்கினேன். இவரை எனக்கு 1975ஆம் ஆண்டில் இருந்து தெரியும். நான் முதன்முதல் நடித்த மேடை நாடகமான ‘பிச்சை வேண்டாம்’ இல் நடித்தவர். இந்த நாடகத் தயாரிப்பு பற்றி நான் ஏற்கனவே முன்னைய இதழ்களில் விரிவாக எழுதியுள்ளேன். சுப்பர் பேசும்போது ஒரு கதை சொல்வதுபோல இருக்கும். தீவிரமான உரையாடலாகவும் இருக்கும். நல்ல நடிகர். பாலேந்திரா தயாரித்து நெறியாள்கை செய்த வேறு நாடகங்களுக்கும் மேடைக்குப் பின் நிறைய உதவிகள் செய்து வந்த ஒருவர். இவரும் தற்போது ஒஸ்ரேலியாவில் வசித்து வருகிறார்.

அமல். விமல். கமல் பாத்திரங்களில் நடித்த மற்றொரு நடிகர் பாஸ்கரன். இவரும் கட்டுபெத்தை – மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தார். பாஸ்கரன் ஏற்கனவே 1979ஆம் ஆண்டு பாலேந்திரா நெறியாள்கை செய்த ‘ யுகதர்மம்’ நாடகத்தில் கூலியாளாக மிகச் சிறப்பாக நடித்திருந்தார். இவர் மிகவும் துடிதுடிப்பான இளைஞர். என்னை ஆனந்தி அக்கா என்று மிக அன்போடு அழைத்துப் பழகுவார். நாடக மேடையேற்றங்களுக்காகத் தூரப் பயணங்கள் செல்லும்போது மிக உற்சாகமாகப் பாடி எல்லோரையும் மகிழ்விக்கும் ஒருவர். இவர் தற்போது பாரெயின் நாட்டில் வசித்துவருகிறார்.

“ முகமில்லாத மனிதர்கள்” நாடகத்தில் வரும் இரண்டாவது பெண் பாத்திரமான மாமி பாத்திரத்தில் நடித்தவர் நிர்மலா. இவர் ஏற்கனவே பாலேந்திரா நெறியாள்கை செய்த ‘கண்ணாடி வார்ப்புகள்’ இ ‘புதிய உலகம் பழைய இருவர்’, ‘ஒரு பாலை வீடு’, ‘அரையும் குறையும்’ ஆகிய நாடகங்களில் நடித்த முன் அனுபவம் நிறைய உடையவர். இவரைப்பற்றி நான் ஏற்கனவே எனது முன்னைய கட்டுரைகளில் எழுதியுள்ளேன்.
தொடரும்…..

988 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *