பெண்ணே நீயே உன் சக்தி!
செல்வி.திவ்யகுமாரி சின்னையா – லாஷ்ய கலாபவனம் நடனப்பள்ளி இயக்குனர்-இலங்கை
பெண்ணே பார்ப்பவர் போர்த்த பார்வையில் உன்னை நீ அறியாமலேயே பேதையாய்,பெதும்பையாய், மங்கையாய், மடந்தையாய், அறிவையாய், தெரிவையாய் ஈற்றில் பேரிளம் பெண்ணாக உன்னை நீயே பரிணமித்து விடுகிறாய். பெண் மகவாய் பிறந்ததில் இருந்தே மகாலக்ஷ்மியாய்,தேவதையாய்,தாயாய், சேயாய், தாரமாய், சகோதரியாய் போற்றுதலும் புகழ்தலும் பெண்ணானவள் விலை மதிப்பில்லா பொக்கிஷம் என்றுருரைத்தலும், இறைவனின் தன்னிகரில்லா படைப்பு என்ற இன்போதை வார்த்தைகளில் மயங்க வைத்த சமூகம், உண்மையில் உன்னை யாராய் மதிக்கின்றது. ஒடுக்கப்படும் வர்க்கமாக்கப்படுகிறாயா? இல்லை இவ்வாறான மாய வார்த்தைக்குள் பாதுகாப்பை உணர்கிறாயா உண்மையில் யார் நீ?
ஆணும் பெண்ணுமாய் கலந்த இச்சமூகம் பெண்மையை மட்டும் அதிகப்படியாக போற்றுதலுக்குரிய படைப்பாய் வைத்து அங்கீகரிக்கிறதே அது உண்மையில் உனக்கான அங்கீகாரம்தானா அல்லது மான்விழியே…! கயல்விழியே…! கனிமொழியே…! என்றெல்லாம் வார்த்தை ஜால வலைகளுக்குள் விழ வைக்கும் போது தெரிந்தும் தெரியாதது போல் சிக்கி, நீயாக உன்னை பெருமிதமாக எண்ணி ஏமாற்றி கொள்கிறாயோ?
அப்படியாயின் இந்த சமூகம் இரு கோணங்களில் மட்டுமே உன்னை சித்தரித்து மகிழ்கிறது. ஒன்று பெண்ணை போற்றி புகழ் பாடி, நீ பாத்துகாப்பாய் இருக்கிறாய் என்ற எண்ணப்போர்வைக்குள்ளே கரை காண முடியா கடலுக்குள் நீந்த செய்து விடுகிறது அல்லது ஏதோ… ஆண்களை பகை கொள்கின்ற வர்க்கம் என்றும், ஆண்களை வீழ்க்க வந்த வர்க்கம் என்றும் உன்னை உருமாற்றிய கோணத்தில் சித்தரிக்கின்றது.
பெண்ணே! ஒன்றை மட்டும் உணர்ந்து கொள் உன்னை கடவுளுக்கு நிகராய் சித்தரிக்கும் இச்சமூகமே மாதவிலக்கு காலங்களில் சமய சடங்குகளில் விலக்கியும் வைக்கின்றது, தாயென போற்றும் உன்னை ஆத்திரமிகுதியால் தகாத வார்த்தைகளில் தாயின் தன்மையை கொச்சைப்படுத்திகிறது உருவக்கேலியும் செய்கிறது பெண் குழந்தை என்று குலதெய்வமாய் ஏந்தி மகிழும் உலகமே பாலியல் வன்புணர்வு எனும் கொடூர செயலால் பெண் குழந்தைகளின் வாழ்வை சிதைக்கின்றது. பெண்ணை போதை சடமாய் பார்க்கிறது கொடுமை என்னவெனில் ஆண் குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல என்பதே. புரட்சி பெண் என போற்றும் இந்த கூட்டமே, சில நேரங்களில் அவள் உயர்வின் வெற்றியை ஏற்க பெறாமையால் சக வேலை தளங்களிலும் நிறுவனங்களிலும் அவளை எழ விடாமல் வெட்டி வீழ்த்துகிறது. உன்னை மனைவி என்றோ மருமகள் என்றோ பெருமித ஸ்தானம் தரும் கூட்டமே நீ துணையினை இழந்ததும் உடன் கட்டையும் ஏற்றி விட்டிருக்கிறது.
சூழ்நிலைக்கு ஏற்றாட்போல் நிறம் மாற்றி கொள்ளும் பச்சோந்தி கூட்டமான இந்த சமூகத்தின் போற்றுதல் வார்த்தைகளையோ கேட்டு உன்னை நீ ஏமாற்றி கொள்ளாதே… “யானையின் பலம் அதன் தும்பிக்கையே “அது போல் “பெண்ணே உன் பலம் உன் நம்பிக்கையே”, பெண்ணாக உருவக படுத்தப்படும் ஆதி தெய்வங்களையே தன் சுபாவங்களால் தன்னை பெருமித படுத்திக்கொள்ள கல்வியா, செல்வமா, வீரமா என்று முரண்பாட்டுக்குள் சிக்க வைத்த உலகம் இது. இறைவியரையே எது பெரிது என்ற குழப்பத்தில் ஆழ்த்த முடிந்தால், பெண்ணே இவற்றின் முன் நீ துச்சம்.
உன் நிலை தளறி விடாதே, வீரத்தால் நீ சிறந்தவள் எனில் உன்னை நீ நம்பு அந்த வீரம் தான் சிறந்ததானால் அதை எண்ணி ஆடம்பரம் கொள்ளாதே, ரௌத்திரம் பழக வேண்டிய இடத்தில் பழகு. கல்வியில் நீ சிறந்தவளானால் கல்வியால் உன்னை சீர் செய்து கொள் வீண் பெருமிதம் கொள்ளாதே. செல்வத்தால் தான் சிறந்தவள் எனின் உன்னை நீ உதவும் பாங்குடையவள் ஆக்கி கொள் இருமாப்பு கொள்ளாதே.
பெண்ணானவள் இறைவியாகட்டும், அல்லது லௌகீக உலகில் வாழ்பவள் ஆகட்டும், அவள் அவளுக்குரிய தனிப்பட்ட பண்புகள், சுபாவங்களின் அடிப்படையில் தனித்து, சிறந்து விளங்குபவள். உன்னை இன்னொரு பெண்ணோடும் ஒப்பிடாதே, எந்த ஒரு ஆடவரோடும் ஒப்பிடாதே சரி நிகர் பார்க்காதே. பிரபஞ்ச அடிப்படையில் இரண்டும் வேறு வேறே. உனக்கான தனித்துவம் உன்னை சார்ந்ததே. மேலும் ஒன்றை கூடி உறுதி செய்ய வேண்டுகிறேன். நான் குற்றப் பார்வை கொண்டு நோக்கும் இந்த சமூகம் வேற்று உலகத்தாரை அல்ல. நீயும் நானும், ஆணும் பெண்ணும் இணைந்த சமூகமே. இங்கு பெண்ணை பெண்ணும், பெண்ணை ஆணும், ஆணை பெண்ணும் தூற்றுதலும், வீழ்த்ததலும் வீணானது.
ஒன்று மட்டும் உறுதி நீ வீழ்ந்தாலும் எழுந்தாலும், மகிழ்ந்தாலும் மனம் வருந்தினாலும், சமூக பார்வைக்குள் சிறை பிடிக்கும் இந்த மனித வர்க்கம் கழுகு போல் உன்னை எதிர்நோக்கி காத்திருக்கும். உன்னை நீ உணர்ந்து, உன் ஆழுமை இதுவென கண்டறிந்து பெருமிதம் இல்லா, ஆர்ப்பாட்டமற்ற உனக்கான சரியான பாதையை நீயே உருவாக்கியாக வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தனி மனித உரிமை, மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் தனித்தன்மை பெருகின்றனர். ஆக ஒவ்வொரு பெண்ணும் தனித்தனி ஆளுமை உடையவள் அவள் பருவ மாற்றங்களை அவளின் நிகழ் நிலையை உணர வைக்கின்றன. பெண்ணே உனக்கான வெற்றி பாதையை நீயே செதுக்கியாக வேண்டும். உன்னை பூஜைப்பதற்கு நீ கடவுளும் இல்லை, அடக்கி முடக்க சிறை கைதியும் இல்லை. உடல் கூறுகளின் அடிப்படையில் ஆணிலிருந்து சில உடல் உள உணர்வு மாற்றங்களை பெற்ற சக மனிதி நீ. என்றும் ஆணுடன் உன்னை சரி நிகர் எண்ணாதே. உனக்கான தனித்தன்மை என்றும் அவனிடத்தில் பிறக்காது ஆணுக்கான தனித்தன்மையை என்றும் உன்னில் நீ கொள்ள இயலாது. பெண்ணே உன் கடமைகளோடும் உணர்வுளோடும் உன்னை நீ உணர் உலகம் உன்னை உணரும்.
863 total views, 3 views today