ஜனாதிபதியாக ரணில் வியூகம்

மக்களால் தெரிவு செய்யப்பட்ட

கொழும்பிலிருந்து ஆர்.பாரதி

தன்னுடைய ஜனாதிபதிப் பதவிக்காலத்தை நீடிப்பதற்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாகுவதற்கும் ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுச் செயற்படுகின்றார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

இதற்காக பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றிற்குச் செல்வதற்கு ரணில் விக்கிரமசிங்க திட்டமிடுகின்றார். அது வெற்றியளிக்காவிட்டல், ஒரு வருடம் முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்தி மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் அவர் ஆலோசிக்கின்றார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகவிருந்த இரண்டரை வருடங்கள் போக எஞ்சியுள்ள இரண்டரை வருடங்களுக்கே ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனாதிபதியாக இருக்க முடியும். நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்துதற்கு இந்தக் காலம் போதாது எனக்கருதும் ரணில் விக்கிரமசிங்க,அதனைக் காரணமாகக்காட்டி, மேலும் ஐந்து வருடங்களுக்கு நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாகப் பதவியில் தொடர்வதற்கான உபாயங்களை வகுக்கத் தொடங்கியிருக்கின்றார்.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரல்ல என்ற விமர்சனமும் பரவலாக முன்வைக்கப்படுகின்றது. இதனை மாற்றியமைக்க ரணில் முற்படுகின்றார். அதனால், தேர்தல் ஒன்றைச் சந்திப்பதன்மூலமாகவே அதனைச் சாதிக்கலாம் என அவர் கருதுகின்றார். கொழும்பிலுள்ள அரசியல் கள நிலவரங்களும் தமக்குச் சாதகமானதாக இருப்பதாக அவர் கருதுவதாகவும் தெரிகின்றது.

“மொட்டு அணி” எனக்கூறப்படும் ராஜபக்ஷக்களின் பொதுஜன பெரமுன பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் ஒன்றையோ ஜனாதிபதித் தேர்தலையோ சந்திப்பதற்கு தற்போதைய நிலையில் தயாராகவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ராஜபக்ஷக்களுக்கு எதிராக தென்னிலங்கை அரசியலில் அடித்த “புயல்” இப்போது சற்று ஓய்ந்திருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால், அதன் பாதிப்பிலிருந்து எழுந்துநிற்கக்கூடிய புதிய பலத்துடன் ராஜபக்ஷக்கள் இப்போதைக்கு இல்லை.

மொட்டு அணிக்கு புத்துயிரூட்டப்போவதாக மாவட்ட ரீதியாக மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட பிரச்சார இயக்கம் இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது. உட்கட்சி மோதல்கள், ராஜபக்ஷ சகோரரர்களிடையிலான பனிப்போர் என்பனவும் அவர்கள் மீழ் எழுச்சி பெறுவதற்குத் தடையாக உள்ளன. அதனைவிட, அவர்கள் பேரணிகளை நடத்த முற்படும் போது உருவாகும் பொதுமக்களின் எதிர்ப்புக்களும் அவர்களை அச்சுறுத்துகின்றன. கடந்த மாதம் நாவலப்பிட்டியில் அவர்கள் நடத்திய பேரணியின் போது நிகழ்ந்த சம்பவங்கள் அவர்களுக்கு நல்ல பாடத்தைப போதித்திருக்கின்றது. இதனால், மக்கள் முன் செல்வதை அவர்கள் ஒத்திவைக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பின்னணியில் இரகசிய ஆய்வு ஒன்றை மொட்டு அணி முன்னெடுத்தது. அந்த ஆய்வின் முடிவுகள் ராஜபக்ஷக்களுக்கு – குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிர்வைக் கொடுத்திருக்கின்றது. மொட்டு அணிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு எவ்வாறுள்ளது என்பதைக் கணிப்பதற்காகவே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஏப்ரல் மாதத்திலிருந்து காணப்பட்ட மக்களின் அதிருப்தி அப்படியே இருப்பதாக இந்த ஆய்வு தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றது. இதனையடுத்தே மாவட்ட ரீதியாக மஹிந்த ராஜபக்ஷவை முன்னிறுத்து முன்னெடுக்கப்பட்ட “சாம்பலிலிருந்து மீழெழுவோம். ஒன்றிணைந்து எழுவோம்” டின்ற கோஷத்துடன் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த பேரணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

“மொட்டு அணி”யின் பாராளுமன்ற உறுப்பினர்களிலும் பெரும்பாலானவர்கள் தமது தொகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்துவருவதும் தெரியவந்திருக்கின்றது. இந்தப் பின்னணியில் பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் சென்றால் படுதோல்வியடைய வேண்டியிருக்கும் என்பதையும் ராஜபக்ஷக்கள் கணித்திருக்கின்றார்கள். பாராளுமன்றத்தில் தற்போதுள்ள பெரும்பான்மையைத் தக்கவைப்பதும், ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாப்பதும்தான் அவர்களுடைய தற்போதைய உபாயமாக இருக்கின்றது. இதனால்தான் இறுதிவரையில் கடுமையாக எதிர்த்த அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தத்தை ஆதரிப்பது என்ற முடிவை பொதுஜன பெரமுன கடைசி நேரத்தில் எடுத்தது. இந்த நிலைமைகளை நன்கு உணர்ந்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க தான் ஜனாதிபதிப் பதவியில் தொடர்வதற்கு மொட்டு அணியின் ஆதரவு கிடைக்கும் எனக் கணக்குப் பார்க்கின்றார்.

பிரதான எதிர்க்கட்சியாகவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியைப் பொறுத்தவரையில் சஜித் பிரேமதாசவின் தலைமை அங்கு பலவீனமாகவே காணப்படுகின்றது. கிடைத்த சந்தர்ப்பங்களைத் தவறவிட்ட ஒருவராகரே சஜித்தை அவருக்கு நெருக்கமான பலரும் பார்க்கத் தொடங்கியிருக்கின்றார்கள். இதற்கு மேலாக அக்கட்சியைப் பிளவுபடுத்துவதற்கான உபாயங்களையும் ரணில் வகுத்திருக்கின்றார். ஒருசிலர் ஏற்பனவே வெளியே வந்துவிட்டார்கள். வரப்போகும் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் பின்னர் மேலும் சிலர் வெளியேறலாம். ஆவர்களில் சிலருக்கு அமைச்சர் பதவிகளும் தயாராகவிருப்பதாகத் தெரிகின்றது.

இதற்கு மேலாக தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் வாக்குகளும் தமக்கு ஆதரவாக இருக்கும் என ரணில் கருதுவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. சிறுபான்மையினரின் மனங்களை வெல்வதற்கான திட்டங்களையும் அவர் வைத்திருக்கின்றார். தற்போதைய நிலையில் மொட்டு அணி இதற்கு எதிராக களமிறங்காது என்பதும் அவரது கணிப்பு. அதனால்தான் அடுத்த சுதந்திர தினத்துக்கு முன்னதாக தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பது போன்ற சில அறிவிப்புக்களை அவரால் வெளியிடமுடிந்தது. அரசியல் கைதிகள் சிலரை ரணில் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி பொதுமன்னிப்பில் விடுதலை செய்திருப்பதும் தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்றிருக்கின்றது.

தற்போதைய நிலையில் இலங்கையில் ஸ்திரமான அரசு ஒன்று அவசியம் என்ற கருத்து உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேசத்திலும் காணப்படுகின்றது. ரணில் பதவியில் தொடர்ந்தால்தான் சர்வதேச உதவிகள் கிடைக்கும் என்ற கருத்து மக்களிடம் காணப்படுகின்றது. அரசாங்கமும் அவ்வாறான கருத்தை மக்களிடம் பரப்புகின்றது. ரணிலின் வெளிநாட்டு பயணங்களும் சந்திப்புக்களும் இதற்கு உதவுகின்றன. இந்தப்பின்னணியில் அதிகாரத்தில் தொடர்வதற்கு இரண்டு வகையான உபாயங்களை வகுத்து ரணில் செயற்படுகின்றார். முதலாவது திட்டம் செயற்படவில்லையாயின் இரண்டாது திட்டத்தை அவர் செயற்படுத்துவார்.

தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்வது அவரது முதலாவது திட்டம். அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இதற்கான காய் நகர்த்தல்களை அவர் முன்னெடுக்கலாம். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசியலமைப்பு திருத்தம் ஒன்றைக் கொண்டுவருவதும், அதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமாக மேலும் ஐந்து வருடங்களுக்கு பதவியில் நீடிப்பது அவரது முதலாவது திட்டம் எனக் கூறப்படுகின்றது. இது தொடர்பில் சட்ட ஆலொசகர்களுடன் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் ஆராய்ந்திருக்கின்றார்.

இந்தத் திட்டம் சாத்தியமாகவில்லை என்றால் மாற்றுத் திட்டம் ஒன்றும் ரணிலிடம் இருப்பதாகத் தெரிகின்றது. இதன்படி ஜனாதிபதித் தேர்தலை ஒருவரும் முன்கூட்டியே நடத்துவது தொடர்பாகவும் அவர் ஆராய்கின்றார். தற்போதைய நிலையில் 2024 நவம்பர் வரையில் ரணில் ஜனாதிபதியாக இருக்க முடியும். ஆனால்,அடுத்த நவம்பரில் அதாவது 2023 நவம்பருக்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான அதிகாரம் அவருக்கு கிடைக்கும். எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருக்கும் நிலையைப் பயன்படுத்தி அடுத்த நவம்பருக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவது அவரது இரண்டாவது திட்டம்.

ராஜபக்ஷ குடும்பத்துக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடுகளால் அவர்கள் தரப்பில் உடனடியாக யாரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் வாய்ப்பில்லை. அதனைவிட நாமல் ராஜபக்ஷவை அடுத்த தேர்தலில் களமிறக்கி விஷப் பரீட்சை ஒன்றை நடத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷவும் தயாராகவில்லை. நாமலுக்கு அரசியலில் இன்னும் முதிர்ச்சி வர வேண்டும் என அவர் எதிர்பார்ப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றார்கள். பஸில் இரட்டை பிரஜாவுரிமை உள்ளவராக இருப்பதாலும், மக்கள் மத்தியில் அவர் மீதான சீற்றம் அதிகமாக இருப்பதாலும் அவரை களமிறக்க மஹிந்த விரும்பமாட்டார். அதனால், மொட்டு அணி குறித்து ரணில் இப்போது அஞ்சவில்லை.

இந்தப்பின்னணியில் சஜித் மட்டும்தான் போட்டியாளராக இருக்கின்றார். அவரை மேலும் பலவீனப்படுத்தினால், தன்னை அசைக்க முடியாது என்ற நம்பிக்கை ரணிலிடம் உள்ளது. அதற்கான சில செயற்பாடுகளை இவ்வருட இறுதியில் பார்க்க முடியும். குறிப்பாக வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புடன் சஜித்தை பலவீனப்படுத்துவதற்கான சில நகர்வுகளை எதிர்பார்க்க முடியும். சுர்வதேசமும் குறிப்பாக மேற்குலக நாடுகளும் ரணிலைத்தான் விரும்புகின்றன. அதனால் உள்நாட்டில் அவரைப் பலப்படுத்தக்கூடிய வகையில் தேவையான சில பொருளாதார உதவிகளுக்கு மேற்கு நாடுகள் வழிவகுக்கலாம். இவை அனைத்தையும் கணித்துத்தான் ரணிலின் தற்போதைய நகர்வுகள் அமைந்திருப்பதாக கொழும்பில் அரசியல் வட்டாரங்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையை தமிழ்த் தரப்புக்கள் எவ்வாறு பயன்படுத்தப்போகின்றன என்பதும் கவனத்துக்குரியதாகியிருக்கின்றது.

1,059 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *