பெயர் என்பது வெறும் பெயரல்ல.

கவிதா லட்சுமி நோர்வே

ஒரு மனிதனுடைய பெயர் என்பது வெறும் பெயரல்ல. அது ஒரு பெயராக மட்டும் மனதில் பதிவதில்லை. அது உடலுக்கும் உயிருக்குமான அடையாளம் என்பதுகூட அல்ல. மனிதனுடைய செயற்பாடுகளினதும், செயற்பாட்டின் வினைகளாலும் அது கட்டியெழுப்பப்படுகிறது. பெயர்கள் எமது உணர்வலைகளைக் தட்டியெழுப்பக்கூடியவை. ஒவ்வொருவருக்கும் சில பெயர்கள் மனிதில் பதிந்துவிடும். சில பெயர்களின் மேல் ஒதுவித ஈர்ப்பு ஏற்பட்டிருக்கும்.
 
இந்தப் பெயர்களைப் பற்றியெல்லாம் நான் அதிகம் சிந்தித்ததில்லை. இருந்தும் பல வருடங்களாக எனக்குள் ஒருவித கிளர்ச்சியை, இனம் தெரியாத ஈர்ப்பை, ஒரு நேசத்தை ஒரு பெயர் ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றது. சுற்றிவளைக்காமல் சொல்வதென்றால் எனக்கு அந்தப்பெயரின் மேல் பெருங்காதல். பல காலங்கள் கடந்தும் அந்தப் பெயரின் மேல் உள்ள மயக்கநிலையின் அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது என்பது மிகையல்ல.

அவன் ஒரு ஓவியன்.
அவனுடைய ஓவியங்களை இணையத்தளங்களில் பார்ப்பதென்பது எனக்கு ஒரு போதை. இந்த உலகத்தில் அவனைவிட பெரும் ஓவியர்கள் இருந்திருக்கலாம். பல ஓவியங்கள் உலகப்புகழ் கொண்டிருக்கலாம், அதுபற்றி நான் அறியமாட்டேன். ஓவியங்கள் பற்றிய எனது அறிவு மட்டுப்படுத்தப்பட்டதே. எனக்கு அவனது ஓவியங்கள் கிள்ளிவிட்ட உணர்வலைகளை வேறு ஓவியங்கள் தரவில்லை என்பது எனது தவறல்லவே. தற்போதுகூட அவனை இந்தச் சந்தர்ப்பத்தில் ஒருமையில் அழைப்பதென்பது அவனோடு எனக்குள்ள உரிமையை உரைப்பதற்காக இருக்கலாம்.
 
அவனது ஓவியங்கள் கவிதையோடு கூடியவை. இது கவிதை மட்டுமல்ல அழகுணர்ச்சியின் உச்சத்தை வர்ணங்களில் காண்பது இது. ஒளிக்கதிர்களின் அரங்கம் இது. வெறும் வர்ணங்களால் ஆனவைபோலல்லாமல் கதைபேசும் கண்களையுடையவை. அவனது கைகளில் கடவுளர்களெல்லாம் ஜனனம் செய்தார்கள். இணையத்தில் மட்டுமே பார்த்து பரவசமடையும் எனக்கு அவனுடைய ஓவியங்களை நேரிடையாகக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தால்? கிடைத்தது. 
 
ஓவியக்கண்காட்சி மண்டபத்திற்கு போவதென்றவுடனேயே பல கனவுகளோடும் புகைப்படக்கருவியோடும், நானும் நண்பர்களும் சென்றோம். ஆரம்பத்திலயே புகைப்படம் எடுக்கும் கருவியை தடையென்று காவலர்கள் வாங்கி வைத்தது ஏமாற்றத்தைத் தந்தாலும் எனது ஆர்வம் சற்றும் குறையவில்லை. கண்களும், இதயமும் போதாதா பதியவைத்துக்கொள்ள? நான் தற்போது இருப்பது மைசூர். கண்காட்சி மண்டபத்தில் பல ஓவியர்களுடைய படைப்புகள் காட்சிப்படுத் தப்பட்டிருந்தன. அனேக ஓவியங்கள் மைசூர் ராஜவாரிசுகளின் ஓவியங்களாக இருந்தன. என்னோடு வந்தவர்கள் என்னைவிட பெரும் கலையார்வம் கொண்வர்கள் ஆதலால் ஒவ்வொரு ஓவியத்தின் முன்னும் அவர்கள் நிதானமாக இரசித்தவண்ணம் வந்தனர். தேடிவந்த ஓவியங்களை காண கண்கள் அலைந்தபடியே நடந்துகொண்டிருந்தேன் நான். வேறு சில ஓவியங்களும் என்னைக்கவர்ந்திருந்தன. அதற்குள் எனது தம்பி ஓடிவந்து நான் தேடிவந்த ஓவியங்கள் அடுத்த அறையில் இருப்பதாக அழைத்தான். உடனே அவன் பின்னால் போய்விடத்தான் தோன்றியது. ஆனாலும் நீ போ என நான் மற்ற ஓவியங்களைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்ற தோரணையில் அவனை அனுப்பி வைத்தேன்.

என்னை ஒருநிலைப்படுத்த நான் எடுத்துக்ககொண்ட நிமிடங்கள் அவை. அந்த நிமிடங்கள் மிக ரம்யமானவை. வார்த்தைகளில் அதை சொல்வது அத்தனை சுலபமல்ல. அது ஒரு காதலனை முதல்முதலில் சந்திக்கச் சென்றவர்களால் உணர்ந்துகொள்ள முடியும். தனது குழந்தையை ஒவ்வொருமுறையும் ஸ்பரிசிக்கும் ஒருவரால் அறியமுடியும். சில ஒவியங்களுக்காக மனது இத்தனை தூரம் அடித்துக்கொள்வது என்பது எனக்கே ஒரு வித வெட்கமாகத்தான் இருந்தது. அவனது ஓவியங்களின் அறையில் கால்வைத்தபோதே போதை உள்ளங்கால்களில் ஏறத்தொடங்கியது. 
 
என் கண்முன்னே ”நிலவுறும் விழிகள்” விரிந்திருந்தது. ஒரு நொடி கண்களை இறுக்கமூடித் திறந்துகொண்டேன். காதல் என்பது இரு மனங்களுக்கானது மட்டுமல்ல என நிமிடங்கள் பேசத்தொடங்கின. பிரபஞ்சம் முழுவதுமாய் எழுந்து என் வெளி நிறைத்துநின்றான் ரவிவர்மன். எனது நிமிடங்கள் ஸ்தம்பித்தன.

பாரதியும் இரவிவர்மனும்
 
ஓவியன் இரவிவர்மனை வியந்தணைத்துக் கொண்டது நான் மட்டுமல்ல. பாரதியும் தான். இரவிவர்மாவின் சித்திரங்களில் மனம் லயித்து இருந்ததை அவன் மறைந்த போது, பாரதி இந்தியா இதழில் ‘ஓர் வரப்பிரசாதியின் மரணம்’ (A Genius Dead ) என்ற தலைப்பில் வார வர்த்தமானச் செய்திகளில் எழுதியதிலிருந்தும் ‘ஓவியர்மணி இரவிவர்மா’ எனும் தலைப்பில் தீட்டிய கவிதையில் இருந்தும் அறிந்து கொள்ள முடிகிறது.
 
சந்திர ஒளியை இறைவன் படைத்த பின்னர், அவ்வொளியைப் பருக சாதகப் பறவையைப் படைத்தது போல, வானுலகில் தேவர்கள் பருக அமுதம் படைத்தது போல, இந்திரனுக்குப் பெருமை சேர்க்க வெள்ளையானை கொடுத்தது போல, எங்கும் புகழ் பெற்று ஒளிவீசி நிற்கும் அளவிட முடியாத இரவிவர்மனின் குற்றமில்லா அறிவுக்கண்கள் நுகர்வதற்காக,பூக்களிலும் நீலவானிலும், பெண்கள் முகத்திலும் இலகி விளங்கும் அழகை இறைவன் படைத்தான் என்கிறான் பாரதி.
 
ஒளியைப் பருகி உயிர் வாழும் சாதகப் பறவையோடும், விண்ணவரின் அமுதத்தோடும்,கிடைத்ததற்கரிய வெள்ளையானை எனவும் இரவிவர்மனை ஒப்புநோக்கிப் பார்க்கிறான் பாரதி. 
அரச மாடங்களில் மட்டுமல்லாது ஏழை மக்களின் குடிசைகளிலும் கூட இரவிவர்மனுடைய ஓவியங்கள் ஒளிவீசின. செல்வந்தர்களையும் ஏழை மக்களின் உள்ளத்தையும் பேருவகையடையச் செய்த நீ, இவ்வுலக வாழ்க்கை போதுமென்று எண்ணியதாலா வானுலகம் சென்றாய் எனவும் வினவுகிறான். 
 
இரவிவர்மன் விண்ணுலகம் வருகிறான் என்ற செய்தி கேட்டு, இரவிவர்மன் தான் வரைந்த ஓவியங்களோடு விண்ணுலக மங்கையர் அழகை ஒப்பு நோக்கிப் பார்க்கவே வருகிறான் என்று அச்சம் கொண்ட அரம்பையும், ஊர்வசியும் மற்றுமள விண்ணுலக அழகிகள் அனைவரும் தேவலோகக் கதவை அடைத்து விட்டனராம். 
 
இரவிவர்மன் தீட்டிய மங்கையரோடு அரம்பையர் தம்மை ஒப்பு நோக்கினால் தாம் அழகற்றவராப் தெரிந்து விடுவோமோ என்பது விண்ணுலகப் பெண்களின் பயமாக இருந்ததாம். 
காலத்தால் என்றும் அழியாத பெருமைபெற்ற பெருஞ்சக்தி செய்யும் விடயங்கள் கூட அழிந்துபோகும் இம்மாய உலகத்தை எவ்வாறு நவில்வதென்கிறான்!
 
சந்திரனொளியை ஈசன் சமைத்தது சாதகப் பறவை பருகவே எனும் பாரதியின் எண்ணவோட்டங்களோடு நானும் சேர்ந்து பயணிக்கும் போது அருங்காட்சியகத்தில் நான் வியந்து நோக்கிய இரவிவர்மனின் நிலாப் பெண் (Lady in the moonlight ) மனக்காட்சியில் இனிய சித்திரமாய் தோன்ற நானும் பாரதியும் அக்கண்மகிழ் சித்திரத்தில் கரைந்து கொண்டிருக்கிறோம்…
 
 
சந்திர னொளிளை ஈசன் சமைத்து அது பருக வென்றே
வந்திடு சாத கப்புள் வகுத்தனன்; அமுதுண்டாக்கிப்
பந்தியிற் பருக வென்றே படைத்தனன் அமரர் தம்மை
இந்திரன் மாண்புக் கென்ன இயற்றினன் வெளிய யானை.

மலரினில் நீலவானில் மாதரார் முகத்தில் எல்லாம்
இலகிய அழகை ஈசன் இயற்றினான் சீர்த்தி இந்த
உலகினில் எங்கும் வீசி ஓங்கிய இரவி வர்மன்
அலகிலா அறிவுக்கண்ணால் அனைத்தையும் நுகருமாறே.

மன்னர்மா ளிகையில் ஏழை மக்களின் குடிலில் எல்லாம்
உன்னருந் தேசுவீசி உளத்தினை களிக்கச் செய்வான்
நன்னரோ
பொன்னணி யுலகு சென்றான் புவிப்புகழ் போதுமென்பான்.

அரம்பைஊர் வசிபோலுள்ள அமரமெல் லியலார் செவ்வி
திறம்பட வகுத்த எம்மான் செய்தொழில் ஒப்பு நோக்க
விரும்பியே கொல்லாம் இன்று விண்ணுல கடைத்து விட்டாய்!
அரம்பையர்,நின்கைச் செய்கைக்கு அழிதலங் கறிவை திண்ணம்.

காலவான் போக்கில் என்றுங் கழிகிலாப் பெருமைகொண்டு
கோலவான் தொழில்கள் செய்துகுலவிய பெரியோர் தாமும்

அழகியற் கண்களின் சிறு தொகுப்பு. 
 
இந்திய ஓவியக்கலை வரலாற்றில் இரவிவர்மாவினுடைய ஓவியங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அரசவைகளில் மட்டுமல்லாது குடிமக்களின் வீடுகளுக்கும் தனது ஓவியங்களை சென்றடைய வைத்தவர் ஓவியர் இரவிவர்மா. எண்ணை வர்ண ஓவியங்களை ஐரோபியர்களிடம் கற்றுகொண்டாலும், இந்திய அழகியலையும், இந்தியக் கதைகளையும் ஓவியங்களாக்கியவர். அவைகள் ஐரோப்பியக் காலணியச் சிந்தனைக்கு எதிர்வினையாற்றும் வகையில் அமைந்தன.
இரவிவர்மாவின் ஓவியங்களைக் கட்டமைப்பு ரீதியாக மட்டுமே பல வகைகளில் ஆய்ந்தறிய முடியும். அவ் ஓவியப் பெண்களைப் பற்றியும் அவர்களுடைய கண்களைப்பற்றியும் யாருடனாவது பகிர பல சந்தர்ப்பங்களில் எண்ணியிருக்கிறேன்.
 
அரசவைப்பெண்கள், இதிகாசப்பெண்கள், சாதாரணப் பெண்கள் ஓவியங்களில் பலபாகுபாடுகள் இருந்தாலும், இரவிவர்மாவின் ஓவியங்களிற் காணப்படும் பெண்கள் இருவகைதான். அவைகளை அவர்களுடைய கண்களால் மட்டுமே பாகுபாடுத்த முடியும்.
 
ஒன்று நேராக, விறைத்த, எந்தச் சலனமுமற்ற கண்களைக் கொண்ட பெண்கள். இவர்கள் அரசவைப் பெண்களாகவும், இறைவியராகவும் இருக்கின்றனர். சிலர் கேட்டுக்கொண்டமைக்காக வரையப்பட்ட ஓவியங்களாக அவை இருக்கக்கூடும்.
 
மற்றையது இரவிவர்மாவினுடைய கலைக்கண்களினூடாகப் பார்க்கப்பட்ட பெண்கள். இப்பெண்களுடைய கண்கள் கனவுலகத்தில் சஞ்சரிப்பவை. அக்கண்களின் வெளிப்பாட்டில் சிறுஏக்கம் இருக்கக்கூடும். அல்லால் ஒரு எதிர்பார்ப்பு, மென் கனவு, சிறுகாமம், தன்னை இழந்து மற்றோர் உலகத்தில் லயித்திருக்கும் ஒரு கணம் என அக்கண்கள் மிக வசீகரமானவை.
இவ்வழகியலைக் கொண்ட பெண்களை நகல் செய்யும் கலைஞர்கள், ஆடையணிகளுக்கும், பிற்புலக்காட்சிகளுக்கும் முக்கியத்துவம் தந்திருக்கின்றனர். அம் முக்கியத்துவத்தை கண்களின் ஆத்மாவிற்கு கொடுக்கத் தவறிவிடுகிறார்கள். பிறர் கேட்டமைக்காக அவ் ஓவியங்களை மறுமுறை வரைந்த சந்தர்ப்பங்களில் ஓவியர் இரவிவர்மா கூட அக்கண்களின் உயிரை தனது நகல் ஓவியங்களில் எடுத்துச்செல்லவில்லை என்பதே உண்மை. அசல் மற்றும் நகல் ஓவியங்களையும் அவைகளின் கண்களையும் அடுத்த ஒரு சந்தர்ப்பத்தில் பகிர்ந்து கொள்வோம். 
இரவிவர்மாவின் அழகியல் எப்போதும் கண்களினூடாக விரிகிறது

674 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *