ஐபோனில் உருவாக்கப்பட்டு வெளியாகும் முதலாவது இலங்கைத் திரைப்படம்.

- நிரோஜினி ரொபர்ட்
28 சர்வதேச விருதுகளை பெற்றிருக்கின்றது.
நான் யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலங்களிலேயே யாழ்ப்பாணத்தில் பிறந்தேன். அக்கம்பக்கத்தினரோடு என்னை ஒரு அட்டைப்பெட்டியில் போட்டுக்கொண்டு பதுங்கு குழிகளில் (பங்கர்களில்) பதுங்கி இருந்த கதைகளையும் ஷெல் துண்டுகள் பட்டு பக்கத்தில் இருப்பவர்களின் கை,கால்களில் ரத்தம் ஆறாக ஓடும் கதைகளையும், கையை பிடித்துக்கொண்டு பின்தொடரும் மரணம் பற்றியும் எனது அம்மா என்னிடம் அடிக்கடி கூறி இருக்கிறார்.
அது எப்படி இருக்கும் என்பதோ யாழ்ப்பாணத்தில் வாழ்பவர்கள் எத்தனை துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்தார்கள் என்பதோ என்னால் உணர்ந்து பார்க்க முடியாத ஒரு உணர்வாகவே இருந்து வந்தது.
ஏனெனில் பிள்ளைகளை பாதுகாக்கும் பொருட்டு என் பெற்றோர் இடம்பெயர்ந்து விட்டனர். அதனால் நான் நேரடியாக பாதிக்கப்படவில்லை என்றாலும், எனது அம்மா, அம்மாவின் சகோதரர், பெற்றோர் என எல்லோரும் அந்த வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள், என் அம்மாவின் மூத்த தம்பி, என் மாமா யுத்தத்தின் போது காணாமல் போன பல லட்சங்களில் ஒரு ஜீவன். சாப்பிட உணவில்லாமல், போக்குவரத்து வசதி இல்லாமல், அம்மா என்னை வயிற்றில் சுமந்து கொண்டு பல மைல் தூரம் நடந்து வந்த கதை எல்லாம் கேட்டிருக்கிறேன்.
எனது இருபதுகளின் தொடக்கத்தில் நானும் ஒருமுறை சந்தேகத்தின் பேரில் கொழும்பில் பிடிபட்டு ஒரு இரவு முழுதும் பொலிஸ் நிலையத்தில் இருந்திருக்கிறேன், எனது அடையாள அட்டையில் பிறந்த இடம் “யாழ்ப்பாணம் ” என்றிருந்ததால்.
யுத்தத்தை பற்றிய செய்திகளும், புத்தகங்களும், கவிதைகளும், படங்களும் எனக்குள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன, ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் யுத்தம் தொடர்பான எந்த படைப்பையும் பார்ப்பதோ வாசிப்பதோ பெரும் சவாலாக இருந்தது. அதை கற்பனை செய்து பார்ப்பதே கொடூரமானதாக இருந்தது.
ஒருநாள் மாலையில் மதிசுதாவிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் மொழிபெயர்ப்பில் ஒரு சில மாற்றங்களை செய்யவேண்டுமென்று, நானும் மகிழ்ச்சியுடன் வேலையைத் தொடங்கினேன். இதுவரை 28க்கும் அதிகமான விருதுகளை பெற்றிருக்கும் இந்தப் படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்ற ஆர்வம் வேறு,மிக ஆறுதலாக ஒவ்வொரு காட்சியாக மனதை ஒரு நிலைப்படுத்தி பார்த்தேன்.
கொஞ்சம் கொஞ்சமாக அது ஒரு சினிமா என்பதை மறந்து எம்மக்களின் வாழ்க்கை என்பதை உணரத்தொடங்கினேன்.
பாத்திரங்களின் தெரிவு அத்தனை கச்சிதமாய் பொருந்தி இருக்கிறது, அதைப்பற்றி படத்தின் இயக்குனரிடம் கேட்டபோது படத்தில் நடித்தவர்களில் பெரும்பாலானோர் தாம் வாழ்ந்த வாழ்க்கையையே இன்னொருமுறை கேமரா முன்னிலையில் வாழ வேண்டியிருந்தது என்றார்.
திரை மொழி மிக தீர்க்கமானதாகவும், புரிந்துகொள்ளும் வகையிலும் இருந்தது. படத்தின் கலைஞர்கள் மிக மிக தேர்ச்சி பெற்றவர்களாக, புதியவற்றை கற்றுக்கொள்ளும் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பது படத்தின் மூலம் புரிந்தது. இன்னும் இலங்கையில் உத்தியோகபூர்வமாக வெளியாகாத திரைப்படம் ஆகையால் சில காட்சிகளின் நேர்த்தியையும் ரசனையையும் இங்கே குறிப்பிட முடியாமல் உள்ளது. அன்பும் மனிதநேயமும் சமத்துவமும் கற்பிக்கும் பல காட்சிகளை இந்த படத்தில் அவதானித்தேன்.
இந்த திரைப்படத்தில் நியாயம், தர்மம், என்பதெல்லாம் அவரவர்க்கான அவ்வப்போதைய சூழ்நிலையைப் பொறுத்தது என்பதும் அழகாக எடுத்துக்காட்டப்படுகிறது. மரணத்தை எப்போதும் எதிர்கொள்ளத் தயாரான இந்த மக்கள் காதல் கொள்கிறார்கள், உறவுகளை நேசிக்கிறார்கள், மற்றவரை பற்றி சிந்திக்கிறார்கள், எல்லோரையும் ஒன்று போல சேர்த்துக்கொள்கிறார்கள்.
ஒரு நல்ல கலைப் படைப்பானது அதை பார்ப்பவர்களுக்குள் ஒரு அதிர்வினை ஏற்படுத்த வேண்டும். அந்த அதிர்வு கட்டாயமாக வன்முறையைத் தூண்டுவதாக இருக்கக்கூடாது என்பது என் எண்ணம். சில சமயங்களில் ஒருவர் மீது ஏற்படும் மரியாதையாகவோ, கருணையாகவோ ஏன் குற்றவுணர்ச்சியாகக் கூட இருக்கலாம். சகமனிதர் இத்தனை துயருற்றிருக்கிறார்களே என கண்ணீர் சிந்தவும் வைக்கலாம்.
28 சர்வதேச விருதுகளை பெற்றிருக்கின்றது.
பாதிக்கப்பட்ட ஒருவனால் அல்லது ஒரு சிலரால் வன்மத்தைக் கடத்தாது தமது வலிகளை ஒரு திரைப்படமாக்க முடியுமானால் அது ஒரு உன்னதமான படைப்பாகிறது.எனக்கு மதிசுதாவின் “வெந்து தணிந்தது காடு” ஒரு உன்னதமான படைப்பு. நமது வெந்து தணிந்தது காடு திரைப்படமானது இதுவரை 15 நாடுகளில் 28 சர்வதேச விருதுகளை பெற்றிருக்கின்றது. ஈழத்தின் பழம்பெரும் பாடகியான பார்வதி சிவபாதம் பிரதான பாத்திரம் ஏற்று நடித்திருந்ததுடன் 2 நாடுகளில் சிறந்த நடிகைக்கான சர்வதேச விருதையும் பெற்றிருக்கின்றார். இலங்கையில் இத்திரைப்படமானது 3 வரலாற்று சாதனைகளைப் புரிந்திருக்கிறது. ஐபோனில் உருவாக்கப்பட்டு வெளியாகும் முதலாவது இலங்கைத் திரைப்படம். அதிகளவான மக்கள் இணைந்து முதலிட்டுத் தயாரித்த திரைப்படம். அதிகளவான விருதைப் பெற்ற கைப்பேசித் திரைப்படம்.திரைப்படத்தை நிச்சயமாக திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள். நிச்சயமாக உங்கள் பணத்தை விட பலமடங்கு அனுபவமும் திருப்தியும் பெற்று வருவீர்கள்.
நேபாளத்தின் காத்மண்டுவில் இடம்பெறும் Nepal Cultural International Film Festival – NCIFF இல் நம் நாட்டு கலைஞர் மதிசுதா இயக்கத்தில் வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படமானது Rising Mall Theatre இல் திரையிடப்பட்டது.நன்றி.தினகரன் வாரமஞ்சரி
.