தேடுதல் வெளிச்சமும் கம்பராமாயணமும்! Flare Gun

இரா.சம்பந்தன்.கனடா
இன்றைய அறிவியல் உலகம் காலத்துக்கக் காலம் ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்துப் பயன்படுத்தும் எத்தனையோ நவீன தொழில் நுட்ப சாதனங்களை எல்லாம் ஏற்கனவே தாம் பயன்பாட்டில் வைத்திருந்ததாகக் தெரியப்படுத்தும் ஒரு இதிகாசம் கம்பராமாயணம் ஆகும். இன்றைய அணு ஏவுகணைகளை பாசுபதாஸ்திரம் என்றும் எதிரிகள் மீது நச்சு வாயுத் தாக்குதல்களை நிகழ்த்தி மயக்மடையச் செய்வதைப் பிரம்மாஸ்திரப் பிரயோகம் என்றும் இன்றைய சுப்பர் சொனிக் விமானங்களை புஸ்பக விமானம் என்றும் கம்பராமாயணம் அறிவிக்கின்றது!
இவற்றைப் போலத்தான் Flare Gun என்று சொல்லப்படும் ஆயுதப் பயன்பாட்டைப் பற்றியும் இராமாயணம் எடுத்துக் கூறுகின்றது. 1800 களின் பிற்பகுதியில்தோற்றம் பெற்று தேடுதல் வெளிச்சமாகவும் சமிக்கை வெளிச்சமாகவும் இன்றுவரை பயன்படும் இந்தவகை ஆயுதம் அதே தேவைக்காக இராமனால் பயன்படுத்தப்பட்டது என்று கம்பன் சொல்கின்றான்.
கானகத்திலே இலட்சுமணனை தாகத்துக்குத் தண்ணீர் எடுத்துவர அனுப்பி விட்டு இருந்த இராமன் இருட்டிலே இலட்சுமணனால் வெட்டப்பட்டு பெருங்குரல் எடுத்து அழுத அயோமுகியின் சத்தம் கேட்டுத் திகைக்கின்றான்! அந்த அழுகை ஓசை வந்த திசை நோக்கி ஆயுதங்களை எடுத்துக் கொண்டு ஓடுகின்றான்!
பாதை தெரியாத இருட்டு! உடனே இராமன் அக்கினி பாணம் எனப் பெயரிடப்பட்ட ஒரு கணையை எடுத்து கைக்குள் வைத்து திரித்த உடனே இங்கிருந்த இருட்டு மறைந்து வேறு உலகத்துக்கு ஓடிவிட அந்த இரவு வேளையும் பகல் போல வெளிச்சமானதாக ஆகியது! அது கம்பன் சொன்ன செய்தி!
அங்கியின் நெடும்படை வாங்கி ஆங்கு அது
செங்கையில் கரியவன் திரிக்கும் எல்லையில்
பொங்கு இருள் அப்புறத்து உலகம் புக்கது;
கங்குலும் பகல் எனப் பொலிந்து காட்டிற்றே.
இந்தச் செய்தி கம்பராமாயணம் ஆரணிய காண்டத்தில் அயோமுகிப் படலத்தில் வருகின்றது! இங்கே நாம் சிந்திக்க வேண்டியது இக்கால விஞ்ஞானம் ஆயுதத்தில் இருந்து வெளிச்சம் உண்டாக்கித் தேடுதல் நடபடிக்கையில் ஈடுபடும் இராணுவ முயற்சியை கண்டறிந்து ஆரம்பிக்கும் முன்னரே அது நிகழ்த்தி முடிக்கப்பட்ட வரலாறு இராமாணத்தில் உள்ளது என்பது மட்டும் தான்!அது மட்டுமல்ல இன்று போல அன்றும் அது போர்க்கருவியாக இருந்திருக்கின்றது. தேவை கருதி வில்லில் இருந்து செலுத்தக் கூடியதாக அது வடிவமைக்கப் பட்டு இருந்திருக்கின்றது!