அம்மாவின் சட்டை

ரூபன் சிவராஜா நோர்வே
இல்லாதவர்களின் இருப்பை
நினைவூட்டிக் கொண்டிருக்கின்றது
அவர்கள் உபயோகித்த
ஏதோவொரு பொருள்
அலமாரியின் அடித்தட்டில்
அம்மாவின் ஒரு சட்டை
அதில்
ஒட்டியிருக்கிறது
குதூகலத்தின் நிறம்
வடிகிறது
இழப்பின் பாடல்
காட்சிப் படிமத்தில்
வாழ்தலின் பிம்பம்
அசைந்துகொண்டிருக்கிறது
நினைவுகளின் மேகம்
நாசியைத் தொடுகிறது
வஞ்சகமின்மையின் வாசம்
கருணையின் கண்சிமிட்டல்
அரவணைப்பின் வெம்மை
பிரிவின் தூரம்
அருகின் அவாவுதல்
எனவாக..
இன்னும் …
எத்தனையோ
பொருட்களின் இருப்பில்
நிலை கொண்டிருக்கிறது
இறந்தவர் வாழ்வு