காதலிக்க நேரமில்லை !

  • சேவியர்

காதல் என்பது தேடல் !
ஒரு பூவுக்குள் ஒளிந்திருக்கும் வாசனையைத் தேடுகின்ற பயணம் அது. எகிப்தியப் பிரமிடு ஒன்றில் புதைந்து கிடக்கும் புராதன வைரங்களைத் தேடும் பயணம். கடலுக்குள் கை நழுவி விழுந்த பனித்துளியை கைப்பற்றிவிட வேண்டுமென நடத்துகின்ற போராட்டம். தேடல்களின் வெளிச்சத்தில் தான் காதல் பொலிவடைகிறது. மௌனங்களை மொழிபெயர்த்துச் சிலாகிக்கும் கவித்துவப் பொழுதுகள் காதலின் வரம். விழிப்பார்வைகளை வாசித்து புதினம் எழுதும் புதுமை காதல் மட்டுமே தருகின்ற சுகம். இந்தத் தேடல் தான் காதலை வசீகரமாக்குகிறது ! இந்தத் தேடல் தான் காதலை அழகாக்குகிறது ! இந்தத் தேடல் தான் காதலைக் காதலிக்க வைக்கிறது !

காதல் என்பது ஊடல் !
உரசுகையில் தெறிக்கின்ற தீப்பொறிகள் தான் தீப்பெட்டியின் அழகு. அடிக்கையில் எழுகின்ற ஓசை தான் அலைகளின் அழகு. விழுகையில் எழுகின்ற இசை தான் அருவிக்கு அழகு. காதலின் அழகு ஊடலின் உள்ளே தான் ஒளிந்திருக்கிறது. ஆண்மையும் பெண்மையும் தங்கள் கருத்து வேற்றுமைகளை உரசிக் கொள்ளும் போது எழுகின்ற மென்மையான ஊடல். அந்த ஊடலின் கடைசியில் தோன்றுகின்ற கூடலுக்கு வலு சேர்க்கிறது. யார் விட்டுக் கொடுப்பது எனும் போட்டி நடக்கின்ற காதல், சொர்க்கத்தைச் சொந்தமாக்கும். யாருக்காகவும் காதலை விட்டுக் கொடுக்கமாட்டேன் எனும் தீர்மானம் நிலைக்கின்ற போது காதலே சொர்க்கமாய் மாறி விடும் !

காதல் என்பது பொறுமை !
கடற்கரை மணலை ஒவ்வொன்றாய் எண்ணி குறித்து வைக்குமளவுக்குக் காதலுக்குப் பொறுமை உண்டு. கடல் அலைகளை எண்ணி எண்ணி, நிமிடத்திற்கு எத்தனை அலைகள் என அறிந்து கொள்ளும் பொறுமை காதலர்க்கு உண்டு. காதல் பொறுமையின் பிள்ளை. காத்திருக்கும் கணங்கள் அறியும், காதலின் சுகத்தையும், காதலின் அவஸ்தையையும். எதற்காகவும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் எனும் பக்குவத்தைக் காதல் தானே கற்றுத் தருகிறது. சூரியனைச் சுற்றிச் சுழலும் கோள்கள் போல, பொறுமையைச் சுற்றித் தான் காதல் தனது ஓடுதளத்தை வனைகிறது. பொறுமையின் பிள்ளைகள் தான் காதலின் பொக்கிஷங்களைத் திறந்து கொள்கிறார்கள்.

காதல் என்பது நேர்மை !
ஓரக்கண்ணால் ஒரு பெண்ணுடன் ஒப்பந்தம் இட்டுக்கொண்டபின் பேரழியே எதிரே வந்தாலும் நோக்காப் பேராண்மையே காதலின் சிறப்பம்சம். ஒரு அரைப் புன்னகையால் காதலை அறிவித்து விட்டபின் ஒரு பேரசரன் வந்தால் கூட களம் மாறாத உண்மைத் தன்மையே காதலின் சிறப்பம்சம். காதல் என்பது அழகினால் வருவதல்ல, காதல் வருவதால் எல்லாம் அழகாகிவிடுகிறது. ஒருத்தி அழகியாய் இருக்கிறாள் என்பதற்காக அவள் மீது காதல் வருவதில்லை, ஒருத்தி மீது காதல் வரும்போது அவள் பேரழகியாகி விடுகிறாள். காதல் நேர்மையாய் இருக்கும்போது, காதலர்கள் அழகை அணிந்து கொள்கிறார்கள். சற்றே திறந்த சன்னல் வழியாக தெருவைப் பார்த்து நகத்தைக் கடித்த அன்றைய காதல், நேர்மையில் நங்கூடமிட்டிருந்தது. அதுவே காதலின் பேராற்றலாய் இருந்தது !

காதல் என்பது நிலைத்திருத்தல் !

காதல் என்பதை சிலர் பூ என்பார்கள், சிலர் செடி என்பார்கள். நான் நிலம் என்பேன் ! காதல் என்பது நிலத்தைப் போல நிலையானதாய் இருக்கவேண்டும். காதல் என்பது அலையைப் போன்றதல்ல, கடலைப் போன்றது. காதல் என்பது சுவாசம் போன்றதல்ல, அந்த சுவாசத்தையே சுற்ற வைக்கும் நுரையீரல் போன்றது. காதல் என்பது நிலவைப் போன்றதல்ல, அந்த நிலவையே ஏந்திக் கொள்ளும் வானம் போன்றது. காதல் என்பது தற்காலிகத்தின் பிள்ளையல்ல, அது நிரந்தரத்தின் அன்னை ! காதலை தற்காலிகங்களோடு ஒப்பீடு செய்வதை விட, நிரந்தரங்களோடு இணைத்துப் பார்க்க வேண்டும். காதலைத் தேடியபின், ஊடலில் கூடியபின், பொறுமையைப் பயின்றபின், நேர்மையாய் தொடங்கியபின், அன்பில் நிலைத்திருப்பதே உன்னத நிலை. அதுவே உயர் நிலை. காற்றில் அடிக்கின்ற பதரைப் போல கலைந்து விடாமல், காற்றையே அடிக்கின்ற மலையைப் போல நிமிர்ந்து நிற்கவேண்டும். தடைகளைக் கண்டு உடைந்து சிதறும் கண்ணாடியைப் போல அல்லாமல், வாள்வீச்சைக் கொண்டாலும் காயம் காட்டாத நதியைப் போல நகர்ந்து திரிய வேண்டும். காதல் நிலைத்திருத்தல், காதலிலும் காதலர்களிலும்.

ஒரு காலத்தில், இவையெல்லாம் காதலில் இலக்கணங்களாக இருந்தன. இலக்கணப் பிழைகள் இல்லாமல் காதலர்கள் தங்கள் காதல் பயணத்தை நடத்திக் கொண்டே இருந்தார்கள். சங்க காலம் முதல், சமீப காலம் வரை காதல் என்பது உயர்திணையாய் இருந்தது ! காதலின் பரிமாற்றங்கள் எல்லாம் கவிதைகளாய் இருந்தன ! காதலின் நிறமாற்றங்கள் எல்லாம் கண்ணீராய் சொரிந்தன.

இன்று காலம் மாறிவிட்டது!வாட்சப்பின் வாசலில் வந்து ஹார்ட் சிம்பலை அனுப்பி வைத்தால் அது காதலாகி விடுகிறது. அதையே கட் அண்ட் பேஸ்ட் செய்து பதினான்கு பேருக்கு அனுப்புகிறது இளைய தலைமுறை. அதில் எத்தனை திரும்ப வருகிறதோ அத்தனையும் காதலின் பட்டியலில் சேர்ந்து விடுகிறது. அம்பு விட்டு அரை நிமிடத்தில் பதில் அம்பு வரவில்லையேல், காதல் கலைந்து விட்டதோ என கவலைப்படுகிறது இன்றைய தலைமுறை. அவர்களுக்கு உணவு ஃபார்ஸ் புட் ஆக இருக்க வேண்டும், காதல் ஃபாஸ்ட் குட் ஆக இருக்க வேண்டும். எல்லாமே வேகத்தில் நடக்க வேண்டும்.

கண்ணால் பேசுகின்ற காதலின் வித்தைகளை டிஜிடல் களவாடிவிட்டது. இப்போது யாரும் முகத்தைப் பார்த்துப் பேசுவதில்லை, அவர்களுக்கு ஸ்மைலை விட ஸ்மைலி போதுமானதாய் இருக்கிறது. பலருடைய முகத்தை இந்த ஸ்மைலிகள் தான் மறைத்து நிற்கின்றன. ஒருவகையில் இது டிஜிடல் முகமூடி ! ஒரே நேரத்தில் இரண்டு பேருடன் காதலில் இருப்பதும், கடைசி வரை அதை தொடர்ந்து செல்வதும், இறுதியில் மூன்றாவது ஒரு நபரைக் கைபிடிப்பதும் மிக மிக சாதாரணமாகிவிட்டன.

காரணம் காதல் இப்போது நம்பிக்கையில் மலர்வதில்லை, அவை லிவ்விங் டுகதர் மூலமாகத் தான் மலரவைக்கப்படுகிறது. காதல் இப்போது பொறுமையில் பூப்பதில்லை, தொடர்ந்த அறிக்கைகள் மூலமாகத் தான் உயிர்ப்புடன் வைக்கப்படுகிறது. காதல் இப்போது நேர்மையில் முளைப்பதில்லை, அவை இப்போது போட்டோ ஃபில்டர்களின் புண்ணியத்தால் தான் முளைக்கிறது. காதல் நிலைக்க வேண்டுமென யாரும் நினைப்பதில்லை, அவர்களுக்கு ஒற்றைக் காதலில் வாழ்வதை விட தற்காலிக தங்குமிடங்களை நாடுவதே பிரியமானதாய் இருக்கிறது.

காதல்,காலங்கள் கடந்தும் வாழ்கின்ற ஒரு உணர்வு. அதன் புனிதமும், தூய்மையும் தொழில்நுட்ப மனநிலைகளினால் கறைபடிந்து கிடக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. எங்கேனும் முளைக்கின்ற அபூர்வ உண்மைக் காதல்கள் அழிந்து வரும் உயிரினங்களைப் போல அருகி வருகின்றன. காதலர் தினம் நமக்கு ஒரு எச்சரிக்கை மணி ! சில்மிஷங்களின் சிலிர்ப்பில் சிக்கிக் கிடப்பதல்ல காதல் என்பதை உணரவைக்கும் ஒரு தருணம். தீண்டலின் தீப்பந்தத்தில் தற்காலிகமாய் தாகம் தணிப்பதல்ல காதல் என்பதை புரிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு. காதலை மீண்டெடுப்போம். போலிகளைப் புறக்கணிப்போம். காதலின் இயல்புகளை மீண்டெடுப்போம்.

காதல் நிச்சயம் தேவை !காதலியுங்கள் !உண்மையாய், நேர்மையாய், நிலையாய் !
காதலுக்கு வேறெங்கும் கிளைகள் வேண்டாம் !
அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துகள்

865 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *