பெண் தொழில் முனைவோர் அதிகம் உருவாவதில்லையா?
பிரியா.இராமநாதன். இலங்கை
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆண்களின் பங்கை போலவே பெண்களின் பங்கும் முக்கியமானதாக இருக்கின்ற நிலையில் நம் பெண் தொழில் முனைவோரது நிலை இன்றுவரையில் எத்தகைய நிலையில் உள்ளது? பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்பு என்பது இன்றைக்கு மிகவும் பரந்து விரிந்துள்ளது என்பதே நிஜம்.பதினைந்து வருடங்களுக்கு முன்புவரைக்கூட பெண்களுக்கான சுய தொழில் என்றால் அனேகரது பொதுப்புத்தியிலும் வந்து நிற்பதென்னவோ மிளகாய்க் கன்றுகளை நடுவது உற்பட சிலவகையான சேனைப்பயிர்ச் செய்கை, ஆடு, மாடு, கோழி வளர்த்தல், பீடி சுற்றுதல், ஊறுகாய், பப்படம், சமையலுக்கான மசாலா பொடி போன்றவற்றை தயாரித்தல், தையல் வேலை செய்தல் உள்ளிட்டவையே. இதைத்தான் சுய தொழிலாக பெருமையாக கருதுவார்கள்.இன்றைய நிலைமையோ முற்றிலும் வேறு. பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள், பெரும் அளவில் விரிவடைந்துள்ளன என்றால் மிகையாகாது. ஆனால் பெண் தொழில் முனைவோருக்கான இந்த பயணமானது அத்தனை சுலபமானதல்ல என்பதே யதார்த்தம்.
வரலாறு நெடுகிலும் பெண்கள் தொழில் தொடங்குவதற்கான சட்டங்கள் மிகக் கடுமையாகவே இருந்துள்ளன. குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில்கூடப் பெண்கள் தொழில் தொடங்க அவர்களது கணவர்களின் கையொப்பம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இரண்டாம் உலகப்போரில் பெரும்பாலான ஆண்கள் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டமையினால் விவாகரத்துகளும் பொருளாதார நெருக்கடியும் பெண்களுக்குச் சவாலாக இருந்தது. இது போன்ற நிலையில் பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழலில், சில பெண்கள் சுயமாகத் தொழில் தொடங்க ஆரம்பித்தனர். முதலில் சிறுசிறு தொழிலாகச் செய்த பல பெண்கள் இன்று தமக்கான தொழில்துறை சாம்ராஜ்ஜியங்களையே உருவாக்கிவிட்டனர் என்று கூறிக்கொண்டாலும்,உண்மையில் இன்று உலக அளவில் எத்தனை பெண் தொழிலதிபர்கள் இருக்கின்றார்கள் என்கிற கேள்விக்கு விரல் விட்டு எண்ணிவிடலாம் பதிலை!
ஆம்,ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண் தொழிலதிபர்களும் தொழில் முனைவோர்களும் மிகமிக குறைவான அளவிலேயே தற்போதும் இருக்கின்றோம். இதற்கான காரணங்கள் என்ன, எது எமக்குத் தடையாக உள்ளது, என்ன மாதிரியான சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று பார்த்தால், முதலில் வருவது பெண்களின் குடும்பப் பொறுப்புகள் தாம். காலையில் எழுந்தது முதல் இரவு நித்திரைக்குச் செல்லும்வரையில் வீட்டு வேலை குழந்தைகளை பராமரித்தல் எனும் வட்டத்தினுள் சிக்கிக்கொள்ளும் அநேக பெண்களால் தாம் நினைத்தாலும்கூட அந்த வட்டத்தினை விட்டு அவ்வளவு எளிதாக வெளியேற முடிவதில்லை.குடும்பத்தைவிட்டு தொழிலா முக்கியம் எனும் மனோபாவம் நம்மை அறியாமலேயே நமக்குள் திணித்துவிடப்பட்டிருப்பதனால்,அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் துணிந்து செயற்பட முடிவதில்லை போலும். அதிலும் நம் சமூகமும் இந்த எண்ணத்தில் எண்ணெய் ஊற்றி தீயை வளர்க்கும் பொறுப்பினைக் கொண்டதல்லவா?
மேலும்,படிப்பிற்கும் திருமணத்திற்கும் இடையில் இருக்கும் கால அவகாசம் ஆண்களைப் போல பெண்களுக்குக் கிடைப்பதில்லை. படிப்பை முடித்த கையோடு பெரும்பாலான பெண்கள் ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணிபுரிய ஆரம்பிப்பதற்கு காரணமே கல்யாணத்திற்கு காசு சேர்க்க வேண்டும் எனும் குடும்பத்தாரின் உந்துதலே. மாறாக கையில் கொஞ்சம் காசு சேர்த்து சொந்தமாக ஒரு தொழிலையோ அல்லது ஒரு நிறுவனத்தை நிறுவ வேண்டும் என்றோ எண்ணுவதில்லை. வேலைக்குச் சேர்ந்த ஓரிரு ஆண்டுகளில் திருமணம், அதன் பிறகு குழந்தை என்று அடுத்தடுத்து பொறுப்புகளில் சோர்வாகி, தான் எதை நோக்கிச் சாதிக்க நினைத்தோம் என்பதையே பல பெண்கள் மறந்து விடுகின்றனர் என்பதுதான் யதார்த்தம்.
அதிலும் பெண்களுக்கிருக்கும் இன்னொரு மனத்தடங்கள்தான் பெரிய அளவிளான முதலீடுகளில் ஈடுபடுவதை விரும்பாமை. பெரிய முதலீடுட்டு வணிகத்தில் பொருளாதாரத்தில் ஏற்படும் நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ள அநேகமான பெண்கள் விரும்புவதில்லை. இதனாலயே குறைந்த முதலீட்டில் நடக்கும் தொழில்களோடு பல பெண்கள் திருப்தி அடைந்துவிடுகின்றனர். மேலும் பெரும்பாலான பெண்களுக்கு தம்முடைய பெயரில் சொத்துகள் வாங்கப்படு வதில்லை. இதனால் தொழில் தொடங்க வங்கியில் கடன் பெறுவதற்கான உத்தரவாதம் என்பதும் கிடைக்காமல் போவதும் பெரிய முதலீட்டு வணிகங்களில் ஈடுபடாமைக்கு காரணம்.
ஒவ்வொரு பெண்ணின் கையிலும் பொருளாதார சுதந்திரம் இருந்தாலே பெண் விடுதலை என்பது உறுதியானதாகிவிடும். ஆக எல்லாப் பெண்களுக்கும் அவசியம் தேவைப்படுகிற ஒன்று பொருளாதார சுதந்திரம். துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான பெண்கள், தமது எல்லாத் தேவைகளுக்காகவும் ஆண்களைச் சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது. “படிச்சிருந்தாலாவது வேலைக்குப் போகலாம்’ எனப் படிக்காத பெண்களும்,”படிச்சிருந்து என்ன செய்ய… வீட்டை விட்டு வேலைக்குப் போக அனுமதியில்லை’ எனப் படித்த பெண்களும்,”படிப்பும் இருக்கு. ஏதாவது தொழில் செய்யவேண்டும் என்கிற எண்ணமும் உண்டு. வழிதான் தெரியவில்லை’ எனப் புலம்புகிற பெண்களும் நம்மிடையே பரவலாக உண்டு. ஒரு வண்ணத்துப்பூச்சி ஆக வேண்டும் என்ற அடக்க முடியாத ஆவலில் ஒரு கம்பளிப் புழு தன் இறக்கைகளை வளர்த்துக் கொள்வதற்காக தன்னை சுற்றி ஒரு கூட்டை நெய்து கொள்கின்றது என படித்திருக்கிறோம் இல்லையா? அதைப்போலத்தான் பெண்களாகிய நாமும் பொருளாதாரம் ஈட்ட வேண்டுமென்றால் தன்னம்பிக்கை, தொழிற் பயிற்சிகள், விடா முயற்சி, கடின உழைப்பு போன்றவற்றால் மனசுக்குள் வைராக்கியத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்பது தவிர்க்கமுடியாதவொன்று. நம்மில் பெரும்பாலோர் நம்மை பற்றி சுய மதிப்பீடு செய்வதில்லை,அப்படியே செய்தாலும் ஒன்று நம்மைப் பற்றி மிக தாழ்வான அபிப்பிராயத்தை உருவாக்கிக்கொள்கிறோம். அல்லது மிதமிஞ்சிய அளவுக்கு நம் திறமையின் மீது நம்பிக்கை வைத்து எனக்கு ஈடு எவரும் இல்லை என்று கூறிக்கொள்கிறோம்.இந்த இரண்டு நிலையையும் இல்லாமல் நடுநிலையோடு நம்மை நாமே சுய விமர்சனம் செய்து,நமக்குள் புதைந்து கிடக்கும் திறமைகளைத் தூசித்தட்டி வெளிக்கொணர்ந்து, உண்மையான உழைப்பை முதலீடாக்கினால் வெற்றி நிச்சயம். நம் திறமையை இனம் காண வேண்டியது செல்வத்திலும் வெற்றியிலும் அல்ல,நம்முடைய தளராத உழைப்பிலும், முயற்சியிலும்.
எது எவ்வாறாயினும் முன்பைவிட அதிக அளவில் பெண்கள் விதவிதமான வணிகத்தில் ஈடுபட முன்வந்திருப்ப தென்பது மிகவும் ஆரோக்யமான விடயமே. பெண்களின் சுயசம்பாத்தியம் கொடுக்கும் தன்னம்பிக்கை யும் தைரியமும் இந்த உலகில் எதற்கும் ஈடிணையற்றது என்றே கூறவேண்டும்.
845 total views, 3 views today