உருவக் கேலி! எனும் வேலியை உடையுங்கள்!!!
-பிரியா.இராமநாதன் இலங்கை
கருவாச்சி,கறுப்பி,கட்டை,நெட்டைக் கொக்கு …
இதெல்லாம் பதின்மங்களில் என் நெருங்கிய சில உறவுகளினால் எனக்காக சொல்லப்பட்டு நான் கடந்துவந்த உருவ கேலிக்குரிய வார்த்தைப்பிரயோகங்கள்.பதினேழு பதினெட்டு வயதுகளில் இந்த வார்த்தைகளை கேற்கும்போது மனதுக்குள் ஒருவித அவமானமாக உணர்ந்தபோதிலும் நெருங்கிய உறவுகளை எதிர்த்து பேசமுடியாத மனத்தடங்கல்களினால் மிக இலகுவாக அவற்றை கடக்கப் பழகிவிட்டிருந்தேன். ஆனால், அதே உறவுக்காரர்கள் இருபத்தெட்டு வயதில் என்னை நோக்கி மிக இயல்பாக இதே வார்த்தைகளை பிரயோகித்தபோது, நான் மௌனித்திருக்கவில்லை. அவர்களது முகத்தில் அறைந்தாற்போல் சுரீரென்று பதில் சொல்லியதால் பின்னர் இன்றுவரையில் என்னைக் காணும் உறவுகள் யாரும் மரியாதை குறைவாக இப்படியான வார்த்தைகளை பயன்படுத்துவதனை முற்றிலும் தவிர்த்துக்கொண்டனர். ஆக உருவ கேலி என்பது நமக்குள் சகித்துக்கொண்டு கடந்துபோகக்கூடியவொன்று அல்ல.அது எதிர்த்துப்பேசி தவிர்த்துக்கொள்ளப்படவேண்டிய ஓன்று என்கிற விழிப்புணர்விற்காகவே இந்த கட்டுரை…
ஒருவரின் உருவத்தைக் குறிப்பிட்டு கேலி செய்யும் பழக்கம் நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. ஒன்றைக் கவனித்துப் பார்த்தால் தெரியும். நம் எதிரிகளால், பிடிக்காதவர்களால் செய்யப்படுவதைவிட, நெருங்கிய நண்பர்கள் மற்றும் நெருக்கமான உறவுகளுக்குள்தான் இந்த உருவக் கேலி அதிகம் உலா வரும். அதுமட்டுமன்றி கோபமான நேரத்தைவிட, உற்சாகமான நேரத்துக்குள்தான் இது அதிகம் பரவும். உரிமை, நட்பு, ஜாலி என்கிற பெயரில் நம்மை அறியாமலேயே ஹஎல்லை மீறி’ இவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்திவிடுவோம் .மனித மனம் மிக மிக நுட்பமானது. மிக மிகப் புதிரானது. எந்தச் சூழ்நிலையில்,எந்த நொடியில் ஒரு வார்த்தையை, இயல்பாக எடுத்துக்கொள்ளும், மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் என்று கணிக்கவே முடியாது. அது புரியாமலே, மிகவும் நேசிப்பவர்களை நம்மை அறியாமலே புண்படுத்திக்கொண்டிருப்போம். ஒருநாள் அது வெடிக்கும்போது, உறவு அல்லது நட்புக்குள் மிகப்பெரிய இடைவெளி விழுந்துவிடும்.
குழந்தைகளிடம்கூட இவ்வாறான உருவ கேலிகள்மூலம் அவர்களது மனதை நோகடிக்கும் பலரையும் நாம் பார்த்திருப்போம். இவ்வாறான குழந்தைகளின்மீதான் உருவ கேலிகளானது அவர்களது தன்னம்பிக்கையைக் குலைத்து, அவர்களின் வாழ்வியலையே மாற்றிவிடக்கூடியவை என்பதை யாரும் உணர்வதில்லை.கிண்டல் அடிப்பதன் வழியே தனக்குத் தடையாக இருக்கும் விஷயத்திலிருந்து வெளியே வரமுயலும் குழந்தைகளை, மீண்டும் அதற்குள் தள்ளிவிடும் செயலே இது . மாணவர்களுக்கிடையேகூட பட்டப்பெயர் வைத்து அழைப்பதும் உருவக் கேலிகளை அதிகம் பயன்படுத்துவதும் இந்தப் பருவத்தில் அதிக உற்சாகம் தரும். அதைச் சாதாரணமாக கடந்துசெல்லும் மனப்பக்குவமும் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் இருக்காது அல்லவா ? சில சமயம், பெரிய சண்டையில்கூட இவை முடிவுறலாம்.
எவ்வளவு நெருங்கிய நட்பாக இருந்தாலும், மிக உரிமைக்குரிய உறவாக இருந்தாலும், ஒரு கேலி வார்த்தையைச் சொல்லும் முன்பு சில நொடிகள் யோசிப்பது நல்லது. அந்த இடத்தின் சூழலையும் சுற்றியிருப்பவர்களையும் அவதானிப்பதுடன் செல்லமான கேலியாக இருந்தாலும், அதை ஒரு வரம்புக்கு மேலே பயன்படுத்துவது என்பது நிச்சயம் தவிர்க்கப்படவேண்டிய ஓன்று. நட்புக்குள் மட்டுமல்ல சகோதரங்களுக்குள்ளும் உருவ கேலி, குணநலன் கேலி செய்யக்கூடாது என குழந்தைகளுக்கு சொல்லி வளர்ப்பது நல்லது. வீட்டுக்குள் அப்படி ஒருவரை இன்னொருவர் சொல்லும்போது, விளையாட்டுதானே என்று விடாமல், ஆரம்பத்திலேயே சொல்லி கட்டுப்படுத்துவ தென்பது ஓர் ஆரோக்கியமான உறவுக்கு மட்டுமல்ல சிறந்த சமூகத்தினை உருவாக்கவும் உதவும்.
எல்லா காலகட்டங்களிலும் உருவ கேலி என்பது மிகவும் சாதாரணமாக இடம்பெறுவதும், அவை மிக இலகுவாக கடந்துவரப்படுவதும் ஒருவித நெருடலையே ஏற்படுத்துகின்றதெனலாம். திரைப்படங்கள், பாடல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பவற்றிலும் எவ்வித குற்றவுணர்வுகளுமின்றி இவ்வாறான உருவ கேலிகள் காலங்காலமாக இடம்பெற்றுவருகின்றதெனலாம். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கவுண்டமணி முதல் தற்போதுள்ள நடிகர்கள்வரை பெரும்பாலானவர்கள் உருவ கேலியைச் செய்துள்ளனர். ஆனால், 80களின் காலகட்டத்தையும், தற்போதுள்ள காலகட்டத்தையும் ஒப்பிட முடியாது அல்லவா? நாம் நிறைய விடயங்களில் முற்போக்கை நோக்கி நகர்ந்திருக் கிறோம். அவ்வாறு இருக்கும்போது அறமற்ற உருவ கேலிகளை நகைச்சுவை என்ற பெயரில் கலைப் படைப்புகளாக வருவதை எப்படி அனுமதிக்க முடியும். “இதெல்லாம் ஒரு பிரச்சினையா? சிரிச்சிட்டு போய்விடலாம்” என்று தோன்றும். ஆனால், உளவியல் ரீதியாக அணுகினால், உண்மையை, அதாவது உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்ள மறுக்கும், ‘உடலமைப்பு என்றால் இப்படி தான் இருக்க வேண்டும், இது மட்டும் தான் அழகு’ என்ற பிசகான எண்ணம் இருப்பது புரியும்.
பெரும்பாலும், மனிதர்களுக்கு படித்தோ, கேட்டோ வரும் எண்ணப் பதிவுகளை விட, கண்ணால் பார்க்கும் விஷயங்கள் தான் எளிதாக, மனதில் பதியும். தற்போதைய சூழலில் நிறைய விஷயங்களில் சினிமாக்களை முன்னோடியாக வைத்துதான் மக்கள் பல செயல்களை செய்கின்றனர். அந்த வகையில் திரைத்துறை ஒரு நூலகமாக செயல்படுகிறது என்பது தான் உண்மை.உடல் சார்ந்த ஒரு நகைச்சுவை காட்சியை எழுதி அதைத் திரையில் கொண்டு வந்து சிரிக்க வைக்க முயலும் போது, குறிப்பிட்ட பணியில் இருக்கும் துறை சார்ந்தவர்களுக்கு அது ஒரு வணிகப் பொருள்.
ஆனால், தெரிந்தோ தெரியாமலோ, இது போன்ற காட்சிகள் பார்ப்பவர்கள் மீது ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறன்றன.
அதைத் தொடர்ந்து அவர்கள் குறிப்பிட்ட உடலமைப்பு உடையவர்களை கிண்டல் செய்து மற்றவர்களின் மனதை கஷ்ட படுத்துகிறார்கள். இதுவும் ஒரு வகையில் சமூக சீர்கேடு தான் இல்லையா ? ஒரு சில திரைப்படங்களில், குறிப்பாக பழைய திரைப்படங்களில், நகைச்சுவையை வேறு விதமாக கையாண்டிருப்பார்கள். நகைச்சுவை நடிகர்கள் தங்களைத் தாங்களே சுயவிமர்சனம் செய்து மற்றவர்களை சிரிக்க வைப்பார்கள். சார்லி சாப்ளின் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.ஆனால் இப்போது சில வருடங்களாகவே, இந்த நிலை தலைகீழாக மாறி உள்ளது. நகைச்சுவை நடிகர்கள் மற்றவர்களை கேலி செய்து தன்னை நிரூபித்துக் கொள்வது போல் காட்சி அமைக்கிறார்கள். இது நிச்சயம் மாறவேண்டிய சிந்தனை.அன்று நாகேஷ்,இன்று யோகிபாபு இவர்கள் இந்த உருவக்கேலிக்குள் இருந்து வேலிதாண்டியவர்கள்.
ஒருவரின் உடல் அமைப்பை அவமானப்படுத்துதல் அவர்களுடைய சுயமரியாதையை இழக்க செய்கிறது. இரு பாலினத்திற்கும் மனச்சோர்வு, மன அழுத்தம், பிரச்சனைகள் இருந்தாலும், பெண்களின் மீது இதன் தாக்கம் அதிகம். உதாரணமாக உடல் எடை அதிகமாக உள்ள பெண்கள் மற்றவர்களுக்கு கேலிப்பொருளாவது.ஒருவரை மகிழவைக்க, நகைச்சுவையாகப் பேசிக்கொள்ள எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. அப்படியிருக்கையில் ஏன் அடுத்தவரை கேலி செய்வதன் மூலம் ஒருவிதமான குரூர இன்பத்தை அடைய நினைக்கவேண்டும் நாம் ?
1,116 total views, 6 views today