மதங்கமொடு தமிழ் முழங்கவே -25
கலாசூரி.திவ்யா சுஜேன்-இலங்கை
அபிநயக்ஷேத்ரா வழங்கிய மற்றுமொரு மைக்கல் அரங்கேற்றமென பலராலும் பாராட்டப்பட்ட அரங்கேற்றமாக நிர்ஷ்ராயா கஜனின் பரதநாட்டிய அரங்கேற்றம் 25.02.2023 புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்றது.
ஆடலின் மொழியைக் கண்டடைதலும், அம்மொழி உணர்தலும், மொழிகடந்த வெளியை அனுபவிப்பதும் பெருநிலை எனில்,நம் தாய்மொழி வழி பிறக்கும் ஆடலில் பெறும் பெருங்களி, நம் பிறவிப்பயனை உணர்த்தி நிறைவு தருகிறது.
சவால் விரும்பியாக, நுண்ணியலை ஏற்கத் துணிந்த தைரியமும், பேரார்வமும் கொண்ட நிர்ஷ்ரயாவின் மௌன மொழி தவழ் கற்கை யுக்தி, இன்னும் இன்னும் புத்தனுபவங்களைக் கொணர்ந்தது. அக் குழந்தமைக்குள் விளைந்த கூர்மையை உணர்ந்து முத்தமிழ் முழங்க வேட்கை கொண்டோம்.
காலந்தோறும் கற்றலின் வழியே பெற்றதாகக் கருதி உணரும் செல்வங்களை, ஆடலின் வழியே அடுத்த தலைமுறையினருக்கு அண்மைப்படுத்தும் பெரு விழைவின் நீட்சியாக, காலந்தோறும் நிற்கும் தமிழ் இலக்கியத் திரவியங்களை இயன்றளவு தொகுத்து நாட்டிய மார்க்கத்தில் உள்வாங்க முயன்றோம். இம்முயற்சிக்குப் பேரருளெனத் தேமதுரத் தமிழோசைக்கு இசையமுதளித்து அமர சுகம் தந்த ராஜ்குமார் பாரதி ஐயாவை வியந்து வணங்குகிறோம்.
பன்னெடுங்காலத்துப் பெருஞ் சொத்தினைப் பேணிப் பெறப் பேறு பெற்றோராய், மொழி கிளறிக் கிளைக்கும் இக் கலைப் படைப்பின் தரமறிந்து,தொல்காப்பியர் முதல் பாரதி தாசன் வரை என பதின்னான்கு தமிழ் புலவர்களை காலக்கிரமப் படி வரிசைப்படுத்தி அதனை நாட்டிய மார்க்கமாக வழங்கிய பெருஞ் செயலை ஏற்று அர்ப்பணிப்புடன் அரங்கேறினாள் நிர்ஷ்ராயா கஜன். தமிழ் அன்னை உட்பட இப்பதின்னான்கு தமிழ் அவதாரங்களுக்குமான தமிழ் சுடரேற்றி நிகழ்வு ஆரம்பமானது.
“வழிபடு தெய்வம் நிற்புறம் காப்ப” என தொல்காப்பியத்தில் உள்ள வாழ்த்தோடு ஆரம்பமாகி திருக்குறள் புஷ்பாஞ்சலி இடம்பெற்றது. தொடர்ந்து ” மதங்க ” தாளத்தில் தமிழின் உயிர் , மெய் எழுத்துக்களை இணைத்து அலாரிப்பு அமைக்கப்பட்டிருந்தது.
ஆடலும் பாடலும் அழகும் என்று இக்கூறிய மூன்றின் ஒன்று குறை படாமல், ஏழ் ஆண்டு இயற்றி, ஓர் ஈர் – ஆறு ஆண்டில் மாதவி அரங்கேறினாள் என சப்த தாள ஜதீஸ்வரத்தின் நிறைவில் குறிப்பிட்டு இளங்கோ அடிகளை நினைவேந்தினோம்
வர்ணத்தில் நான்காம் நூற்றாண்டின் காரைக்கால் அம்மையார் முதல், கோதை நாச்சியார், ஒவையார், கம்பர், உமாபதி சிவாச்சாரியார், கடவுள் மாமுனி,பரஞ்சோதி முனிவர், தாயுமானவர், வள்ளலார் என பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை சிட்டைப்படுத்தி, மிக நுட்பமாக கோர்த்தெடுத்து வழங்கி மகிழ்ந்தோம். இதன் ஜதிகளை மிகப் பொருத்தமாகவும் புத்தாக்கமாகவும் அமைத்து தந்தார் ராஜ்குமார் பாரதி ஐயா.
நிகழ்வின் முற்பகுதி பழமையான தமிழை காட்டி நிற்க , இரண்டாம் பகுதி நவீனத்துள் நுழைந்தது. சூரிய மண்டலம், வான் வெளி, நட்சத்திரங்கள், நிலவு,கோள்கள் என பாரதி வியந்த விண்வெளியை மண்ணுக்கு கொணர்ந்தோம். எண்ணமுணர்ந்து துணை நிற்க இந்தியாவில் இருந்து வருகை தந்தார் பிரபல ஒளியமைப்புக் கலைஞர் திரு வெங்கடேஷ் கிருஷ்ணன் அவர்கள்.
“செங்கதிர் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” அடுத்து பாரதி தாசனின் நூலைப்படி பாடல் இடம்பெற்றது. தமிழர்களாகிய நாமெல்லாம் சங்கத்தமிழ் நூல்களை படிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் முகமாக இந்நடனம் அமைந்தது.
நிறைவு நிகழ்வாக தில்லானா இடம்பெற்றது. துவி ராகத்தில் ஆதி தாளத்தில் இம்மை மறுமை தவமே தமிழே என தில்லானா அமைந்தன. வாய்ப்பாட்டு திருமதி வித்யா கல்யாணராமன், வயலின் திருமதி கி.பி நந்தினி, மிருதங்கம் திரு வேதகிருஷ்ணன் ஆகிய அணிசேர் கலைஞர்களும் இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்தனர்.
டாக்டர் ராஜ்குமார் பாரதி ஐயா முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பிக்க,பேராசிரியர் சி மௌனகுரு ஐயா, மறைமலையடிகளாரின் பெயர்த்தி கலைச்செல்வி அம்மா ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக சிறப்பிக்க அரங்கதிரும் கரவொலிகளைப் பரிசாகப் பெற்றோம். தமிழிற்கு இசை தந்து, அபிநயம் தந்து உயிர் தந்த இவ்வரங்கேற்ற நிகழ்வு தமிழின் பெருமையை உணர்த்தியதோடு இனிவருகின்ற தலைமுறையினருக்குள் தமிழார்வத்தை தூண்டுவதாகவும் அமைந்தது.
” மதங்கமொடு தமிழ் முழங்கவே ” மார்க்கத்தை உருப்பெறச் செய்து அரங்கேற்றப் பெருந்துணையாகி நின்ற நெருங்கியோர்க்கு அபிநயக்ஷேத்திராவின் மொழி தோற்கும் அன்புகளும் நன்றிகளும் சென்றடைக.
813 total views, 6 views today