உலகப் பொருளாதாரமே சீர்குலைந்தது!

ரஷ்ஷியா – உக்ரைன் போர் ஒரு வருடம் முடிவடைந்த நிலையில் (24.02.2022 – 24.02.2023)
வ.சிவராஜா – ஜேர்மனி;

ரஷ்ஷியா – உக்ரைன் நாடுகளுக்கிடையிலான போர் மூண்டு ஒரு வருடம் (24.02.2022 – 24.02.2023) நிறைவடைந்த நிலையில் மாபெரும் உயிரழிவுகளும், சொத்து, வீடுகள், பொருளாதாரம் கல்வி, சுகாதாரம் என அழிந்ததுடன் பொதுமக்களின் இயல்பு வாழ்வும் சீரழிந்திருக்கின்றன. கோடிக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந் திருப்பதுடன் பல கோடி சொத்துக்களும் அழிந்திருப்பதால் உலகப் பொருளாதாரமே பாதிப்படைந்து உலகில் பெரும் பொருளாதார இழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

2வது உலகப்போரின் பின் உலகின் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இப்போரானது முடிவு பெறாத யுத்தமாகவே இருந்து வருகின்றது. உலகப்போர் முடிவடைய 1949ம் ஆண்டு 12 நாடுகள் ஒன்றுகூடி தமது பாதுகாப்பைப் பலப்படுத்த நேட்டொ அமைப்பை உருவாக்கின. இன்று இந்த நாடுகளின் எண்ணிக்கை 30 நாடுகளாகக் காணப்பட இன்னும் சில நாடுகள் இந்த அமைப்பில் உரிமைபெற விண்ணப்பித்திருக்கின்றன. சீனா, ரஷ்ஷியா நாடுகளின் பலத்தை கட்டுப்படுத்தி குறைப்பதற்காகவே இந்த அமைப்பு செயற்பட்டு வருவதை அவதானிக்கின்றோம்.

நேட்டொ அமைப்போடு உக்ரைன் நாட்டைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்பதே ரஷ்ஷியாவின் நிலைப்பாடு. காரணம் உக்ரைன் போலந்து போன்ற அயல்நாடுகளில் நேட்டோ நாடுகளில் படைகள் மற்றும் ஏவுகளை, ஆயுதக்குவிப்பால் ரஷ்ஷியாவிற்கு ஆபத்து நேரிடலாம் என்பதே முக்கிய காரணமாகும். இதனால் முறுகல் ஏற்படவே இரு நாடுகளுக்குமிடையே 24.2.2022 அன்று போர் மூண்டது. இதனால் நேட்டோ நாடுகள் மற்றும் அமெரிக்காவின் ஆலோசனை, படைத்தரப்பு உதவிகள், ஆயுத உதவிகள், நிதி உதவிகள் கிடைக்கவே போர் உக்கிரமடைந்து மாபெரும் அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றது.

உக்ரைனில் ரஷ்ஷியப்படைகள் பல பிரதேசங்களைக் கைப்பற்றிப் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இதை எதிர்த்து ஐக்கியநாடுகள்சபை மற்றும் நேட்டொ அமைப்பு, ஆசிய, ஐரோப்பியநாடுகள் சில ரஷ்ஷியப்படைகள் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் எனக்கோரி வருகின்றன. ஆனால் ரஷ்ஷியப் படைகள் விலகவே இல்லை. இந்நிலையில் இருநாடுகளுக்குமிடையிலான போர் தொடர்கின்றது.

-பங்குனி – 2022 உக்ரைன் தலைநகர் கீவ் நகரைக் கைப்பற்ற ரஷ்ஷியப்படைகள் முடியாமல் உலகின் மிகப்பெரிய அணு மின் உற்பத்தி நிலையத்தைக் கைப்பற்றியுள்ளது.
சித்திரை – 2022 பதிலுக்கு ரஷ்ஷியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலை உக்ரைன் நாட்டுப்படைகள் மூழ்கடித்தன.
-வைகாசி – 2022 உக்ரையினின் மிகப்பெரும் நகரங்களில் ஒன்றான “மரியபோல்” நகரத்தை ரஷ்ஷியப்படைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.
-ஆனி – 2022 அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் பெருமளவு ஆயுதங்களை உக்ரையினுக்குக் கொடுத்து உதவின
-ஆவணி – 2022 ரஷ்ஷியாவால் பல வருடங்குளுக்கு முன்னர்(2014) ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியான கிரிமியாப் பகுதியில் ரஷ்ஷிய விமானத்தளத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. பதிலுக்கு ரஷ்ஷியாநாடு உக்ரையினின் மின் நிலையங்கள், குடிநீர் விநியோக நிலையங்கள் மீது தாக்குதல் நடாத்தியது.

-புரட்டாதி – 2022 ரஷ்ஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கார்க்கில் நகர சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் கைப்பற்றின.
-ஐப்பசி – 2022 கிறிமியா தீவையும் ரஷ்ஷியாவையும் இணைக்கும் பெரிய பாலம் ஒன்று லொறிக்குண்டு வெடிப்பில் தகர்க்கப்பட்டது. பதிலுக்கு ரஷ்ஷியா உக்ரைன் அணுமின் நிலையங்கள் மீது கடும் தாக்குதல்களை மேற்கொண்டது
-கார்த்திகை – 2022 அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் உதவியுடன் உக்ரைன் நடாத்திய தாக்குதலில் “கெர்சான்” மாநிலத்திலிருந்து ரஷ்ஷியப் படைகள் பின்வாங்கின

-மார்கழி – 2022 உக்ரைன் ஆளில்லாத போர் விமானங்களைப் பயன்படுத்தியதாக ரஷ்ஷியா குற்றம் சாட்டியது. உக்ரைன் அதிபர் அமெரிக்கா சென்று அமெரிக்க ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்.
-தை – 2023 உக்ரைன் நாட்டுப்படைகளின் ஏவுகணைத்தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட ரஷ்ஷியப் படையினர் கொல்லப்பட்டனர்.
-மாசி – 2023 அமெரிக்க ஜனாதிபதி திடீரென உக்ரையினுக்கு விஜயம் செய்தார். 50 கோடி டொலர் மதிப்புள்ள ஆயுத தளபாடங்களை உக்ரையினுக்கு வழங்குவதாக அறிவித்தார்.

பதிலடியாக உலக அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து ரஷ்ஷியா விலகுவதாக ரஷ்ஷிய ஜனாதிபதி அறிவித்தார்.
ஐரோப்பி யூனியன்நாடுகள், அமெரிக்கா, இன்னும் சில நாடுகளின் பேருதவியால்தான் உக்ரைன் கடந்த ஒருவருடமாகத் தாக்குப்பிடித்தது என்று கூறப்படுகின்றது. இந்த நாடுகளின் ஆயுதம், பணம், படை, பொருளாதார உதவிகள்தான் உக்ரைனுக்குப் பலத்தைச் சேர்த்துள்ளது.
ரஷ்ஷியா தனது அணு ஆயுத பலம் முழுவதையும் பாவித்தால் உலகமகா யுத்தமாக உருவெடுப்பதற்கும் காரணமாகிவிடலாம். இந்த நாடுகளுக்கு உக்ரைன்மீது அவ்வளவு பாசம் ஏன் என்ற கேள்வியும் உண்டு. ரஷ்ஷியாவை அடக்கி, கட்டுப்படுத்தி தமது பாதுகாப்பைப் பலப்படுத்திப் பாதுகாப்பதற்காகவே உக்ரையினை இந்த நாடுகள் பயன்படுத்துகின்றன என்ற பார்வையும் உண்டு.
தமது அயல்நாடுகளான போலந்து, உக்ரைன் போன்ற நாடுகளில் தமது படைகளையும் அணு ஆயுத போர்க்கருவிகளையும் கொண்டு வந்து குவித்து தமது நாட்டுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என ரஷ்ஷியா அஞ்சியே போரை விடாமல் தொடர்கின்றது.

இரு நாடுகளுக்குமிடையிலான ஓராண்டுப் போரால் சுமார் 2 கோடி உக்ரையின் நாட்டு மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். உள்நாட்டில் பல லட்சம்பேர் அகதி முகாம்களில். சுகாதாரம் பெரும் பாதிப்பு, பல்லாயிரம் குடியிருப்புகள் தரைமட்டம்., ஆயிரக்கணக்கான பாடசாலைகளும் வைத்தியசாலைகளும் அழிந்துள்ளன. மொத்தமாக அனைத்துக் கட்டுமானங்களும் சீர்குலைந்து, சீரழிந்தே காணப்படுகின்றன. சர்வதேசத்தின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விலை ஏற்றம், தட்டுப்பாடு, பாதுகாப்பு, எரிசக்தி, பொருளாதாரம் உள்ளிட்ட பல விடயங்களில் பல மாறுதல்களும் சுமைகளும் உலக மக்கள்மீது வந்து சேர்ந்துள்ளன. இந்தப் போர் தொடருமானால் இன்னும் பல விளைவுகளை உலகம் சந்திக்கும் என்பதே நிஜமாகும். ஆகவே மேற்குலக நாடுகள், நேட்டொ நாடுகள், அமெரிக்கா, ரஷ்ஷியா, சீனா போன்ற நாடுகள், ஐக்கியநாடுகள் சபை என்பன விரைவாக ஒரு தீர்வை எட்டவேண்டும். இதையே உலகப் பொதுமக்கள் இன்று எதிர்பார்க்கும் ஜதார்த்தமாகும்.
இருதரப்பினரின் அழிவுகள்..

  • படையினரின் இழப்பு – 1.60.000 படையினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
  • விமானங்கள் இழப்பு – 304
  • உலங்குவானூர்திகள் இழப்பு – 304
  • யுத்ததாங்கிகள் இழப்பு – 281
  • போர் விமானங்கள் இழப்பு – 6.770
  • ஆட்டிலறிகள் இழப்பு – 2.500
  • யுத்த தாங்கிகள் – 5.342
  • போர் கவச வாகனங்கள் – 493
  • போர்க்கப்பல்கள் – 18
  • ரோந்துப் படகுகள் – 2.100
    -இந்தப் போரால் ஓராண்டில் இறந்த பொதுமக்கள் – சுமார் 25.000 பேர்
    சிறுவர்கள் – ” 2.000 பேர்
    காயமடைந்தவர்கள் – ” 30.000 பேர்
    காயமடைந்த சிறுவர்கள் – ” 4.000 பேர்
    -இந்தப் போரால் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தோர் 1.97 கோடி உக்ரையின் மக்களாவர். மிக அதிகமானோர் பின்வரும் நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
    போலந்தில் – 97 லட்சம் பேர் – ரஷ்ஷியாவில் – 28 லட்சம் பேர்
    கங்கேரியில் – 22 ” – ருமேனியாவில் – 20 “
    ஸ்லாவாக்கியாவில் – 12 ” – மல்டொவாவில் – 8 “
    ஏனைய நாடுகளில் – 5 “

1,374 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *