ஒரு கண் ஒரு கோடி வண்ணங்கள்
(நம் உடல் ஒரு அதிசயம்!)
Dr.நிரோஷன் தில்லைநாதன் ஜெர்மனி
நம் உடல் உண்மையிலேயே ஒரு அற்புதமான எந்திரமாகும். அது பல்லாயிரம் கோடிக் கணக்கான உயிரணுக்களால் ஆனது. நமது எலும்புகள் மற்றும் தசைகள் முதல் நமது உறுப்புகள் மற்றும் திசுக்கள் வரை, நமது உடலின் ஒவ்வொரு பகுதியும் நம்மைச் சிறப்பாக செயல்பட வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தக் கட்டுரையில் நம் உடலைப் பற்றி நீங்கள் இன்று வரை அறிந்திராத சில ஆச்சரியமான உண்மைகளைப் பற்றி அறியத்தருகிறேன் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
மூளையில் உள்ள பால்வெளி மண்டலம்
இந்த வரிசையில் முதல் இடத்தைப் பெறுவது நமது மூளை ஆகும். மனித மூளை ஒரு நம்ப முடியாத சிக்கலான உறுப்பு ஆகும், இதில் கோடிக்கணக்கான நரம்பணுக்கள் (nuerons) உள்ளன. இந்த நரம்பணுக்கள் நரம்பிணைப்புக்களால் (synapses) இணைக்கப்பட்டுள்ளன. ஆச்சரியப்படும் விதமாக, பால்வெளி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை விட மனித மூளையில் உள்ள நரம்பிணைப்புக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது!
உடலில் மிகப்பெரிய உறுப்பு
பெரும்பாலான மக்கள் தங்கள் தோலை ஒரு உறுப்பு என்று கருதுவதில்லை. தோல் சும்மா தோல் தான் என்று நினைப்பர். ஆனால் உண்மையில் நமது தோல் தான் மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு என்று சொன்னால் நம்புவீர்களா? இது தோராயமாக 1,9 சதுர மீட்டர் பரப்பளவையும் மற்றும் சுமார் 2,7 கிலோ கிராம் எடையும் கொண்டதாகும். வெளி உலகத்திலிருந்து நமது உடலைப் பாதுகாப்பது அதன் முதன்மைப் பணியாகும், ஆனால் இது நமது உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும், தொடுதல், அழுத்தம் மற்றும் வெப்பநிலையை உணரவும் உதவுகிறது.
எலும்பு உருக்கை விட வலிமையானதா?
நம்பினாலும் நம்பாவிட்டாலும் நம் எலும்புகள் உருக்கை (steel) விட வலிமையானதாகும். நம் எலும்புகள் ஆச்சரியமூட்டும் அளவிற்கு அழுத்தம் தாங்கக்கூடிய தன்மையைக் கொண்டன. இதைச் சற்று புரியும்படி சொல்லவேண்டும் என்றால் இதைப் பாருங்கள். ஒரு துண்டு மரக்கட்டையை எடுத்து அதன் மேல் 224 கிலோ கிராம் அழுத்தத்தைச் செலுத்தினால் அது முறியும். அதே அளவில் உள்ள ஒரு உருக்குக் குழாயை முறிக்க வேண்டுமென்றால் சுமார் 255 கிலோ கிராம் அழுத்தத்தைச் செலுத்தவேண்டும். ஆனால், இதை ஒப்பிடக்கூடிய தடிமன் கொண்ட எலும்பொன்றை உடைக்கவேண்டும் என்றால் 624 கிலோ கிராம் அழுத்தத்தைச் செலுத்தினால் மட்டுமே அதனை முறிக்க முடியும். இது ஆச்சரியமாக இல்லையா?
100.000 தடவை லப் டப் லப் டப்
இதயம் நம் உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இது இரத்தத்தை செலுத்துவதற்கும் பிராணவாயு மற்றும் ஊட்டச்சத்துக்களை நமது உயிரணுக்களுக்கு வழங்குவதற்கும் பொறுப்பாகும். சராசரியாக ஒரு நாளில், மனித இதயம் 100,000 தடவைகளுக்கு மேல் துடிக்கிறது. சுமார் 7.570 லிட்டர் இரத்தத்தை நம் உடலில் செலுத்துகிறது.
நுரையீரலில் விளையாடும் டென்னிஸ்
நமது உடலுக்குள் பிராணவாயு கொண்டு வருவதற்கும் கரியமிலவாயுவை அகற்றுவதற்கும் நமது நுரையீரல் பொறுப்பு. என்னதான் நம் நுரையீரல் பார்க்கச் சிறிதாக இருந்தாலும், அது நம்பமுடியாத அளவிற்கு வேலைகளைச் செய்துவருகிறது. ஒரு நாளைக்கு சுமார் 7,600 லிட்டர் காற்றைச் செயலாக்கும் திறன் கொண்டதாகும். இதில் உள்ள ஆச்சரியம் என்னவென்றால், நம் நுரையீரலை எடுத்து இழுத்து விரித்தால் அதன் பரப்பளவு ஒரு டென்னிஸ் மைதானத்தின் அளவாக இருக்கும்!
ஒரு கண் ஒரு கோடி வண்ணங்கள்
நம் கண்கள் நம்பமுடியாத அளவுக்கு உணர்திறன் கொண்ட ஒரு உறுப்பாகும். குறிப்பாக ஒளி மற்றும் நிறத்தில் உள்ள சிறிய மாறுபாடுகளைக் கூட கண்டறியும் சக்தியைக் கொண்டதாகும். உண்மையில், நம் கண்கள் 1 கோடி வெவ்வேறு வண்ணங்களை வேறுபடுத்தி காணுமாம். இது ஆச்சரியமாக இல்லையா?
எங்கள் உடல் உண்மையிலேயே அற்புதமான எந்திரம் தான். நம்பமுடியாத சாதனைகள் மற்றும் செயல்பாடுகளை நமக்குத் தெரியாமலே செய்து வருகிறது. என்ன நண்பர்களே நமது உடலின் இந்த அதிசய விஷயங்களை நீங்கள் முன்பே அறிந்தீர்களா?
1,225 total views, 9 views today